காஞ்சங்காட்டிலிருந்து அன்றிரவு கோழிக்கோடு வந்தடைந்தோம். அங்குள்ள இஸ்லாமியக் கல்லூரியொன்றில் இரவு தங்கல். அதன் ஆய்வு மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடலும் நடந்தது. கோழிக்கோட்டின் அலைச்சலும் அயர்வும் மிக்க மறு நாள் பகலிலிருந்து கிடைத்த ஓய்வென்பது கோட்டயத்திற்கான தொடர்வண்டியில் ஏறிய பிறகுதான்.
சாலிஹ் பணி நிமித்தம் ஊர் செல்ல வேண்டியிருந்ததால் கொல்லம்
வழியாக ஊருக்குத் திரும்பினார். நானும் அன்சாரும் கோட்டயத்தில் பின்னிரவு நான்கரை மணிவாக்கில்
இறங்கினோம். நல்ல மழை. கிழக்கு வெளுத்த பிறகே வண்டியேறும்படி ஜிபின் தெரிவித்திருந்தார்.
கோழிக்கோடு நவ்ஷாத் மூலமாகவே ஜிபின் அறிமுகம்.நாங்கள் போகவிருக்கும்
இடத்திற்கு ஜிபினின் உதவியின்றி போவது கடினம் என நவ்ஷாத் தெரிவித்திருந்தபடியால் பயணத்தை
திட்டமிட்டே அன்றே ஜிபினிடமும் பேசி விட்டோம்.
இரண்டு மணி நேர அவகாசமிருந்ததால் சுபஹ் தொழுகையுடன் குளியலையும் நிறைவேற்றிக் கொள்வதற்காக தொடர்வண்டி
நிலையத்தின் அருகிலுள்ள பள்ளிவாயிலுக்கு விரைந்தோம்.மழை தூறலுக்கு மாறியிருந்தது. அப்பரந்த
பள்ளியில் இமாமுடன் நாங்களிருவரும் எங்களைப்போல பயணி ஒருவரும் இணைந்து கொள்ள மீதமுள்ள
வெளி அஸ்ஸாமைச் சார்ந்த அந்த இமாமின் இனிய ஓதலால் நிறைந்தது.
கோட்டயம் கிறித்தவர்கள் கணிசமாக வாழும் நிலம் என்பதைப்போலவே
நல்ல கேக்குகளின் நாடும் கூட.2019 இல் வைக்கம் முஹம்மதுபஷீரின் பிறந்தகத்தைப் பார்ப்பதற்கு
நானும் ஞானக்குழந்தை ஆசிர் முஹம்மதுவும் வந்த பிறகு மீண்டும் இப்போதுதான் வருகை.அப்போது
ஒரு கடையில் நல்ல சுவையான பழக் கேக் வாங்கி சுவைத்தோம். அந்த இடமும் தலமும் நினைவிலில்லை.
இப்பள்ளிக்கு ஜமாஅத் உண்டா? எனக் கேட்டதற்கு அருகிலுள்ள
முஸ்லிம் கடைக்காரர்களின் அனுசரணையிலேயே பள்ளிவாயில் பராமரிக்கப்படுகிறது என்றார் இமாம்.
அஸ்ஸாமியராக இருந்தாலும் மலையாளம் தெளிவாகப் பேசினார்.நாங்கள் குளிப்பதற்காக தனது அறையிலிருந்த
வாளி,குவளையைத் தந்துதவினார்.
மழையின் இதமும் குளியலின் உற்சாகமும் தேநீருக்காக கடையைத்
தேட வைத்தது. ஆறு மணிக்கெல்லாம் யாரும் இங்கு கடை திறப்பதில்லை என்றார்கள்.நேரே பேருந்து
நிலையம் ஏகினோம்.அங்கே தலச்சேரி காக்கா ஒருவர் காசு மேடையில் தலையில் துணியிட்டு நறுமணக்குச்சி
கொளுத்தி குர்ஆன் ஓதிக் கொண்டிருக்கிறார். நாங்கள்தான் முதல் வாடிக்கையாளர் போல. தேநீரைத்
தொடர்ந்து உளுந்து வடை வந்து சேர்ந்தது.இனி காடு மலையேற போதுமான எரிபொருள் நிரம்ப பேருந்தில்
முண்டக்கயம் சென்றோம்.ஒன்றரை மணி நேர ஓட்டம்.
