Sunday, 15 December 2019

ஹானூஷ் – நாடக பதிவு



மாதமொருமுறை கடைசி வியாழன் பின்னேரம் இரவு 09:30 மணிக்கு அகில இந்திய வானொலியில் அகில பாரத நாடகம் ஒலிபரப்பாகும். தேசிய அளவில் சிறந்த நாடகங்களை தேர்ந்தெடுத்து ஹிந்தி மொழியாக்கம் செய்து பின்னர் அதிலிருந்து எல்லா மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து நாடு முழுக்க ஒலிபரப்புவர்,


நான் அகில பாரத நாடகம் கேட்டு எத்தனையோ ஆண்டுகளாகி விட்டது.

கடந்த வியாழனன்று ( 28/03/2019 ) சென்னை வானொலியின் நிகழ்ச்சி நிரலை கேட்டுக் கொண்டிருந்தபோது அகில பாரத நாடகம் குறித்த அறிவிப்பும் வந்தது. கூடவே பீஷம் ஸாஹ்னியின் பெயரும் ஒலித்தது.



நாட்டுப்பிரிவினையின் குறுக்கு வெட்டு தோற்றத்தை காட்சிப்படுத்திய ' தமஸ்( இருள் ) ' தொடர் புகழ் ஹிந்தி எழுத்தாளர் மறைந்த பீஷம் ஸாஹ்னி. தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகிய புகழ் பெற்ற தொடர். வலையொளியிலும் காணக் கிடைக்கின்றது.

 பல கதைகளையும் நாடகங்களையும் எழுதி இயக்கிய பீஷம் ஷாஹ்னி பாக்கிஸ்தானின் ராவல்பிண்டியில் பிறந்து நாட்டுப்பிரிவினைக்கு பின்னர் இந்தியாவில் குடியேறி புதுதில்லியில் காலமானார் ( 1915 – 2003 )

அவர் எழுதிய  சிறுகதையான  ' ஹானூஷ்' ஐ நாடக வடிவமாக்கி ஒலிபரப்பினார்கள்.

இதுதான் கதை:

தலைமுறை பூட்டுக் கலைஞன் ஹானூஷ் , தனது வீட்டில் பதினைந்து வருடங்களாக நிலைக்கடிகாரம் ஒன்றை செய்கின்றான். ஆனாலும் கடிகாரம் முழுமையடைந்தபாடில்லை. இந்த தொடர் முயற்சியின் விளைவாக தனது சொந்த தொழிலான பூட்டு உண்டாக்குதலையும் விட்டு விட்டான். இதனால் வீட்டில் கடும் வறுமை. மனைவியும், ஒரே ஒரு மகளான யங்காவும் அவனுடன் வாழ்ந்து வந்தனர்.

மனைவியின் சுடுசொல் பொறுக்காமல் மீண்டும் பூட்டுத் தொழிலை தொடங்கினான். அந்த சமயத்தில் நகர் மன்ற அவையிலிருந்து கடிகாரம் செய்வதற்கான உதவித்தொகை கிடைக்கின்றது. புதிய உற்சாகத்திலும் குடும்பத்தின் ஒத்துழைப்பாலும்  கடிகாரம் முழுமையடைந்து விடுகின்றது. சிறையிலிருந்து மீண்ட ஜேக்கப் என்பவன் கடிகாரப்பணியில் ஹானூஷிற்கு ஒத்துழைப்பாக ஹானூஷின் வீட்டிலேயே தங்கி விடுகின்றான். யங்காவிற்கும் ஜேக்கப்பிற்கும் உறவாகி மணந்து கொள்கின்றனர்.

நகர் மன்றத்திற்கு அரசர்  வருகை தரும்போது புதிய கடிகாரத்தின் திறப்பு விழாவை வைக்கலாம் என முடிவாகின்றது. அரசரும் வருகின்றார். ஹானூஷை பாராட்டுகின்றார். மாதாமாதம் உதவித்தொகையும்  அறிவிக்கின்றார். திடீரென எனது இசைவில்லாமல் எப்படி கடிகாரம் செய்யலாம்? தொடர்ச்சியாக இந்த கடிகாரத்தொழிலை மேற்கொண்டால் எனது நாட்டின் முதல் கடிகாரம், ஒரே ஒரு கடிகாரம் என்ற பெருமை போய் விடுமே ? என அய்யங்களையும் கேள்விகளையும் கடினமாக எழுப்புகின்றார் அரசர். முடிவில் கலைஞன் ஹானூஷின் கண்களை பறித்துவிடுகின்றார்.

குருடனான ஹானூஷிற்கு கடிகாரத்தின் டிக் டிக் ஓசை பெரும் துயரை அளிப்பதாகவுள்ளது. கடிகரத்தை நோக்கி கல்லெறிகின்றான். ஒரு நாள் அரசனின் தேருக்கு முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயற்சிக்கின்றான்.
திடீரென ஒரு நாள் கடிகாரத்தின் ஓசை நின்றுவிடுகின்றது. அதன் மௌனமும் ஹானூஷை அலைக்கழிக்கின்றது. அவன் செய்த கடிகாரமே அவனுக்கு வாழ்வாகவும் வதையாகவும் ஒரே நேரத்தில் தோன்றுகின்றது.

பக்கத்து நாட்டிலிருந்து வணிகனொருவன் வந்து யூதர்களின் விடுதியில் தங்குகின்றான். அவனின் உதவியினால் அண்டை நாட்டிற்கு தப்பிச் சென்று அங்கு கடிகாரம் செய்து பிழைக்கலாம் என்ற எண்ணத்தில் ஹானூஷின் மருமகன் ஜேக்கப் அந்த வணிகனை சந்திக்க போகின்றான்.

கடிகாரத்தை பழுது நீக்குவதற்கு உடன் வருமாறு  அரசின் ஏவலர்கள், ஹானூஷின் வீட்டிற்கு வந்து வற்புறுத்துகின்றனர். ஹானூஷோ, “ பார்வையற்ற நான் என்ன செய்ய இயலும் ?”  என மறுக்கின்றான். “ மருமகன் ஜேக்கப்பை உதவிக்கு வைத்துக் கொள்”  என்கின்றனர். ஆனால் வணிகனை தேடிப்போன மருமகன் வீட்டிற்கு திரும்பவில்லை. வேறு வழியின்றி ஹானூஷை இழுத்து செல்லும் காவலர்கள், ஜேக்கப்பையும் தீவிரமாக தேடுகின்றனர்.

அரசனை பழிவாங்குவதற்கு இதுதான் தக்க வாய்ப்பு எனக் கருதும் ஹானூஷ், கடிகாரத்தை சுத்தியலால் தகர்க்க எண்ணுகின்றான். ஆனால் அகக் குரல் அவனை திருத்துகின்றது.  கடிகாரம் மீண்டும் இயங்குகின்றது.
 கடிகாரத்தை ஹானூஷ் செம்மையாக்கியதை அறிய வரும் காவலர்கள் அதை கண்டு கொள்ளாமல் , ஹானூஷின் மருமகன் ஜேக்கப், அண்டை நாட்டு வணிகனுடன் தப்பி போய் விட்ட செய்தியை குற்றச்சாட்டாக ஹானூஷ் மீது சுமத்துகின்றனர். அவனை அரசவைக்கு இழுத்து செல்கின்றனர். ஹானூஷின் குடும்பம் பதறுகின்றது.

ஆனால் கலைஞன் ஹானூஷோ நகைத்தபடியே, “ஜேக்கப்பாவது கடிகாரம் செய்யும் கலையோடு தப்பித்து விட்டானே” எனக் கூறுகின்றான்.


தற்கால நாட்டின் அரசியல் சூழலுக்கு பொருத்தமான நாடகத்தை தந்த அகில இந்திய வானொலிக்கு நன்றிகள் !!!



No comments:

Post a Comment