Sunday, 17 November 2019

வர வேண்டியது வந்து விட்டது.



அதன் சின்னஞ்சிறு தொண்டை நாளங்களிலிருந்து மெல்ல அதிர்ந்து புறப்படும் க்கியவ் க்கியவ் ஓசையினால் தோட்டத்தின் இலை கொடிகள் நனைந்து பின்னர் அது கசிந்து எனது அறைக்குள் வந்து அங்கிருந்து அது வழிந்து வீடு மொத்தத்தையும் நிறைக்கின்றது.

குளத்தின் நடுவில் விழுந்த சிறு கல் போல ஆழ் மனதில் விழுந்த சொல் போல தனது ஒற்றை ஓசையால் மொத்த சூழலையும் நடனமிட வைக்கின்றது அந்த சிட்டு.

முதலில் மண் இருந்தது. அதற்குள் விதை விழுந்தது. நீரும் காற்றும் கதிரொளியும் தங்கள் ஈவுகளை வழங்கின .


முதலில் மண்ணை அது அறுத்தது. பின்னர் காற்றை அசைத்தது. பின்னர் வளரிளம் பெண்ணிற்குரிய நாணத்துடன் அது தலை கவிழ்ந்து நிமிர்ந்தது.

ஆறு மாதங்களில் தோட்டத்தின் முக்கால் வாசிக்கு பசும்போர்வையாக மாறி நிற்கிறது விதை.

வெள்ளரி,பாகற்காய்,வெண்டைக்காய்,சுரைக்காய்,
கீரைகள் என தனது களஞ்சியத்திலிருந்து அவ்வப்போது வழங்கிக் கொண்டே இருக்கின்றது.

இன்று காலை தோட்டத்தில் வந்தமர்ந்த சிட்டு நேற்று மாலையும் வந்தது. காலையில் பறந்து சென்றது மீண்டும் செடிகளுக்குள் சென்று மறைந்து கொண்டு க்கியவ் க்கியவ் ஒலியை தோட்டத்திலும் வீட்டிலும் மனதிலும் வாரி இறைத்துக் கொண்டே இருக்கின்றது

No comments:

Post a Comment