முண்டக்கயத்தில் ஜிபின் எங்களோடு இணைந்துக் கொள்வதாகத்
திட்டம்.அவர் வரும் முன்னரே நாங்கள் அங்கு போய் சேர்ந்து விட்டதால் காலை பசியாறை முடித்த கொஞ்ச
நேரத்தில் அவரும் வந்திணைந்துக் கொண்டார்.அவருடன் சாஜூ என்ற கண்ணனூர்க்காரரும் வந்திருந்தார்.
ஜிபின் குருத்துவ பயிற்சியிலிருந்து இடை நின்றவர்.சமூக
வாழ்க்கைக்காக மண வாழ்வை தள்ளிப்போட்டவர்.அஞ்சப்பம் என்ற சமுதாய உணவுக் கூடத்தில் அவருக்கு
பொறுப்பாளர் பணி.அங்கு உணவருந்த வந்த இடத்தில்தான் சாஜுவும் ஜிபினும் நண்பர்களாகியிருக்கின்றனர்.
ரோமன் கத்தோலிக்கப் பிரிவின் கப்புச்சின் அவையைச் சார்ந்த
அருட்தந்தை போபி ஜோஸ் கட்டிக்காட்டின் முன்னெடுப்பில் 2016 முதல் நடந்து வரும் சமூக அடுக்களைதான் ‘அஞ்சப்பம்’.
"ஆனால் எங்களிடம் அய்ந்து அப்பங்களுடன் இரண்டு மீன்கள் மட்டுமே உள்ளன!" என அவர்கள் விடையிறுத்தனர். "அவற்றை இங்கே கொண்டு வாருங்கள்" என அவர் கூறினார். பின்னர் அவர் மக்களை புல்லில் அமரச் சொன்னார். அய்ந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை நோக்கிப் பார்த்தவாறே இயேசு அவற்றை ஆசீர்வதித்தார். பின்னர் அப்பங்களைத் துண்டுகளாகப் பிட்டு, சீடர்களிடம் கொடுத்தார், அவர்கள் அதை மக்களுக்குப் பரிமாறினர்.” மத்தேயு 14:17-19.
இப்றாஹீமிய செமித்திக் நெறிகளில் ‘ஆசீர்வாதம்’, ‘பறக்கத்’
எனப்படும் இது போன்ற அற்புதங்களை தீர்க்கதரிசிகளின்
வாழ்வில் நிறையக் காண இயலும்.
தனது ஏராளமான தோழர்களுக்கு அருந்தக் கொடுத்த ஒரு குவளை
ஆட்டுப்பால், போரில் கொல்லப்பட்ட தோழரின் கடன்களை
தீர்க்கும் விதத்தில் நிறுத்துக் கொடுத்த
பிறகும் அளவில் குறையாத பேரீத்தம்பழக்குவியல் என முஹம்மத் நபிகளாரின் வாழ்வில் காணவியலும்.மறை
வளம், திரை பெருக்கம் என்பன இறைப் பற்றுறுதியாளர்களால் மட்டுமே விளங்கிக் கொள்ளக் கூடிய
அம்சம்.
விவிலியத்தின் அஞ்சப்பம் இப்பகுதிகளில் நிலம் கட்டிடத்துடன்
அரிசியும் பருப்புமாக நிற்கிறது.
றாண்ணி,கோழஞ்சேரி,சங்கனாச்சேரி,நெய்யாற்றங்கரை எனப்படும்
பகுதிகளில் இயங்கி வரும் அஞ்சப்பம் எல்லோருக்குமான ஊட்டுப்புரை.மதிய வேளையில் மட்டும்
இயங்கி வரும் அஞ்சப்பத்தில் மரக்கறி உணவை மட்டுமே சமைத்தளிக்கின்றனர்.
இயற்கை முறையில் விளைவிக்கப்படும் பொருட்களைக் கொண்டு அமுது
படைக்கப்படுகிறது. அமர்ந்து உண்ணுபவர்களும் சிப்பங்களாக வாங்கிச் செல்பவர்களும் உண்டு.
