Wednesday, 16 November 2022

அழிசி ஸ்ரீனிவாச கோபாலன்






























 


















நேற்று அழிசி ஸ்ரீனிவாச கோபாலன் வீட்டிற்கு சென்றிருந்தேன். எங்கள் திணை நிலத்தின் தலைநகரில் இப்படியான மௌனத்தில் ஊறும் கிராமத்திற்கு நான் போவது இதுதான் முதல் தடவை. திருநெல்வேலி & பாளையங்கோட்டை நகரங்களின் அதிர்வுகள் எதுவும் தொடாத ஓர் உள் கிராமம். அய்யங்கார் அக்ரஹாரம். ஆளொழிந்த வீடுகளின் கம்பி அழிகள் கடந்த காலங்களின் இருள்களுக்குள் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தன. அவன் அம்மா வாதுமை பால் தந்து வரவேற்றார்.

கோபாலனின் வீடு நூற்றாண்டுகள் பழமையானது. ஒட்டடை கட்டியும் ஆங்காங்கே சிதிலமடைந்துமிருந்தாலும் ஒரு வகையான கால வைராக்கியத்துடன் நின்று கொண்டிருக்கிறது. முன்னறைதான் கோபாலனின் இயங்குதளம். தன் இளமையின் எல்லா பொங்குதல்களையும் அமர்த்தி பிடித்துக் கொண்டு ஒரு வீறாப்புடன் செயல்படும் இளைஞன். தற்சமயம் கோபாலன் மூச்செல்லாம் க.நா.சுதான் நிறைந்துள்ளார். அடுத்தாற் போல அந்த நூல்களைத்தான் கொண்டு வரப்போகிறானாம்.

அவன் அப்பா ஓய்வு பெற்ற கண் தெரியாத குருக்கள். திருமணமாகாத தங்கை, பராமரிப்பைக் கோரும் வீடு என பொருளாதாரத்தின் எல்லா இழு கொக்கிகளின் முனைகளும் அவனை நோக்கியிருக்க பெரிய அளவு பொருளாதார உத்திரவாதமில்லாத இலக்கியம்,பதிப்பகம் என இயங்குகிறான். இதில் வரும் சொற்ப வருமானத்தில் பசியின்றி இருக்கலாம்.அந்த துணிச்சலும் தேர்வும்தான் அவனை நோக்கி என்னை போக வைத்தது.

பதிப்பிக்கப்படாத, தற்சமயம் அச்சிலில்லாத பழம் தமிழ் இலக்கியங்களை மீள பதிப்பிப்பதுதான் அழிசியின் பணி. தேவைக்கேற்ப அச்சிட்டுக் கொள்கிறான். மின் நூல் வெளியிடலும் உண்டு.வியப்பு தரத்தக்க வகையில் அவை பெரும்பாலும் விற்றுப் போய் விடுகின்றன. இதல்லாமல் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்காக நூல் வடிவமைப்பு, அட்டை அமைப்பு ஆகிய வேலைகளை செய்து கொடுக்கிறான். அது ஒரு நிலையான வருமானத்தை அளிப்பதாக சொன்னான் கோபாலன். ஆனால் முன்னைப்போல அழிசியின் வேலைகளுக்கான கொடுக்கும் நேரம் குறைந்து விட்டது என்றான்.

விடைபெற்று கிளம்பும் போது விடாப்பிடியாக மதிய உணவை உண்ண வைத்து விட்டார்கள்.. குழைய விட்ட சாதம், கீரைக் கடைசல், கோஸ் பொரியல், அப்பளம், மோர் என  அன்பிலும் நிறைவிலும் தோய்ந்த எளிய உணவு. வீட்டின் ஊரின் தனிமையில் நான் திளைக்கத் தொடங்க கோபாலனின் அம்மா சொன்னார் “ இங்கே பேசக்கூட ஆளில்லை. ரொம்ப லோன்லியா இருக்கு “ என்றார். அதைத்தவிர வாழ்க்கை மீது வேறெந்த முறையீடும் இல்லாத நிறைந்த முகத்தை உடையவர்.


No comments:

Post a Comment