Sunday, 17 November 2019

நத்தையும் தோட்டமும்







சில மாதங்களுக்கு முன்னர் நடப்பட்ட மரங்களின் தற்போதைய நிலையை அறிந்து வர பள்ளிக்கூடம் ஒன்றிற்கு சென்று வந்தோம். அவற்றில் கிட்டத்தட்ட இருபது வரை துளிர்த்து வளர்ந்து பல்வேறு உயரங்களில் நிற்கின்றன. அல்ஹம்துலில்லாஹ் !

மீதமுள்ள மரங்கள் ஏன் துளிர்க்கவில்லை ? என பராமரிப்பாளரிடம் கேட்டதற்கு அவை தாமதமாகத்தான் துளிர்க்கும் என்றார்.


. மண்ணிற்கும் அந்த கன்றின் வேர்களுக்குமான உரையாடல் இன்னும் தீர்ந்திருக்காதோ ? நிலம் நீர் கதிரொளி காற்று இவற்றிற்கிடையே இன்னும் ஒப்பந்தம் எட்டப்படவில்லையா ? நல்ல முகூர்த்தம் பார்க்கும் பழக்கம் இவற்றிற்கும் இருக்குமோ ? வித்துக்களை வெடித்து பிளக்கச்செய்யும் பிரபஞ்சத்தின் மூல ஆற்றலிலிருந்து இவைகளுக்கான உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படவில்லையா ? மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் சத்துக்கள் இலைகளாக மாற்றப்படும் ரசவாத வித்தை இன்னும் எதற்காக காத்திருக்கிறது ?

மரங்களைப் பார்த்து வரும் கையோடு நத்தைகளை கொஞ்சம் பொறுக்கி என் வீட்டு தோட்டத்தில் விடலாம் என என் மகனை கையோடு அழைத்து சென்றேன்.

கையில் கிடைத்த நத்தை ஓடுகள் அனைத்துமே இறந்தவை. மழை பெய்து ஓரிரு நாட்கள் வரை நத்தை உயிர் கொண்டு உலாவுமாம். பின்னர் சுள்ளென உறைக்கும் வெயிலில் இறந்து விடுமாம்.

இறந்த நத்தைகளின் ஓடுகளை சேகரித்து தோட்டத்தில் தூவினோம். என்றாவது ஒரு நாள் விண்ணிலிருந்து இறங்கும் ஏதாவது ஒரு மழைத்துளிக்குள் நத்தையின் உயிர் ஒளித்திருக்காதா என்ன ?

No comments:

Post a Comment