அங்கு வைக்கப்பட்டுள்ள பேழையில் இயன்ற தொகையை செலுத்தி விட்டுச் செல்லலாம். கையில்
ஒன்றுமில்லையெனிலும் அதையும் இங்கு யாரும் பொருட்படுத்துவதில்லை.
ஊட்டுப்புரையென்பது இந்திய மரபில் நெடுங்காலம் நடைமுறையில் உள்ள விடயமென்றாலும் பல நேரங்களில் ஹிந்து உயர் வகுப்பினருக்கு மட்டுமே கோயில்களில் உள்ள ஊட்டுப்புரையில் இடமிருந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பசித்த மானுடரனைவருக்குமான ஸுஃபி கான்காஹ்களின் லங்கர்கானாக்கள்
எனப்படும் ஊட்டுப்புரைகளின் நீட்சியை தில்லி நிழாமுத்தீன் அவுலியா நினைவக வளாகத்திலும்
துளு நாட்டின் உள்ளாள்
செய்யது
முஹம்மது மதனி வலிய்யுல்லாஹ் தர்காவிலும்
,சீக்கியர்களின் குருத்வாராக்களிலும் காணவியலும்.
முண்டக்கயத்திலிருந்து முரிஞ்சம்புழாவிற்கு பேருந்து ஏறினோம்.
கண்ணனூர் சாஜு சிறிய படவியுடன் தாங்கியையும்
கொண்டு வந்திருந்தார். போகுமிடங்களில் காண்பவற்றை
முக நூலில் பதிவேற்றுவதாகச் சொன்னார். கேரள அரசின் கருவூலத்துறையில் பணியாற்றி வரும்
அவரும் அடிப்படையில் ஒரு சஞ்சாரி. மூன்று வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்த குலசேகரப்பட்டினம்
தசராவிற்கும் திருச்செந்தூர் கோயிலுக்கும்
வந்து போயிருக்கிறார்.
என்னிடம் தேரிக்காட்டையும்
சமணச்சிற்பங்களுள்ள கழுகுமலையையும் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். மாற்று வாழ்வியல்,
சூழலியல் துறைகளில் இயங்கும் அரசு சாரா அமைப்பிலும் இருப்பவராதலால் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள
குக்கூ காட்டுப்பள்ளிக்கும் போய் விட்டு அப்படியே ஆசிரமங்களின் பூமியான திருவண்ணாமலைக்கும்
போய் வந்திருக்கிறார். ஓட்ட இணையரொருவர் கிட்டிய நிறைவு.
அரை மணி நேர ஓட்டத்தில் முரிஞ்சம்புழா வந்தது. கோட்டயம்
மாவட்டத்திலிருந்து பத்தனம் திட்டா மாவட்டம் வழியாக இடுக்கி மாவட்டத்திலுள்ள முரிஞ்சம்புழாவிற்கு
வரும் வழிகள் சபரி மலையின் அடிவாரப்பகுதிகளாகும்.
முரிஞ்சம்புழாவிருந்து இரண்டு இரண்டரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள
நல்ல தண்ணி என்ற இடம். இது பிரபல சுற்றுலாத்தலமான பாஞ்சாலி மேட்டிற்கு போகும் வழியில்
உள்ளது.ஆட்டோவில் போய் இறங்கினோம். இப்பகுதிகளில் நிறைய தமிழ்ப்பெயர்கள் காணக் கிடைக்கின்றன.
மொழியால் நிலங்களை பிரித்து விட்டால் வேர் இல்லையென்று ஆகி விடுமா?
அதொரு மலைச்சாலையின் கொண்டை ஊசி வளைவு.அங்கிருந்து. சில
நூறு மீட்டர்களுக்கு மலையேற்றம். பாறைகள்,வேர் முண்டுகளுடன் வளைவும் திருப்பங்களுமான
மலையேற்றத்தில் பிடிமானத்திற்காக வேண்டி ஆளுயர
கழிகள் மரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்தன.ஆளுக்கொரு கழியெடுத்துக் கொண்டோம்.விசும்பிற்கும்
எங்களுக்குமிடையில் மரங்கள் கவிழ்ந்துக் கொண்டன.உலகம் இன்னொன்றாகியது.
