Friday 29 December 2023

மழை படு நாட்கள்

 



டிசம்பரில் நீங்கள் ஊர் வராதீர்கள் எனக் கோருகிறார் என் நெருங்கிய உறவினர்.  சென்னை நீரழிவு நடந்தது டிசம்பர் 02/2015. தனுஷ்கோடி அழிவு நடந்தது டிசம்பர்23/1964. பன்னாட்டுக்கரைகளை ஆழிப்பேரலைகள் தாக்கியது 26/2004. சஃபர் மாதத்தை போல டிசம்பரையும் பீடைகளின் மாதமாக அறிவிக்க முயல்கிறோமா? நானே காலமாக இருக்கிறேன் என்பது இறைவனின் சொல்.


ஊரின் நீர்ப்பேரிடர் நிகழ்ந்து இன்றோடு பதினோறாவ்து நாள். இன்றுதான் உட்கார்ந்து எழுதும் மன நிலை வரப் பெற்றிருக்கிறது.வீட்டினருகே தேங்கியுள்ள மழை நீரை கழிவு நீர் ஊர்தியில் பதினொரு நடைகள்  அடித்த பிறகும் நீர் ஊறிக் கொண்டேயிருக்கிறது. டிசம்பர் 17, 18 ஆகிய  இரு நாட்கள் தொடர் மழைப்பொழிவு. ஒரே நாளில் 96 சென்டிமீட்டர்கள். மேகாலயத்தின் சொஹ்ரா(சிரபுஞ்சி)வில்தான் ஒரே நாளில் இதை விட கூடுதல் மழை பொழியக்கூடிய இடம். அது மலைப்பாங்கான இடம் என்பதால் எல்லா நீரும் வழிந்து விடும். ஆனாம் சம வெளியில் இவ்வளவு பொழிவு என்பது ஓர் ஊரை அழிப்பதற்கான நீர் பட்டயம்தான் என அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

இதற்கு முன்னர் கன மழைக்கான அறிவிப்பு டிசம்பர் 2,3 தேதிகளில் வந்து சென்றது போல வானிலைத்துறையின் இந்த அறிவிப்பும்  என எடுத்துக் கொண்டோம்.  பதினாறாம் தேதி இரவு பன்னீர் பூவாக தெளிக்கத்தொடங்கி இரவில் வலுத்து அதிகாலையிலும் தொடர்ந்தபோது வழமையில் ஒன்று என்ற எண்ணம் ஏற்பட்டது.

காலை பத்து மணி தாண்டியும் இப்பொழிவு தொடரவும் தன்னைக்கவனிக்கக் கோரிய மழையின் குரலாக பொருள்பட்டது. சௌகரிய எல்லையிலிருந்து அசௌகரிய வரைக்குள் மழைக்கணம் கடந்த பொழுது அது.

நண்பர் சிராஜ் மஷ்ஹூர் ஊரில் வந்து தங்கியிருந்தார். லுஹர்( நண்பகல்) உணவிற்காக அவரை நண்பர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்து செல்ல போகும்போதுதான் மழையின் குரல் முற்றிலுமாக  மாறி விட்டிருந்தது. ஆசை,அசௌகரிய கட்டங்களைத்தாண்டி இது நல்லதிற்கில்லை என உள்குரல் ஒலித்தது. அப்பொழுது தொடங்கிய தீர்மானமான பொழிவு நள்ளிரவு வரை தன் பிடியைத்தளர்த்தவில்லை. சமூக சமையலறைகள், பொது தங்குமிடங்களுக்கான அறிவிப்புக்கள் வட்சப் குழுமங்களில் வரத் தொடங்கிய[போதுதான் நிலைமையின் கனம் முழுமையாக புரிய வந்தது.

என் வீட்டுத்தோட்டத்துடன் விடியும் புலரிப்பொழுதானது பதினெட்டாம் தேதி அன்று துயர் மிக்கதாக இருந்தது. கை விட்டு அள்ளும் அளவிற்கு கிணற்று நீர் இருப்பது கொண்டாட்டம்தான். ஆனால் அதைக் கொண்டாட இயலாத அளவிற்கு அதற்குள் கழிவு நீர் கலப்பும், பூத்துக்காய்க்கும் பருவத்தி;லிருந்த மரங்களின் அழிவும்தான்.

