Wednesday 10 May 2023

சரவணன் மாணிக்கவாசகத்தின் இலங்கை பயணமும் பல கணக்குகளும்

 


சமீபத்தில் நடைபெற்ற மூவரின் இலங்கை  பயணங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். எழுத்தாளர்கள் சாரு, அ.மார்க்ஸ். இன்னொருவர் சரவணன் மாணிக்கவாசகம்.

 ஒவ்வொருவரும் தனிப்பட்ட அழைப்பின் பேரிலும் பொதுவான அழைப்பிலும் சென்று வந்தவர்கள்.

அ.மார்க்ஸ் போனதும் தெரியவில்லை வந்ததும் தெரியவில்லை. சாருவின் நாய் கதை எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

ஆனால் சரவணன் மாணிக்கவாசகத்தின் வருகை மிகவும் குறிப்பிடத்தக்கது. சுற்றுலாத் தலங்கள், ஆன்மீகத் தலங்கள், கடற்கரை, மலைப்பகுதிகள்,, கிழக்கில் வடக்கிலும் பண்பாட்டு இடங்களோடு வரலாற்றையும் சேர்த்து  எழுதிவந்தார் என்பதே இங்கு கவனிக்க வேண்டிய விடயம் .


இன்னொரு ஊருக்கு செல்லும் போது அங்குள்ள வரலாறு உள்ளிட்ட எதையாவது நாம் திரித்து கொளுத்திப்போட்டால் அங்குள்ள இணக்கமான சூழல் கெட்டுப்போகும் என்ற அடிப்படை விஷயம் தெரியாதவரா சரவணன் மாணிக்க வாசகம்? ஆனாலும் அப்படியொரு வேலையை அவர் செய்தார்.

பண்டாரவளையில் ஒரு இனம் சிறுபான்மையாகிவிட காரணம் அங்குள்ள இன்னொரு இனம் தான் என தூண்டுகிறார்.

ஏற்கனவே சரவணன் மாணிக்க வாசகம் ஒரு புத்தகவிமர்சனத்தில் இலங்கை முஸ்லிம்கள் தமிழகம் வந்தால் மட்டும் தங்களை தமிழர்களாக காட்டிக்கொள்வார்கள் என இன வெறுப்பை பரப்பும் அந்த புத்தகத்திற்கு ஒத்தூதினார்.

கிழக்கில் மட்டகளப்பு சென்றவர், வசதியாக காத்தான்குடி பள்ளிவாசலில் நிகழ்த்தப்பட்ட இனப் படுகொலைகளை பற்றி எழுதாமல் தவிர்த்துக்கொண்டார்.

அக்கரைப்பற்றில் முஸ்லிம் வீடுகளில் விருந்தை உண்டு கொண்டே கூச்சமில்லாமல் முஸ்லிம் வெறுப்பு பதிவுகளை இட அவரால் முடிந்தது.

மூதூரில் கொத்து கொத்தாக இஸ்லாமிய குடும்பங்களை எல்லாவற்றையும் வைத்துவிட்டு கிளம்புங்கள் என்று சொன்ன வரலாறு உட்பட எல்லாவற்றையும் நாம் அவருக்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம்.

ஒரு போரின் ஒரு பாதியை மற்றும் சொல்லிவிட்டு மறு பாதியை தொண்டையில் விழுங்கிக்கொள்வது, தன்னை ஒரு கடவுள் நம்பிக்கை, சாதிப்பற்று இல்லாதவர் என்று கூறிக்கொண்டு கோயில் குளங்களாகவே சுற்றும் சரவணன் மாணிக்கவாசகம் நடுநிலை பக்கம் நிற்பதாக கூறுகிறார். நடுநிலையில் இரண்டு பக்கம் உண்டு. ஒருபக்கம் கூறிவிட்டு மறுபக்கம் கூறாவிட்டால் என்னவாகும் ?

