Monday 26 July 2021

எறும்பு நீச்சல்

 

 

உள்ளூரில்  வாங்கிய மார்த்தாண்டம் தேனில்  தித்திப்பு கூடுதலாக  இருந்தது  என்று திருச்செந்தூரில் உள்ள காதி சர்வோதய சங்க தேன் குடுவையொன்றை வாங்கினேன்..




 

என் மேசைப்புறத்தில் இருக்கும்  இந்த  குடுவைத்தேனுக்கு என்னுடன் எறும்பார்களும்  ஒரே  போட்டி. எவ்வளவுதான் இறுக மூடி வைத்தாலும் மூடிக்கும் குடுவையின் வாய்க்குமான இடைவெளியை  நுணுகி கண்டுபிடித்து  உள்ளுக்குள் அதி அக்கிரமமாக நுழைந்து விடும். கள்ளக் குடியேற்றக்காரர்களான எறும்பு கூட்டம்.

 

மருந்து சாக்கட்டி கொண்டு வரைந்து கொல்லும் துன்பியல் வழிமுறைகளில்  நாட்டமில்லை. அகழி ஒன்றை உண்டு பண்ணினேன். வாயகன்ற ஞெகிழி கலன் ஒன்றை எடுத்து அதில் நீர் நிறைத்து  நடுவே  தேன் குடுவையை வைத்தேன். கொஞ்ச நாட்களுக்கு சிக்கல் ஒன்றுமில்லை.

 

ஒரு நாள் காலை  தேன் குடுவையை எடுக்கப்போகும்போது  மூடி, வாய் என எல்லா பக்கமும் எறும்பு. கறுத்த பேக்காலி எறும்பு. கடித்து தொல்லை தராதவை. என்ன நடந்தது? என கலனுக்குள் உற்று நோக்கினேன். தண்ணீரெல்லாம் அப்படியேதான் இருந்தது.  கலன் நீரை மாற்றிப்பார்த்த்தேன். குடுவையின் வாய் முகம் கமுக்கட்டு என குழந்தையை கழுவவுவது பொல கழுவினேன். ஆனாலும் வெற்றிகரமாக எறும்பார் படையெடுப்பு  தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றது

 

அப்புறம்தான் கதையே தொடங்குகின்றது. ஞெகிழி கலனின் வழுவழுப்பான பரப்பையும் எளிதாக ஏறிக்கடக்கும் எறும்பார்கள் நான்கைந்து பேர் சேர்ந்து சதுரமாக கைகோர்த்துக் கொண்டு கலன் நீரில் இறங்குகின்றனர். சுழன்று சுழன்று குடுவையைத் தொட்டு ஏறிக்கொள்கின்றனர். ஏதோ  ஒரு முன்னத்தி எறும்பு இப்படி தண்ணிக்காட்டு  அரசனாக மிதந்து குடுவையை தொட்டு வெற்றி பெற்ற செய்தியை மற்ற எறும்பார்களுக்கு  கை முரசறைந்து ஒலிபரப்பியிருக்க வேண்டும்.



 

மூடியைத்திறந்தால் குடுவையின்  உள் சுவர்களில் உள்ள தேன் பிசுக்கில் இரண்டு எறும்பார் ஒட்டிக் கொண்டு உயிரிழந்திருக்கின்றார்கள். தேன் கடலில் இன்னும் இரண்டு எறும்பார் மூழ்கி வீர இறப்பின் பேற்றை பெற்றிருந்தன. மாற்றவியலாததை ஒப்புக் கொள்வதுதான் இயற்கையோடு இயைந்த வழி. உள்ளங்கையில் தேனூற்றி நக்கும்போது எறும்பாரையும்  நான் கழித்து நீக்குவதில்லை. இறந்த குற்றத்தை விழுங்கி கழிந்தது கணக்கு.

 

உனக்குள்ளது உனக்கு எனக்குள்ளது எனக்கு என்ற  சமரசத்தை நாங்களிரு பக்கமும் ஒப்புக் கொண்டு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த நாளில் கை அலம்பும் வட்டிலில் கொத்து கொத்தாக எறும்புகள் அணிவகுத்துக் கொண்டிருந்தன. “ச்சை” என்ற அருவருத்த என் இல்லாள் கையோடு கீழ் வீட்டிலிருந்து மருந்து சாக்கட்டியை எடுத்து வந்து விட்டாள். தொழுது கொண்டிருந்த எனக்கு அவளின் இனப்படுகொலை எத்தனம் மூளையில் உறைக்கவே விரைவாக தொழுகையை நிறைவு செய்தேன்.

 

நான் முந்துவதற்குள் அவள் கை முந்தி விட்டது. கதவு முக்கிலிருந்து  வட்டில் வரை மருந்துக்கோட்டை இழுத்து விட்டாள். வைக்கம் பஷீரின் கருணையை  வரித்துக் கொள்ள எனக்கிருந்த ஒரே வாய்ப்பையும் அவள் தட்டிப் பறித்து விட்டாள். ஆவேசத்துடன் கிளம்புவது அல்ல வீரம். அது செயலாகி  முடியும்போதுதான் வீரம் உண்மையில்  முழுமை பெறுகின்றது என்ற பாடத்தை என் இல்லாளுக்கும் செத்துக்  கொண்டிருக்கும் எறும்பார் படலத்திற்கும்  கேக்காத வகையில் முணுமுணுத்துக் கொண்டேன்.

No comments:

Post a Comment