அரையிருட்டில் எண்ணூர் நெடுஞ்சாலையில் பாரம் ஏற்றிச் செல்லும் சரக்குந்துகளை வழி மறித்து கை மடக்கு வாங்கிக் கொண்டிருந்த சார்ஜண்ட் மாசானமுத்து தமது துறை சங்க காலத்திலிருந்து ஊர்க்காவல் என்ற பெயரில் அறியப்பட்டிருந்ததாக புதியதாக வேலைக்கு சேர்ந்த தர்மபுரியைச்சேர்ந்த இளநிலைக்காவலரிடம் பெருமையடித்துக் கொண்டிருந்தார்.
எழும்பூரில் உள்ள வெள்ளையர் காலத்து கட்டிடத்தில் இயங்கி வந்த பழைய காவல் ஆணையர் அலுவலகத்தை ஒரு வருடத்திற்கு முன்னர் காவல் அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். மாசானமுத்து சொன்னது போலத்தான் அதில் உள்ள தகவல் பலகையில் எழுதியும் வைத்திருக்கின்றனர்.
முறுக்கு மீசையும் பூச்சைக்கண்களுமாய் உள்ள வெள்ளைத்துரைமார்கள் தொடங்கி சைலேந்திரபாபு வரை புன்னகை வறண்ட முகங்களுடன் படங்களில் உறைந்து போயிருக்கின்றனர்.
கமுக்க ஆவணங்களுக்கான மெய்ப்பு அடிக்கும் அசசுப்பொறி, கமுக்க ஆவணங்களை அழிப்பதற்கான இரும்பு பொறி, பல்வேறு வகையான ஆயுதங்கள், தகவல் தொடர்பாடல் கருவிகள், வெடிகுண்டு கண்டு பிடிப்பு பிரிவு, கள்ள பணத்தாள் கண்டுபிடிப்பு பிரிவு, கடலோர ரோந்து பிரிவு, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு, பேரிடர் மீட்பு பிரிவு, காவல் இசைக்குழு, சிறை என களை கட்டுகின்றது அருங்காட்சியகம்.
செவ்வாய்கிழமை வார விடுமுறை. நுழைவுக்கட்டணம் பத்து ரூபாய்கள்தான். கட்டணமிருப்பதை அறியாமல் நான் அருங்காட்சியகத்திற்குள் நுழைந்து எல்லாம் பார்த்து முடித்த பிறகு " சார் டிக்கட் எடுத்தாச்சா?" என்றார் பணியிலிருந்த முகம் மறைத்திருந்த அழகிய பெண் காவலரொருவர். எனது அறியாமையை சொன்னவுடன் அவர் போய் சக பெண் காவலர்களிடம் சொல்ல அவர்கள் என்னிடம் வந்து " சார் நீங்க போலீசா?" என கேட்டனர். "இல்லை" என்றவுடன் " அப்போ ஏன் டிக்கட் ஏன் எடுக்கல?" என்றவர்களிடம் " அதான் வெளியப்போறேன்" என்றேன்.
அடுத்த முறை போகும்போது விட்ட கடனுக்கு இரண்டு நுழைவுச்சீட்டு எடுத்து காவல் நங்கைகளிடம் மாப்பு கேட்க வேண்டியதுதான்.
அங்கிருக்கும் காவலர்களிடம் சில தகவல்களைக் கேட்டேன் விளக்கம் சொன்னார்கள். கேட்கப்படாத ஒரு கேள்வி மட்டும் மிச்சமிருக்கின்றது.
"காவல் நிலையத்தில் மாட்டும் மனிதர்களை சித்திரவதை செய்யும் முறைகளையும் கருவிகளையும் காட்சிப்படுத்தியிருக்கலாமே" என்பதுதான் அந்தக் கேள்வி.
தர்மபுரி நக்சல் தோழர்களை போலி மோதல்களில் கொன்றவரும் வீரப்பன் பெயரைச்சொல்லி மலைவாழ் பெண்களை தின்றவருமான வால்டர் தேவாரத்திற்கு குடியரசுத் தலைவரிடம் கிடைத்த கைத்துப்பாக்கியை இங்கு காட்சிப்படுத்தியிருக்கும்போது நிலுவையில் உள்ள எனது கேள்வியும் சரிதானே?
சார்ஜண்ட் மாசானமுத்துவிற்கு நடந்த சின்ன அவமானத்தையும் சொல்லி அருங்காட்சியக படலத்தை முடிப்போம்.
வழமையாக வழிமறித்த சார்ஜண்ட் மாசானமுத்து கையில் சரக்குந்து ஓட்டுனர் அவசரமாக கைமடக்கை வைத்து விட்டு வண்டியை இழுத்து விட்டார். கை முட்டியை பிரித்து பார்த்த சார்ஜண்டு மாசானமுத்துவிற்கு ஒரே அதிர்ச்சி. கையிலிருந்தது பணத்தாளில்லை. பழைய கஞ்சன்ஜங்கா லாட்டரிச்சீட்டு. ரௌத்திரத்துடன் நிமிர்ந்து பார்த்தார் மாசானமுத்து. டீசல் புகை மண்டலத்தில் சரக்குந்தின் பின்பக்கம் மஞ்சளும் கறுப்புமாக தெரிந்தது.
No comments:
Post a Comment