நீரிடர்களுடனான அனுபவம் இது புதிதில்லை.. 1992 இல் ஆத்தூர் பகுதிகளில் தாமிரபரணி உடைப்பெடுத்து ஊருக்குள் நுழைந்தபோது அங்குள்ள வர்களுக்கு காயல்பட்டின பள்ளிவாசல்களில் அடைக்கலம் கொடுக்கப்பட்டது. வடக்காத்தூர் தெருக்களில் படகுகள் ஓடின. மளிகைக் கடைகளில் புகுந்த ஆற்று வெள்ளத்தினால் துளைத்தெடுக்கும் கெட்டுப்போன பொருட்களின் நாற்றம் . 1995க்குப்பிறகு காயல்பட்டினத்தில் இருமுறை பேரளவில் மழை வெள்ளம் உண்டாகியது. ஒரு தடவை மய்யித்துக்களை அடக்க முடியாத சூழல். பிறிதொரு தடவை புற நகர்ப்பகுதிகளில் மக்கள் வீடுகளை இழந்தார்கள். காங்கயத்தில்தோட்டக்கிணற்றிலும், பாலாறு அருவியிலும் மூழ்கவிருந்தது,சுனாமியால் துரத்தப்பட்டு ஓடியது, இவை போக  நீண்ட சென்னை வாசத்தில் மழைப்பேரிடர்களின் சாட்சியாகவும் இருக்க வேண்டி வந்துள்ளது.

இவ்வாறான பல நீரிடர்களின் அனுபவங்கள் இருந்தாலும் ஒவ்வொரு இடரும் ஒரு புது வகையான அனுபவத்துடனும் செய்தியுடனும்தான் வருகிறது. மழை பொழிந்த நாட்களிலிருந்து பத்து நாட்களுக்கு நிலுவையிலிருக்கும் எழுத்து வேலைகளை நிறைவு செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தேன். எல்லா கணக்குகளும் சமன் குலைந்தன. இந்த மழைப்பொழிவு உண்டாக்கிய அனுபவம் நான் இதுவரை காணாதது. மூன்று நாட்கள் மின்சாரமில்லை, குடி நீரில்லை, தொலைத் தொடர்பில்லை. வீட்டைச்சுற்றிலும் ஐந்நூறு மீட்டர் வரை  மழைநீர் தேக்கம் . யாரையும் போய் பார்க்கும் மன நிலையை முற்றிலும் இழந்திருந்தேன். முற்றுகையிடப்பட்ட மன நிலை. நிறைய ‘முதன்முறைகளை’ கொண்டு வந்த தினங்கள்.

மண முடித்து முப்பது வருடங்கள் ஆகப்போகின்றன. ஊரிலிருக்கும் நாட்களில் வீட்டைத்தவிர வெளியிடங்களில்  இதுவரை  தங்க நேர்ந்ததில்லை. அடைத்துக் கொண்ட மழையில் ஊருக்குள் சாலையும் தெரியவில்லை. எதிரே உள்ள பொருட்களும் தென்படவில்லை. எங்காவது தட்டுத்தடுமாறி விழுந்து கிடக்காமல் பேசாமல் என் வீட்டில் இராத்தங்கி காலையில் செல்லுங்கள் என்றார் நண்பர். மழையின் பொடு பொடுப்புடன் மின்சாரமில்லாத இரவில் சீவிடுகளின் ரீங்காரத்தில் தவளைகள் மங்கல ஒலியெழுப்பிக் கொண்டிருந்தன.பாம்பின் வாயில் படும் வரைக்கும் தவளைகளின் மங்கலத்திற்கு குறைவில்லை.நல்ல தூக்கம். மறுநாள் காலை முட்டு வரை நீரில் அலைந்தலைந்து ஒரு வழியாக வீடடைந்தேன்.