வழிகாட்டியான ஜிபின் அணிலைப்போல தாவிச் சென்றார். வயதும்
இளமை.முதுகிலும் கனமில்லை. எனது முதுகுப்பை பதினைந்து கிலோமட்டில் எடையிருக்கும்.உடலில்
கொழுப்புடன் முதுகில் சுமையும் பாதையில் ஏற்றமும் ஒன்றிணைந்தால் மூச்சு முட்டல்தான்.
ஜிபினின் வேகத்திற்கு நானும் போனதால் இதயம் தன் எல்லையை அறிந்த கணம். நிதானித்துக்
கொண்டேன்.
உயரே ஒரு புன்னகை வரவேற்றது. அருட்சகோதரர்கள் சன்னி ஜோனி பினோய் – மூன்ரு அருட் சகோதரர்களின் மலைக்குடில் அது. நாங்கள் போன நாள் ஞாயிறாக இருந்ததினால் கீழே குர்பானி,குர்பானா எனப்படும் திருப்பலி ஆராதனைக்கு ஜோனி சென்றிருந்தார்.சன்னி அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.பினோய்தான் முழுப் புன்னகையுடன் எங்களை வரவேற்றார். இளஞ்சூட்டில் சீரக நீர் கொண்டு வந்து தந்தார்.
நிலங்களுக்கு மேல் ஒரு நிலத் தட்டு.வேர் முண்டு போலவும்
நில மேல் கிழங்கு போலவும் நின்றிருந்தது அவர்களின் குடில். சிற்றுயிரிகளின் முயற்சியைப்போல்
கொஞ்சம் பாறை,கொஞ்சம் மரம்,கொஞ்சம் இரும்பு,துணி,கல் நார் தகடு இவற்றால் அவர்களின்
கைகள் கொண்டு சன்னஞ்சன்னமாக உருவாக்கப்பட்டக் குடில்.
![]() |
என் வலப்பக்கம் சாஜு,இடப்பக்கம் பினோய்(பின்னணியில் மலைக்குடில்) |
முப்பது வருடங்களுக்கு முன்பு அதாவது 1996 ஆம் ஆண்டில் தங்களின் தனிப்பட்ட தியான தேவைகளுக்காக இங்கு அய்ந்து ஏக்கர் நிலம் வாங்கி உருவாக்கியுள்ளனர். அடிப்படையில் இம்மூவரும் ரோமன் கத்தோலிக்க கிறித்தவப்பிரிவின் சிறோ மலபார் அவையை சார்ந்தவர்கள். எல்லாக் கிறித்தவ அவையினருடனும் இம்மூவர்களுக்கும் நல்லுறவிருந்தாலும் அவையினரின் நிறுவனமயமும் இறுக்கமும் கெட்டித் தட்டலும் இந்த மலை ஒதுங்குமிடத்திற்கு கூட்டி வந்தது.
குடிலிலிருந்து மெலிந்த புகைப்படலம் வெளியேறுறிக் கொண்டிருக்க
.மதிய உணவை சமைத்துக் கொண்டிருந்தார் பினோய். கஞ்சியுடன்(கேரளியர்களின் கஞ்சி என்பது
வடிக்கப்படாத அரிசிச் சோறு) கீரை,துவையல்,பயறு என ஏதாவது ஒரு தொடு கறி உண்டு.
துறவிற்கும் தியானத்திற்கும் சரி வராதென அவர்கள் கருதுவதால்
இங்குள்ள உணவில் இறைச்சி அறவேயில்லை. காட்டில் கிடைக்கும் பழங்கள்,காய்களுடன் என்றாவதொரு
நாள் மலை ஓடையில் பிடிபடும் மீனும்தான் அவர்களின் உணவு. ஒருவேளைக்கென சமைத்ததை மற்ற
வேளைகளுக்கும் பயன்படுத்திக் கொள்வர். வருகையாளர்களுக்கு மட்டும் சுடு கஞ்சி உண்டு.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது இரண்டு இளம் அருட் சகோதரர்கள்
வந்திணைந்துக் கொண்டனர். அவர்களும் பகலில் வந்து குடிலின் தேவைகளைக் கவனிப்பதுடன் வரும்
வருகையாளர்களையும் உபசரிக்கின்றனர். அந்தியில் வீட்டுக்குப் போய் விடுவர்.
