ஜார் வேந்தனை அங்கீகரிக்கிறாயா ? என கேட்கிறார்கள்,
‘ ஏன் அங்கீகரிக்கவில்லை ? அவர் அவரது ஜார் வேந்தன், நான் எனது ஜார் வேந்தன் ‘ என்கிறேன்.
.--- { லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு நாவல், முன்னேற்றப்பதிப்பகம் , மாஸ்கோ }.
ஒரு படகு பயணத்தில் நெஹ்லூதவ் என்ற கனவானுக்கும் உடன் பயணியான நாடோடிக்கிழவருக்கும் நடந்த உரையாடலில் கிழவர் கூறியவைதான் மேற்கண்ட வரிகள்.
:ஒரு நிலப்பிரபுவின் குற்றத்திற்கும் மனசாட்சிக்கும் இடையே நடக்கும் நெடிய போராட்டம்தான் இந்த நாவலின் மையக்கரு.
நாவலில் இடம்பெறும் எல்லா பாத்திரங்களின் மனமாகவே உருக்கொள்கின்றது தல்ஸ்தோயின் எழுத்து.. இதன் மீது 117 ஆண்டுகள் நடந்து சென்றிருக்கின்றது
நம்பிக்கை அவ நம்பிக்கை நிராகரிப்பு வஞ்சகம் கொடுங்கோன்மை கைவிடப்படல் ஒழுக்கமின்மை போன்ற எதிர்மறை பண்புகளின் தடாகத்திலிருந்து அருந்தி தன்னைத் தானே மண்ணிலிருந்து விடுவித்துக் கொண்டு மலரும் அறத்தின் பயணம்.
இந்த தார்மீகத்தைக் கொண்டுதான் தன் மீது காலத்தின் பழுப்பேற விடாமல் தடுக்கின்றது இந்த நாவல் .
கதா பாத்திரங்களின் எல்லா ரசங்களுடனும் நம் முன் விரியும் பெருங்களம் புத்துயிர்ப்பு நாவல்..
மனதின் கூர் நுண்மைகளின் சித்திரமாக இது விளங்குவதாலேயே, மஹாத்மா காந்திக்கான பாதை விளக்காகவும் ஒளிர்கிறது.
சோவியத் ஒன்றியத்தில அச்சிடப்பட்டு 38 ஆண்டுகள் கழிந்த பிறகும் நீடித்திருக்கும் இந்த நூலின் தாளும் நூல் கட்டுமாக தரம் அபாரம்.
இந்த நாவல் அன்பிற்குரிய எழுத்தாளர் களந்தை பீர் முஹம்மது அண்ணனிடமிருந்து இரவலாக பெறப்பட்டது.. அவரின் நூல் களஞ்சியத்திலிருந்து கடன் வாங்கப்படுவதற்காக இன்னும் ஏராளமானவை காத்திருக்கின்றன.
No comments:
Post a Comment