முதன்முறையாக  வானொலிப்பேழை மட்டுமே ஒரே செய்தித் தொடர்பு சாதனம். 1980களுக்கு முன்னருள்ள நிலை.அதுவும் ஒன்றரை நாட்களுக்குப்பிறகு மின்னாற்றலை இழந்து விட்டது. உரையாடிக் கொள்ள தொடர்பு கொள்ள அண்டை வீட்டாரைத் தவிர யாருமில்லை. இப்போ1960களுக்கு சென்று விட்டது ஊர். ஒவ்வொரு பருவ மழைக்காலத்திலும் நமக்குள் இறங்குகிற அளவிற்கு மழை நீடிக்க வேண்டும் என விரும்புவதுண்டு. மழைக்குள்ளிருக்கும் ஒரு பயணம் போகவேண்டும் என ரொம்ப நாட்களாக எண்ணம். இதற்குப் பிறகு மழைப்பயணத்தை மனம் விரும்புமா? விடை தெரியவில்லை. அதனிடம்தான் கேட்க வேண்டும்.

காயல்பட்டினத்தை விட சுற்று வட்டாரங்களில் மழைப்பொழிவு குறைவாக இருந்த போதிலும் அங்கு உயிர் உடைமை சேதாரம் கூடுதல்.இதற்கான காரணம் காயல்பட்டினத்தில் இல்லாத நன்னீர் நிலைகள் அவ்வூர்களில் இருப்பதுதான். இதற்கெல்லாம் மேலாக ஆன்மீகக்காரணங்களும் உண்டு. மழை தன் கூர் நகங்களை முழுக்க விரித்துக் கொண்டிருக்கும்போது சமூகத்திலிருந்து உதவிக்கரம் முழுமையாக படர்ந்து விட்டது. தங்கள் சொந்த வசதிக்குறைவுகள்,துயரங்கள், பேரிடர் உண்டாக்கும் திகைப்பு, மன மிரட்சி போன்ற எல்லா எதிர்மறைகளையும் பின்னுக்கு அனுப்பி விட்டு களங்கண்டஇது போன்ற சராசரிக்குள் ஒளிந்திருக்கும் அதி மனிதர்களின் மூலமாகத்தான் இறைவன் தன் விதியை மாற்றியமைக்கிறான்.

வெளியூர் நல்லுள்ளங்களிடமிருந்து உதவிகள் கிடைத்தாலும் பெரும்பாலான தேவைகள் ஊரிலேயே தன்னிறைவு கண்டன. மழை நின்று இரண்டு நாட்கள் கழிந்தே அரசின் கண் திறந்தது.அதுவும் சென்னையிலிருந்த நகரின் பிரதானிகள் தலைமைச் செயலரை சந்தித்த பிறகுதான். அந்த இரண்டு நாட்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறையுணவே  கிடைத்திருக்கலாம். ஆனால் யாரும் பட்டினி கிடைக்கவில்லை. எல்லோரும் எல்லோராலும் பொறுப்பெடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.

இவ்வளவு மழை பொழிந்திருக்கிறது.அந்த தண்ணீரெல்லாம் எங்கே போயிற்று? பெரிதாக தடங்கள்  இல்லையே?  என நம்பிக்கை குறைவுடன் கேட்டார் பிபிசி செய்தியாளர். நெஞ்சிலிருந்தும் இரைப்பையிலிருந்தும் புறப்படும் துஆக்களுடன் ஆன்மிக லௌகீக பலனடைந்தவர்கள்  தொலைவிலும் மறைவிலும்  உயர்த்திய கைகளும் இறைவனால் நிராகரிக்கப்படுவதில்லைதானே.

 பெரும் சேதாரங்களிலிருந்து காயல்பட்டினம் தப்பியதற்கு மற்றுமொரு ஆன்மீகக்காரணம், மறைந்து வாழும் நல்லடியார்கள், நாதாக்கள் நற்போதனையாளர்களின் தலைநகரமாக  இது இருப்பதுதான்.

