பரந்து விரிந்த மதுரை நிலப்பரப்பில் கன்னிவாடி ஊரை நடு நாயகமாக கொண்டு நிகழும் பெருங்கதை.பதினெட்டாம் நூற்றாண்டின் மதுரை நாயக்கர் கால ஆட்சியில் உள்ளூர் மக்கள் அதிகாரத்தின் பெயராலும் சாதியின் பெயராலும் எவ்வாறு பிரித்து ஒடுக்கப்பட்டார்கள் என்பதை மிக நுட்பமாக பேசும் நூலிது.
ஒரே ஆதியிலிருந்து தோன்றிய மனிதர்களை பிரித்தாளுவதற்காக ஆதிக்க சாதிகளின் தெய்வ சம்மதத்தோடு உருவாக்கப்படும் கீழ் நிலை சாதியமானது எவ்வாறு ஒடுக்கப்பட்ட மக்களிடையே அதிகார வர்க்கத்தின் துணையோடு இறுக்கமாக்கி நிரந்தரமாக்கப்படுகின்றது என்பதற்கான முதன்மை ஆவணமிது.
பொதுவாக அறியப்பட்டது போல் இல்லை இந்து/ இந்திய சாதிய முறை. அதிகார மையங்களின் விசையினால் கீழ் சாதி மேல் சாதியாகவும் மேல் சாதி கீழ் சாதியாகவும் மாறி மாறி அடுக்கப்பட்டு வந்திருப்பதே வரலாற்று பருண்மை என திரிக்கிறார் இந்திய தத்துவ மரபின் இலக்கிய கரமாக தன்னை அறிவித்துக் கொண்டு செயல்படும் நவீன இலக்கிய பீடாதிபதி.
இந்த அறிவு நாணய மோசடி வாதத்தை முறியடித்து உண்மையை நிறுவியதுதான் இந்த நாவலின் முதன்மை வெற்றி எனக் கொள்ளலாம்.
முதன் முதலாக ஒடுக்கப்படும் மானுடன் மேன்மேலும் சாதிய பாதாள சகதிக்குள் தொடர்ந்து அழுத்தப்படுவதுதான் நடந்திருக்கிறது. இந்த ஒடுக்குமுறைக்கு அதிகாரம் மட்டுமில்லை, சக குடிமக்களின் மனதும் அறிவும் ஒத்திசைந்திருக்கிறது என்பதுதான் வரலாற்றுண்மை.
சவரக்கத்தியினால் சாதிய மேட்டிமை கொண்ட தளபதி வீழ்ந்திருக்கலாம். ஆனால் அதிகார சதிராட்டத்தில் ஏவியவனாலும் ஏவப்பட்ட இலக்காலும் ஒரே நேரத்தில் நாவிதன் ராமனும் வீழ்த்தப்பட்டு விடுகிறான்தானே.. நாவிதன் ராமன் அவன் மகன் மாடனின் பாத்திரங்களில் பொதுப்புத்தியில் உறையும் தத்துவங்கள், ஞானங்கள், பீடங்கள் தெய்வங்கள், கோட்பாடுகள், அரசியல் என எல்லாமே மூழ்கிப்போகின்றன.
பதினைந்து வருட உழைப்பில்இரா. முத்து நாகுவின் விரல்களில் வரலாறு புனைவுக்குள்ளும் புனைவு வரலாறுக்குள்ளுமாக முயங்கி மயங்குகின்றன. புனைவிற்கப்பால் மானிடவியல்,இனவியல்,மருத்துவம். மரபறிவு, நிலவியல் என எல்லா பக்கமும் விரிவு கொள்கிறது படைப்பு.
விருது அரசிய:லாளர்கள், இலக்கிய பீடாதிபதிகள் இந்நாவலை ஒரு கள்ள மௌனத்துடன் கடப்பதை புரிய முடிகிறது. இலக்கியத்தை சமூக நீதியை கொண்டாடும் தற்போதைய தமிழ்நாட்டரசாவது இந்நாவலுக்கு உயரிய விருதையும் அங்கீகாரத்தையும் வழங்குவதோடு கல்வி நிறுவனங்களில் பாட நூலாகவும் அறிவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment