" தோந்நிய யாத்ரா " புத்தகத்தின் அறிமுகம் / மதிப்புரை / விமர்சனம்
2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சென்னை புத்த கண்காட்சியில் நான் வாங்கி சேர்த்த சொற்ப சில புத்தகங்களில் இதுவும் ஒன்று.
தவிர இப்புத்தகத்தின் ஆசிரியர் ஓரளவுக்கு பரிச்சயமானவர். வாசிப்பு, கலந்துரையாடல் என புத்தகம் சார்ந்த நிகழ்வின் வழியேதான் சாளை பஷீர் காக்கா அறிமுகமானார்.
எனக்கு கேரளத்தின் ஆகச் சிறந்த எழுத்தாளரான வைக்கம் முஹம்மது பஷீரை மிகவும் பிடிக்கும். ஒரு தரமான , கிளாஸான காதல் காவியம் எதுவென யாரேனும் கேட்டால் நான் தவறாமல் பஷீரின் "பால்ய கால சகி" யை பரிந்துரைப்பேன். பால்யகால சகியின் நினைவுகள்தான் பஷீரை எனக்குள் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன.
மெய்பொருள் வாசகர் வட்டம் சார்பில் மாதந்தோறும் "புத்தக கலந்துரையாடல்" நடப்பது வழக்கம். சில கூட்டங்களுக்கு சென்றிருக்கிறேன். பல கூட்டங்களுக்கு வாய்ப்பு இருந்தும் தவிர்த்திருக்கிறேன். காரணம் ஒரு புத்தகத்தை வாசிக்காமல் அதன் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்பதில் சில சங்கடங்கள் உண்டு.
அப்படி வைக்கம் முஹம்மது பஷீரின் "ஜென்ம தினம்" கதையின் கலந்துரையாடலுக்கு அக்கதையை படித்துவிட்டு சென்று கதை பற்றி எனது மன ஓட்டங்களை, பஷீரைப் பற்றிய எனது அபிப்பிராயங்களை, நான் பஷீரை கண்டடைந்ததை பற்றி சொன்னேன்.
அதன் பின்னர் எழுத்தாளர் சாளை பஷீர் ஜென்ம தினம் பற்றியும் பஷீரைப் பற்றியும் ஆழமான , தீர்க்கமான, சுவாரஸ்யமான ஏறத்தாழ உரை ஒன்றை நிகழ்த்தினார். பஷீரைப் பற்றிய அவரது அனுபவங்களை பஷீரின் வாசகனாக கேட்டுக் கொண்டிருந்தேன். சாளை பஷீர் காக்கா தனது உரையை முடித்து விடக் கூடாது என எண்ணி ஆச்சர்யத்தோடு கண்களை விரித்து கேட்டுக் கொண்டிருந்தேன்.
நான் வாசிக்க ஆரம்பித்தது எந்த உந்துதலும் இல்லாமல் எதார்த்தமாக நடந்தது. பஷீரின் பாத்துமாவின் ஆடு வாசிக்கும் போதோ, பன்னூலாசிரியர் ஹசனின் "மேற்கு வானம்" வாசிக்கும போதோ அவர்கள் யாரென்றே தெரியாது. அதனால்தான் என்னவோ அவர்கள் காலத்தால் அழியாத நினைவுகளாக என் வாசிப்பில நிற்கிறார்கள்.
தோந்நிய யாத்ரா புத்தகம் முழுக்க பயணக் கட்டுரைகளை விவரிக்கிறது. அதிலும் குறிப்பாக இலக்கியங்களை கொண்டாடும் பக்கத்து தேசிய இனக் குழுவான கேரளத்தில் எழுத்தாளர்களின் கால் தடங்களை தேடிய பயணம் அது. நல்ல வேளை ஆசிரியர் இதனை எழுத்தாக்கியிருக்கிறார்.
இல்லையெனில் இந்த அனுபவத் தேன்கூடு யாருக்கும் பயன் தராமலேயே காய்ந்து போயிருக்கும்.
வைக்கம் முஹம்மது பஷீர்., ஓ.வி.விஜயன், நாகூரின் குறுக்கு வெட்டுத் தோற்றம், பொன்னானி, மாப்பிளா பாடல்கள், ஹுஸ்னு ஜமால் என அள்ள அள்ள குறையாத கருவூலமாக இப்பயணங்கள் ஏராளமான நினைவுகளை தந்திருக்கின்றன.
கேரளத்திற்கு பயணப்பட எப்போதுமே விருப்பம் கொண்டவன் நான். கோழிக்கோடு, பொன்னானி என கல்வி நிமித்தமாக கேரளத்திற்கு பயணப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு Detailலாக பொன்னானியை நான் பார்த்ததில்லை. இப்பயணக் கட்டுரைகளை வாசித்த பின்னர் சாளை பஷீர் காக்காவோடு ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டுமென தோன்றியது.
பஷீரை காண வேண்டும், மாப்பிளா பாடல்களை கேட்க வேண்டும், கேரள தரவாட்டின் நுட்பமான ஒழுங்கை காண வேண்டுமென தோன்றியது.
மொத்தத்தில் தோன்றிய பொழுதின் பயணங்கள் எனும் இப்புத்தகம் ஓர் நிறைவான இரயில் பயணத்திற்கு நிகரானது. இரயிலில் இருந்து இறங்கிய பின்னரும் உடலில் சில ஆட்டங்களை ஏற்படுத்தும் போதைக்கு நிகரானது. இப்பயணத்தை மாஸ்டருக்கு சமர்பித்த ஆசிரியருக்கும், அனுபங்களை அச்சிலேற்றி பதிப்பித்து வாசகர்களுக்கு தந்த சீர்மை பதிப்பகத்தாருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..!
No comments:
Post a Comment