 தனது மேட்டிமைத்தனத்தால் சரவணன் மாணிக்கவாசகம் அங்குள்ளவர்களுக்கே இவர் போய் வரலாறு பாடம் எடுக்கிறார். அவர்களுக்கு தெரியாத வரலாற்றை எல்லாம் பத்துநிமிட நூடுல்ஸ் போல் பத்தே நாட்களில் கரைத்துகுடித்து விட்டு இவர் பாடம் எடுக்கிறார். 

இவர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் இலங்கை வந்து போய் விடவில்லை. பல மாதங்களாக இந்திய இலங்கை இலக்கிய பனுவல்களுக்கு தரமான மதிப்புரையை வழங்குகிறார். அதிலும் புதியதாக எழுந்து வரும் இலங்கையின் முஸ்லிம் படைப்புகளை கூடுதலாகவே தேர்வார்.

பல காலமாக இவற்றை தொடர்ந்து செய்து தமிழ் இலக்கிய பரப்பில் தனக்கான ஏற்பையும் கவனிப்பையும் உண்டாக்கியிருக்கிறார். அதன் பிறகே இவரின்  இலங்கை பயணம் நடந்தேறுகிறது. இவரின் இலங்கை பயணத்தில் பல்வேறு கணக்கு கூட்டல்களுடன் மறை கரங்களும் இருக்க வாய்ப்புள்ளது.

இலங்கை பல கட்ட துயர நிகழ்வுகளுக்கு பின்பு இப்போது தான் எழ ஆரம்பித்துள்ளது. முப்பது வருடங்களாக அல்லாடிக்கொண்டிருந்தவர்கள் இப்போது தான் கொஞ்சம் ஆசுவாசமாக எழுந்து நடக்க தொடங்கியுள்ளார்கள்.

தற்சமயம் அவர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து வருகின்றனர். எத்தனை கசப்புகளுக்கு பின்னால் இந்த வாழ்க்கை நிகழ்கிறது என்பது உலகத்தில் யாரையும் விட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஏற்கனவே இலங்கை இந்திய அரசுகள், இலங்கையின் இன முரண்களை தவறாக கையாண்டு சிடுக்குக்குள்ளாக்கியதன் பெறுபேறுகளை அதற்கான விலையை இரத்தமும் சதையுமாக இரு நாட்டு மக்களும், அரசியல் தலைவர்களும் கொடுத்ததை மறக்கவியலுமா?

தமிழ்நாட்டிலிருந்து போகிறவர்கள் அவர்களின் நல்லிணக்கத்திற்கு ஏதும் செய்யவில்லை என்றாலும் அவர்களுக்குள் சண்டைமூட்டி பார்க்க வேண்டாம்.

உங்கள் இன ஆதிக்க புவியரசியல் கணக்குகளை அங்கு எறியாதீர்கள். இந்த தலைமுறையையாவது நிம்மதியாக உண்டு உறங்க விடுங்கள்.

இதை நிறைவுபடுத்து முன் இன்னொன்றையும் சொல்ல வேண்டியுள்ளது.

இலங்கைக்குள் பாயும் இந்திய இலக்கிய சங்கதிகாளானாலும் சரி ஆட்களானாலும் சரி, அதை இலங்கையின்  இலக்கிய,சமூக செயற்பாட்டாளர்கள் எடுத்துக் கொள்ளும் விதம்தான் புரியாத புதினமாக உள்ளது.

தனது நிலத்திற்கு வருகிறவர் யார்? அவரின் அரசியல், சமூக கள பின்னணி என்ன என்பதைப்பற்றி அவர்கள் பொருட்படுத்துவதில்லை.

வருகை புரிபவர் தீங்கானவர் என்பது தெரிந்தும் அவருடன் இணக்கம் பாராட்டும் அபத்தங்களை கைவிடுங்கள். அக்கரை மயக்கம் வேண்டாம் தோழர்களே. ஆய்ந்து தெளிந்து தேர்தலே சால நன்று.

No comments:

Post a Comment