“ நானும் இருக்கின்றேன் இறைவனும் இருக்கின்றான்.
இரண்டு இருப்பும் ஒன்றாகுமா ? அவன் என்றென்றும் இருப்பவன். ஆனால் நானோ இருக்கிறேன்
என்ற சொல்லை சொல்லி முடிப்பதற்குள் இல்லாமல் போய் விடுவதற்கான எல்லா சாத்தியங்களையும்
கொண்டவன்.
மனிதனின் உள்ளமை என்பது தற்காலிகமானது. ஆனால் இறைவனின்
உள்ளமை என்பதோ என்றென்றும் நீடித்திருக்கக் கூடியது நிரந்தரமானது.”
--- 25 வருடங்களுக்கு முன் கேட்ட காலஞ்சென்ற அறிஞர்
பி.எஸ். அலாவுத்தீன் மன்பஈ அவர்களின் உரையின் துளிகள்.
தணியாத தீவிரத்துடன் கூடிய அலாவுத்தீன் அவர்களின்
குரலின் ஓரத்தின் லேசான கமறல் ஒட்டியிருக்கும். இயல்பான நல்ல தமிழிலான அந்த குரல் காலாதீதத்தில்
இருந்து மிக சன்னமாக ஒலிக்கும்போது கண்களின் வழியாக மனம் நிறைந்து வழியும்.
காலத்தின் கனத்த கோட்டைச்சுவர்களுக்குள் வாசமிருக்கும்
எனது நெருக்கமான உறவினர்கள் நண்பர்களின் நினைவுகள்.
அவர்களை விட்டும் பிரிந்து தனித்தலையும் அவர்களின்
சொற்கள் என்பன நம் நினைவுகளின் தேக்கத்திலிருந்து நமது புலன்களுக்குக்குள் மிகவும்
அந்தரங்கமாய் மீட்டப்படும் தருணத்தில் உண்டாகும் வலியை தாங்க முடிவதில்லை.
சிறு ஓசை கூட இல்லாமல் ரகசிய உறையிலிருந்து உருவப்பட்டு
எறியப்படும் ஈட்டிகள் அவை ஈட்டிகள் பழையதாக இருக்கலாம் ஆனால் அவை .நம் அகத்தினுள் ஒவ்வொரு
முறையும் புதியதாகத்தான் பாய்ந்து தைக்கின்றன.
நிரந்தரமின்மைதான் வாழ்வின் ஒளியும் இருளும் கூட.
நிறமும் நிறமின்மையும் கூட.
‘ வந்தவை அனைத்தும் திரும்பிச்சென்றுதானே ஆக வேண்டும்
‘ என்பது உலக நியதியின் தவிர்க்க முடியாத தர்க்கம்தான்.
அது அப்பட்டமான உண்மையாக இருந்தாலும் கூட அந்த விதியானது
அவரவரின் முன்னர் எந்த சமரசத்திற்கும் இடங்கொடுக்காமல் வந்து நிற்கும்போது அதை தாங்கக்கூடிய
வலிமையற்றுத்தானே போகின்றோம்.
‘ இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்… ‘
( நகுலன் )
நிரந்தரமின்மையின் நிரந்தரம் குறித்து அலாவுத்தீனுக்கும்
நகுலனுக்கும் இரு வேறு கருத்துக்களா இருக்க முடியும் ?
No comments:
Post a Comment