Sunday 24 November 2019

இயக்குனர் லெனின்பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை





ஏய் விடுங்கடா நான் தூக்கறன்டா ......

சும்மான்னா வேணாம் யா.......

இது ஒங்கப்பன்ட காசுடா.....

சீனி போதுமா ?......

------------
மேற்கண்ட நான்கு சொற்கட்டுக்களில் மனித ஆன்மாவின் உன்னத தருணங்களை கடைக்கால்களாக்கி தனது படைப்பை மேரு போல அதன் மீது ஏற்றி நிறுத்தியிருக்கின்றார் லெனின் பாரதி.

ஒப்பனைகள் எதுவும் தேவைப்படாத அளவிற்கு படம் முழுக்க தனது தன்னழகில் நடக்கின்றது மனித வாழ்க்கை. ஒத்திசைந்த அலைவரிசையில் ஆன்மாக்களின் அனிச்சை நடனம்.


கண்ணிகளுக்குள் கோர்க்கப்பட்ட சங்கிலி போல மேற்கு தொடர்ச்சி மலையின் சாமானிய மனிதர்கள் ஒவ்வொருத்தரின் வாழ்க்கையும் யாரும் யாரை விட்டும் நழுவி விடாதபடிக்கு தனது ஈரங்கசியும் உள்ளங்கை பற்றுதலோடு கோர்த்துக் கொண்டு நிற்கின்றது.

தித்திக்கும் உதடுகளுக்கிடையே கள்ள தந்திரங்களை பொதிந்து வரும் விதை உர வணிகனும் காவல்துறையின் இரும்புக்கரங்களோடு நடக்கும் எஸ்டேட் முதலாளிகளினதும் இருள் நச நசக்கும் உலகும் தனது பங்கிற்கு குறைவின்றி முழு அம்மணத்துடன் நிற்கின்றது.

காற்றாலைகளின் கனத்த அலகுகள் வெட்டுக்கத்தி போல நிலத்தை தாய் மடியை ஒவ்வொரு கணமும் பிளக்க தாயின் சிதைக்கு தீ மூட்டி நிற்கும் தலைப்பிள்ளை போல அவளின் மகனை தனது சொந்த நிலத்திலேயே கங்காணியாக சிப்பந்தியாக நிறுத்துகிறது வளர்ச்சி தேவதை.

-----------------------------

மேற்கு தொடர்ச்சி மலை முன்னுரை என்றால் அதன் பொழிப்புரையாக கேரளத்தின் நீர் பேரிடர். வளர்ச்சியின் பேயாட்டம் முதலில் சாமானியரையும் இறுதியில் கள்ள மௌனம் காக்கும் அனைத்து மனிதர்களையும் காவு கொண்ட பிறகே ஓயும்.

------------------------
படத்தை பார்த்த பின் முக நூல் பக்கத்தில் ஒரு தகவல் கீற்றுகின்றது:

சேலம் பசுமைவழிசாலைக்கெதிரான போராளிகள் காவல்துறையினரால் சிறைபிடிப்பு

No comments:

Post a Comment