கொஞ்ச நேரத்தில் ஜோனி வந்து சேர்ந்தார்.ஜோனி உட்பட மலைக்
குடிலின் அனைவரிடமும் குறைவில்லாத புன்னகையுடன் அன்பும் எப்போதும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.
![]() |
ஜோனி |
ரோமன் கத்தோலிக்க அவையின் ஃபிரான்ஸிஸ் அசிசி என்ற புனிதர் இத்தாலியைச் சேர்ந்த பதின்மூன்றாம் நூற்றாண்டு
காலத்தவர்.அவரை முன்மாதிரியாகக் கொள்ளும் மலை வாச அருட் சகோதரர்கள் மூவரில் ஜோனியை
முதலில் இப்பக்கம் கொண்டு வந்தது “உன்னை நீ
அன்பு கூர்வது போல பிறரையும் அன்பு கூர்” என்ற விவிலிய வசனமாக இருந்திருக்கிறது.
பல நாட்கள் இவ்வசனத்தை தியானித்து அழுதிருக்கிறார். வெளியோசையில்
கர்த்தரின் அழைப்பை தவற விட்டு விடாமலிருக்க மலை பக்கம் ஒதுங்கலை தேர்ந்திருக்கின்றனர்.
புனித ஃபிரான்ஸிஸ் அசிசி பிரபஞ்ச உறுப்புக்களை கதிரவனை
நிலவை சகோதர உறவில் பார்த்தவர். ஏழ்மையையும் ஈதலையும் ஆசித்தவர்.இயேசு யாருக்காக பாடுகளை
ஏற்றாரோ அவர்களை நேசிக்காமல் தனது இறை பற்றுறுதி முழுமையடையாது என நம்பியவர். கிறித்தவ
துறவு நெறிக்கு பல முன்னோடிகள் இருந்தாலும் புனித ஃபிரான்ஸிஸ் அசிசியின் பங்கும் இதில்
தலையாயது.
ஏழ்மையை செல்வமாக ஜோனி பார்ப்பது இப் பின்னணியில்தான்.சமைப்பதற்கு
அரிசி இல்லை, முகம் மழிக்க சவரக்கத்தி இல்லையே எனத் தோன்றும் நாட்களில் வருகையாளர்களில்
யாராவது இவற்றைக் கொண்டு வந்திடுவர். தங்களது தேவைகள் ஒரு போதும் கேட்கப்படாமலிருந்ததில்லை.
பிறருக்கு கொடுக்குமளவிற்கு அரிசி உபரியாக உள்ளதாகச் சொன்னார்.
மின்னிணைப்பு,செல்பேசி என நவீன வசதிகள் எதுவுமில்லை. மேலடுக்கில்
உள்ள குடிலில் இரு அறைகள் உள்ளன. சமையல் கூடம், விவிலிய வகுப்பறை படுக்கையறை என மூன்றும்
இரண்டிலாகி இருக்கின்றன. ஆங்காங்கே உள்ள பாறைத்திட்டுக்களில் வருகையாளர்கள் அமரவியலும்.
ஓராள் மட்டுமே அமரக் கூடிய ஜோனியின் தியான அறை இந்நிலத்தட்டின்
இரண்டாம் அடுக்கிலுள்ளது. அவ்வறைக்கு முன்னதாக குளிப்பதற்கான சிறிய தடுப்புடன் கூடிய
வளைவை அமைத்துள்ளனர். முதல் அடுக்கில் துணி உலர்த்துவதற்கான இடம். மூன்றாம் தட்டில்
கழிப்பறை. மலையோடைகளில் இடப்பட்டுள்ள ஞெகிழிக் குழாய்கள் மூலம் போதிய நீர் வருகிறது.
