வானொலி தனது இரண்டு
வருட பெருந்தொற்றுக்கால முடக்கிலிருந்து முழுமையாக கடந்த நவம்பர் 01, 2022 ஆம்
தேதியிலிருந்து மீளவும் கதை வாசித்து தரும்படி அழைப்பும் வந்தது.
பன்னிரண்டு
நிமிடங்களுக்குள் கதையை வாசித்து விடுமாறு கட்டளை. ஏற்கனவே எழுதப்பட்ட
கதையிலிருந்து தொள்ளாயிரம் சொற்களை நீக்கிய பிறகுதான் பதினைந்து
நிமிடங்களிலிருந்து பன்னிரண்டரை நிமிடங்களாக கதை கட்டுக்குள் வந்தது. சட்டைக்கேற்ப
உடலை குறுக்கிக் கொள்ள வேண்டியதுதான் போல.
பல தடவை
வாசித்து வாசித்து பார்த்து ஒத்திகை நடந்தது.ஒலிப்பதிவு நாளன்று
சளித்தொல்லை.குளிர்ந்திருந்த வீட்டின் டைல்ஸ் தரையில் முந்திய நாள் சாடைக்கு
சாய்ந்ததின் பேரில் சாடைக்கு என்றால் சில நொடிகள்தான்.இருமலும் சளியும் பெறுபேறாக
( இலங்கையில் விளைவை அப்படித்தான் சொல்கின்றார்கள். சளித்தொல்லையெல்லாம் ஒரு
பெறுபேறா?).விக்ஸ் மிட்டாயை நுனைத்துக் கொண்டே நல்ல தொண்டைக்கான பிரார்த்தனையுடன் நிலையத்திற்குள்
காத்திருந்தேன்.மூன்று நிகழ்த்துக் கலைஞர்கள் பள பள உடைகளுடன் வரவும் செண்டை மேளங்களின்
ஒலிப்பில் நிலையத்திற்கு விழிப்பு
தட்டியது.
வெள்ளிக்கிழமை
ஜுமுஆ நாள் என்பதால் காலை 10:30 மணிக்கு ஒலிப்பதிவை வைத்துக் கொள்ளலாம் என்று
முடிவு. உரிய நேரத்திற்கு நிகழ்ச்சி தயாரிப்பாளர் வந்தார். தொலைபேசியில் பேசிக்
கொண்டாலும் அப்போதுதான் முதன் முறையாக சந்தித்துக் கொள்கிறோம். உதடுகளில் ஒரு கால்
புன்னகை மட்டுமே.
ஒலிக்காக ஒலி
ஒடுக்கப்படும் முரண் அரங்கு. கனத்த கதவுகளுக்குப் பின்னால் ஒலிப்பதிவு தொடக்கம்.
இரண்டாவது பத்தியின் மூன்றாவது வரியை வாசிக்கும் போது வண்டி வேகமெடுக்கத்தொடங்கியிருக்க
கண்ணாடி தடுப்பின் அப்பாலுக்குள்ளிருந்து கையை
உயர்த்தினார் தயாரிப்பாளர்.. ஒலித்தடுப்பு இருப்பதினால் ஒன்றும் விளங்கவில்லை. அவரே
கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவர், “சார்! ராணி,
லக்ஸ் , சன்லைட் சோப்புக்கட்டிகள் என்று வணிக
பிராண்டுகள் வரக்கூடாது.” என கட்டளை பிறந்தது. நான்கு சொற்கள் மிச்சம்.
இரண்டு நாள் இருமலின்
முனை அடித்தொண்டையை தாண்ட முயலவில்லை. ஆனால் வேறொரு அசௌகரியம் வந்தது.மூச்சு கட்டி
வாசிப்பதினால் ஏற்படும் இளைப்பு ஒலிவாங்கிக்குள் இறங்குவதை தடுக்க அவ்வப்போது
வலப்பக்கம் தலையை திருப்ப வேண்டியிருந்தது. வானொலியில் நேரடியாக கதை வாசிப்பது இது
மூன்றாவது முறை என்றாலும் அடிச்சரடான பதட்டத்தை தவிர்க்க இயலவில்லை. சில தடவைகள்
மீட்ட வேண்டியிருந்தது.
மூன்றாம் பக்கத்தை வாசிக்கும்போது கட்டிட காந்தி
லாரி பேக்கரின் பெயர் வரவும் சேர்ந்திசை நிகழ்ச்சி இயக்குனரின் நெளிவுடன் தன் இரு
கைகளையும் அலைகளாக்கி அசைத்தார் தயாரிப்பாளர். லாரி பேக்கரும் காணாமல் போனார்.
நான்காம் பக்கத்தில் ஒரு பொருளுடைய நிறமாக காவியை குறிப்பிட்டேன். தன்
செல்பேசியில் ஆழ்ந்திருந்தவர் சுதாரித்துக் கொண்டு தலையை தூக்கப்பார்த்தார்.
அடுத்த வரிகளில் எதுவும் வில்லங்கமில்லாததால் தடை சொல்லவில்லை.ஒருவேளை செம்மையாக்கலில்
‘காவி’ தப்புமா? என்பது ஒலிபரப்பாகும்போதுதான் தெரியும்.
படிவத்தை
நிரப்பி கையெழுத்திடச்சொன்னார் தயாரிப்பாளர். ஆள் செதுக்கு சொல்லர் போல.
கேட்டதுக்கு மட்டுமே விடை. இஞ்சிக்கும் முரப்பாவிற்கும் இடைப்பட்ட வகைமை.
நிலையத்தை விட்டு கிளம்பு முன்னர் நிகழ்ச்சி
பொறுப்பாளரையும் நிலைய இயக்குனரையும் பார்த்து சலாம் சொல்லப்போனேன். எனது பெயரை
அறிந்தவுடன் நிலைய இயக்குனர் “ நீங்க அனுப்பிய சங்கிலியுடன் கூடிய மணியை எங்கள்
கூட்டரங்கில் தொங்க விட்டுள்ளோம். ஓவிய தடுக்கையும் அங்குதான் வைத்துள்ளோம் “ என
புன்னகைத்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு அனுப்பிய நினைவுப்பரிசில்கள் அவை. அவை
என்னவாயிற்று ? என யாரிடமும் கேட்க இயலாமலிருந்தேன். அரசு அலுவலகத்திலிருந்து
தொடர்பாடல் என்பது புலியிடமிருந்து பாலைக் கறப்பதற்கு சமம்தான். “ நான் இங்கு
ஒலிப்பதிவு செய்த கதையே அம்மணியைப்பற்றிதான் அய்யா” என்றேன்.இன்றுதான் மணி
ஒழுங்காக அடித்திருக்கிறது.
No comments:
Post a Comment