1980களின் இறுதியா அல்லது தொண்ணூறுகளின் தொடக்கமா என நினைவில்லை. இது போன்ற ஒரு பேரிடருக்கான முன்னறிவிப்பு தண்டோரா பஞ்சாயத்திலிருந்து முழக்கப்பட்டது. வீட்டின் ஆவணங்களை கஞ்சித்தாளில்(ஞெகிழி) என் வாப்பா சுற்றத் தொடங்கியதோடு, ரொட்டியடுக்குகளை சேமித்து வைத்தார்கள். புயல் கரையைக்கடக்கும் எச்சரிக்கை வானொலியில் மாறி மாறி விடப்பட்டுக் கொண்டிருக்க காற்றுடன் கூடிய மழைப்பொழிவின் ஓசை இரவின் மேல் கூடுதல் மௌனத்தை  அன்றிரவு கவிழ்த்திருந்தது. அடுத்த நாள் விடியற்காலையில் கடற்கரைக்கு சென்ற ஊர் ஆட்களிடம் அங்குள்ள கிறித்தவ மீனவர்கள், சென்ற இரவில் வெள்ளுடுப்பும் தலைப்பாகையும் அணிந்த நூற்றுக்கணக்கிலான உங்கள் ஆட்கள் பாடிய  பிரார்த்தனை பாடல்களினால்(பைத்) நாங்களும் நீங்களும் இந்த ஊரும் தப்பினோம் என்றிருக்கிறார்கள்.அப்படி யாரும் நாங்கள் வரவில்லையே. புயல் இரவில் யார்தான் வர முடியும் என எதிர் கேள்வி கேட்க எதற்கும் விடையில்லை ஊரே ஒடுங்கியிருக்க அந்த பின்னிரவில் அதுவும் கொந்தளிக்கும் கடல் முன்பே நின்று பாடி வேண்டியவர்கள் யார்?

ஆயிரமாண்டுகளுக்கு ஒரு முறைதான் இம்மாதிரி மழைப்பொழிவு நிகழும் என்றார் தமிழ்நாடு வெதர்மேன். 1871ஆம் ஆண்டுக்கு பிறகு இம்மாதிரி பொழிவு நடந்துள்ளது என்றனர் வானிலை நிலையத்தினர். ஆனால் இந்த துயரக்குவைகளுக்கு மேலாக ஒரு நிலவும் கதிரவனும் கொஞ்சம் தாரகைகளும் உதிக்கத்தான் செய்தன.  குடும்பத்தினரை, உறவினர்களை,அண்டை வீட்டுக்காரர்களை, தொலைவிலுள்ள நண்பர்களை இன்னும் நெருக்கமாக உணரவும் அறியவும் இயன்றது.என் மகன்கள், 1964 டிசம்பரில் காற்றாலும் நீராலும் அழிந்த தனுஷ்கோடியின் கதையை கேட்டார்கள்.  

பேரிடர்களின் பல பட்டடைகளில் இன்னொரு பக்கமும் இருக்கிறது. அது நாம் கூடுதல் கண்டிராத முகம். இப்பிரபஞ்சத்தில் எங்கோ ஒரு மருபூமியிலுள்ள  களைச்செடியின் தலையசைப்பும் அந்தகாரத்திற்குள்ளிருக்கும் எறும்பின் ஊரலும் பொருளற்றவையல்ல. எல்லாம் இணைக்கப்பட்ட பேரியக்கத்தின் கணத் துடிப்புக்கள் அவை. தூலப்பொருட்களின் ஒவ்வொரு அசைவும் பிரபஞ்சத்தின் எங்கோ ஏதோ ஓரிடத்தில் ஒரு விளைவை ஒரு செயலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றன.இயற்கைப்பேரிடர்கள் நிகழும்போது நாம் அதன் விளைவுகளைப்பற்றி மட்டுமே விவாதிக்கிறோம்.அவைகள்சென்ற நாட்களில் நாம் நிகழ்த்தி விட்டுப்போன அபத்தங்களின் பெறுபேறுகள் தொடர் விளைவுகள்  அல்லது எச்சரிக்கைகள் என்பதை வசதியாக மறந்து விடுகிறோம். இம்மறதியின் நீடிப்பிற்குள்தான் பேரிடர்களும் இருப்புக்கொள்கின்றன.

என் வீட்டினருகில் தேங்கியுள்ள நீரை எடுக்கச் சொல்லி நகராட்சியில் முறையிட்டபோது, நகராட்சியின் அலுவலரொருவர் கழிவு நீரகற்றும் ஊர்திப்பணியாளர்களிடம் “ இரண்டு நாளுங்கற எடத்துல நாலு நாள் ஓட்டுங்கப்பா” எனக் கொடியாட்டுகிறார். நிவாரணப்பொருட்களின் ஒரு பகுதி  களவாடப்பட்டு எஞ்சியவை பாகுபாட்டுடன் வினியோகிக்கப்பட்டன. இது ஓர் ஒற்றை நிகழ்வல்ல. பெரும் பாறையின் நுனி.