தொட்டிகளில் நீரை சேமித்துக் கொள்கின்றனர்.பாறையடுக்குகளில் கால் பாவி மூன்று அடுக்குகளுக்கும்
போய் வர வேண்டியதுதான்.
நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது நான்கைந்து பாதிரிகளும் ஓர் இணையரும் வந்து சேர்ந்தனர்.ஞாயிற்றுக்கிழமை என்பதால் இவ்வளவு பேர் வந்திருக்கக் கூடும். மற்ற நாட்களில் எப்படியோ தெரியவில்லை.
இம்மூன்று அருட் சகோதரர்களும் நினைத்திருந்தால் இந்த முப்பதாண்டுகளுக்குள்
இதொரு சிமிட்டி, காரையினால் ஆன நவீன ஆன்மிக உலாத்தலமாக மாறியிருக்கும்.
பெரும்பாலான நாட்களில் ஜோனி தனிமைத் தியானத்தில் இருப்பவர்.
அந்நேரம் யாருடனும் உரையாடுவதில்லை,. வருகையாளர்கள் மற்ற அருட் சகோதரர்களுடன் பேசிக்
கொள்ள வேண்டியதுதான்.இத்தனை காலங்களில் தனக்கு ஒருபோதும் சலிப்பே ஏற்பட்டதில்லை என்ற
ஜானிக்கு வயதுஅய்ம்பத்தியொன்பது.
உரையாடல் வேகம் பிடிக்கத் தொடங்கும்போது மற்ற வருகையாளர்கள்அவருக்காகக் காத்திருந்ததைக் கண்டதால்
உரையாடலை நிறுத்திக் கொண்டோம்.
கிறித்தவ நெறியின் தொடக்கத்தில் காணப்படாத துறவு வழிமுறை
பின்னர் வெளி சித்தாந்தங்களின் தாக்கத்தினாலும் அரசியல் காரணங்களினாலும் நுழைந்து கொண்டது.இகத்துக்கும் பரத்துக்கும் வழி
காட்ட வந்த கிறித்தவம் சீசருக்கும் கர்த்தருக்குமாக இக பர அப்பங்களை தனித்தனியாக வகிர்ந்து
கொண்டது.
நாங்கள் புறப்பட வேண்டியிருந்ததால் அவசரமாக எங்களுக்கு
தேங்காய்ப்பொடியுடன் கஞ்சிச் சோறு வந்தது. தேங்காய் சம்பந்திப் பொடி மட்டுமே எனக்கு
போதுமானதாக இருந்தது. அத்தனை சுவை. வீட்டுக்கு போய் செய்து பார்க்க வேண்டும்.நான் எப்போதும்
சோறின் அளவை விட கறியை கூடுதலாக உண்பவன் என என் உம்மா சொன்னது இன்று வரை மாறவேயில்லை.
புறப்படும் போது மலைக்குடிலின் அனைத்து சகோதரர்களும் இறுகக்
கட்டியணைத்துக் கொண்டனர். நிபந்தனையற்ற அன்பின் மூலம் உலகை சொந்தமாக்கிக் கொண்டவர்களுக்கு
அய்ந்து ஏக்கர் நிலம் என்பது வெறும் எண் மட்டுமே.,
அன்சார் எர்ணாகுளத்தை நோக்க சாஜு தன் பணியிடத்தை நோக்க
நான் ஜிபினுடன் அவரது இல்லம் சென்று அன்றிரவு தங்கினேன். ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தபடி
தொடர் வண்டி சேரும் நேரம் சரிவராதென்பதாலும் நெருக்கடியின்றி மலை தியானக்குடிலை பார்க்க
வேண்டும் என்பதனால் இம்முடிவு.
ஜிபினின் இல்லம் உலக இலக்கியங்களால் நிறைந்துள்ளது. மலை
தியானக் குடில் செல்கையையும் அதன் நினைவுகளையும் ஜிபினின் வீட்டை சுற்றியுள்ள ஏகாந்தமும்
அப்பொழுது பெய்த மழையும் அவர் போட்டுத் தந்த வரக்காஃபியும் வெறுந்தேயிலையும் இன்னும்
ஆழப்படுத்தின.
![]() |
ஜிபின் |
No comments:
Post a Comment