சூழலைக்கெடுத்தோம், மரங்கள்,நீர் நிலைகளை அழித்தோம்/ மாசுபடுத்தினோம், ஞெகிழியை பயன்படுத்தினோம் என்பன போன்ற பௌதிக காரணங்களுடன் கூடவே அறம் புரள வைக்கும் வேறு சில செயல்களையும் நாம் பாரதூரமாக நினைப்பதில்லை.  தரகர்கள் கங்காணிகள். பொதுப்பணியின் மறைவில் முறைகேடான வணிக நோக்கங்களை சாதிக்கும் கள்ளக் கனவான்களின் கூட்டானது அதிகார மஞ்சத்தை கைப்பற்றிடும்போது அடியும் முடியும் கறைபட்டுத்தான் போகும். குப்பைகளை கோபுரம் என சாதிப்பது பொதுப்புத்தியில் நீடிக்கும் வரைக்கும் அதன் தொடர் விளைவுகளான விபரீதங்களை நம்  தலையில் கட்டிக் கொள்ளத்தான் வேண்டும்.பொறுப்புகள், அதிகாரங்கள்,பதவிகள் என்பன இறைவன் நம்மிடம் ஒப்படைத்த அடைக்கலப் பொருட்கள். அவை வீணடிக்கப்படும் மோசடி செய்யப்படும் இடங்களில்தான் இயற்கைப்பேரிடர்களுக்கான விதைகள் முளைக்கின்றன.

இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்த பின்னர் இனியொரு துயரம் நிகழாமலிருக்க கடலுக்கும் நதிக்கும் மாதத்திற்கும் மலைக்கும் பூமிக்கும் அஞ்சுவதுடன், அவற்றிற்கு  பூவிட்டு பூசித்தலானது அவைகளை அமைதி கொள்ளச் செயலும் என நம்புவதை விட அறியாமை எது? கடலும் நதியும் விண்ணும் மண்ணும் நிலவும் கதிரவனும் காற்றும் விசும்பும் கோள்களும் உயிரிகளும் இன்னும் இப்பேரண்டத்தில் என்ன உண்டோ அத்தனையும் அம்புகள் மட்டுமே. வில்லாளி விடாமல் தானாக இயங்கவியலா வெற்று அம்புகள்.  சூத்திரக்கயிறு கொண்டு இயக்கும் இறைவனின் விரலசைவுகளுக்குள்தான் அவை கட்டுண்டு கிடக்கின்றன. அவை அவனின் இசைவின்றி தன்னியல்பாக எதையும் செய்ய இயலாதவை.

நமது குறைகளை குற்றங்களை மோசடிகளை வீணடித்தல்களை கைவிடாமல், நடந்தவைகளுக்கு பரிகாரமும் மன்னிப்பும் தேடாமல் பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே இவற்றை தடுத்து நிறுத்தி விட இயலும் என்பது உயர் தொழில் நுட்ப மூட நம்பிக்கையேதான். 

—------------     

ஒரு பிரார்த்தனை,

விரக்திக்கு ஆறுதலாய்க் கூடும்


நீர்த்துளிகள் நிச்சலனமாய்

தாழ்நிலங்கள் போர்த்த

விழையும் போதெல்லாம்

மூழ்கிய தரைகள்

 நீர்மட்டத்தில் உயர்ந்து வானை முத்தமிடக் கனாக் காண்கின்றன


துளைக்கூரையுடன் கூடிய வீடுகள், 

சொல்லப்படாத கதைகளை டைரிக் குறிப்புகளாய் எழுதுகின்றன


இவ்விரவில் மழை ஓயுமா, 

இடைவிடாத சுமைகள் எங்கும் அவிழ்ந்தோடுகின்றனவே

வெள்ளத்தின் கொடூர நடனத்தின் மத்தியில்,

போராடுபவர்களை விடுவிக்கவும்.

 புயலுக்குப் பின் சூரியனைப் போல

மழை நகரத்தில் நம்பிக்கையொன்றை மாத்திரம்

ஈரநிலத்தில் ஆழப்பதியமிட்டு 

வருடத்தை வழியனுப்புகிறோம்


~மின்ஹா

 



No comments:

Post a Comment