Wednesday, 10 June 2020

தடிமனுக்கு இப்பால்……





இன்றுடன் ஐந்து நாட்களாகி விட்டது.






மூக்கில் நசநசப்புடன் கூடிய குறு குறுப்பு.  மூக்கின் உச்சத்தின் வழியாக கண்களில் நீர் கோர்த்து பின்னர் மைல் வேகத்தில் பாயும் தும்மல். தும்முவதின் சுகம் பெற முடியாமலாக்கும் தும்மலுடன் சேர்ந்து கொள்ளும்  தொண்டைப்புண்ணின் அதிர்வு. வியர்க்கின்றதே என் மின்விசிறியை இயக்கினால் தலையின் ஒவ்வொரு மயிர்க்கால்களுக்குள்ளும் ஈரம் பொழிந்து மண்டை கனக்கின்றது. மின் விசிறியை நிறுத்தினாலோ கழுத்திற்கும் இடுப்பிற்கும் இடைப்பட்ட பகுதியில்  வியர்வையின் மொத்த உற்பத்தி நடக்கின்றது. என் நாற்றம் எனக்கே பொறுக்கவில்லை.



பொதுவாக எனது உடல் நீர்க்கோவைக்கு அதாவது பீனிசத்துக்கு வாசியானது.  கோடைக்காலம் கழிந்து மழைக்குள்ளும் மழையிலிருந்து குளிருக்குள்ளும் பருவ காலங்கள் நுழையும்போது இவைகள்  தந்து விட்டு செல்லும் சிறு பரிசு. இரண்டு மூன்று நாட்கள் நீடிக்கும். அதன் பிறகு வந்த வழியே திரும்பி விடும்.



ஆனால் இம்முறை  பீனிசத்தின் தங்கல் நாட்களின்  எண்ணிக்கை கூடி விட்டது. ஐந்து நாட்களாகியும் என்னை விட்டு அகன்றபாடில்லை. ஒவ்வொரு நோய்மையிலும் ஒரு சங்கேதம் ஒரு குறியீடு ஒரு மறை செய்தி பொதியப்பட்டுள்ளது என்பார் தத்துவ ஞானிகள். இந்த தடிமனின் வழியாக நான் அறியப்பெற்ற மகா ஞானம் எனக்கு வயதாகி விட்டது என்பதுதான்.


பீனிசம்,  ஒற்றைத்தலைவலி, தசையிறக்கம், வயிற்று வலி உட்பட எந்த சிறிய பெரிய   நோயானாலும் சரி.  சிறியது பெரியது என்பதெல்லாம் அவற்றின் பெயர்களில் மட்டுமே. அவற்றில் ஏதாவது ஒன்று நம்மை ஆட்கொள்ளும்போதுதான் வேட்டையாடும் விலங்கின் மூர்க்கத்தை, நோய்மைகளின் நகம், பற்களின் கிழிக்கும் கூர்மையை அணு அணுவாக நுகர முடிகின்றது.  தங்களின் வயிறு நிரம்பும் வரை அவை நம்மை குதறுவதை நிறுத்துவதேயில்லை,


மனைவி தந்த குளிர்மையேறிய  தர்ப்பூசணி பழரசம்தான் இந்த பீனிச வேட்டை விலங்கு எனக்கு விரித்த முதல் வலை.   சப்பி சப்பி குடித்தாகி  விட்டது. ஒரு மணி நேரத்தில் தொண்டை இடறத்தொடங்கியது. பொடு போக்காக இருந்து விட்டேன்.



பல்வேறு காற்றழுத்த மண்டலங்களின் அனுசரணையால் இவ்வருட கோடை பெரிதாக அதன் உச்சத்தை தொடவில்லை . முவ்வேளை மாடி உலாவின் போது தரையும் காற்றும் எவ்வளவு  குளிர்ந்த போதிலும் வெறும் மேலுடன் உலாவுவதும் தரையில் பாயின்றி படுப்பதுமாக தொடர்ந்தது.   உண்மையில் இது கோடைதானே என்ற என் தர்க்க புரிதலின் வழியாக நான் நடந்து கொண்டது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நோய்மையின் இன்றைய  நாட்கள் ஐயந்திரிபின்றி  நிரூபித்து விட்டன.



வற்றாமல் சளி ஒழுகும் மூக்கு.  நெற்றி, முகம், கபாலம்  ஆகியவற்றின் காற்றறைகளுக்குள் அக்கிரமிப்பு செய்து குத்தி தெறிக்க வைக்கும்  நீர்க்கட்டு – இவற்றின் சல்லியத்தில் இரவு பகல் உறக்கமில்லை  குளிப்பில்லை, ஒளூ இல்லை, முறையான தொழுகை ஓதல்கள் இல்லை வாசிப்பில்லை யாருடனும் பேசப் பிடிக்கவில்லை . தோட்டத்திற்கு நீரூற்ற இயலவில்லை ஆடு காக்கை பூனை எல்லாவற்றிற்கும்  “பூ” ஒற்றை விளிச்சொல்லையே  அளிக்கும் என் திராட்சைக்கண் குளிர் பேத்தியை தொட்டுத்தூக்க  இயலவில்லை. .


 இரண்டு காது துளைகளிலும் பஞ்சு. இரண்டு காதுகளையும் சேர்த்தாற்போல துணிக்கட்டு,  நெற்றியிலும் தலையிலும் சுக்கு பற்று, சுட்ட செங்கல் ஆவி பிடித்தல்,, பச்சை மருந்து ஆவி பிடித்தல்,  நீர் சுக்கு கஷாயம் & ஆவி காட்டல், உள் நாட்டு வெளி நாட்டு தைலாதிகள் என எதற்கும் மசியவில்லை. ஆவி பிடிக்கும்போது கிடைப்பது  தற்காலிக ஆறுதல் மட்டுமே.


தொற்றிப்பிடிக்கும் நோய்மைகள்  உடலுடன் உண்ர்வுகளையும் சேர்த்தே தின்கின்றன. வழமையின் சோர்வு அன்றாட வாழ்க்கை உண்டாக்கும் சலிப்பிலிருந்து தப்பிக்க பயன்படும் எழுத்தையும் வாசிப்பையும் இந்த தடிமனானது  கையிலெடுக்கவே அனுமதிக்கவில்லை.  எனது நம்பிக்கைகள், விருப்பங்கள், இலக்குகள் அனைத்தும் சுடு தரையில் பட்ட  நீர்த்துளி போல ஆவியாகி விடுகின்றன.  அன்றாட செயல் அட்டவணை முடங்கி  ஒவ்வாமை விலகல், எரிச்சல் இவை மட்டுமே எஞ்சுகின்றன. இனிய நினைவுகளையும் எண்ணங்களையும் சுட்டு கரித்து அவ்விடத்தில் ஆற்றாமையும் அவ நமபிக்கையுமே மீதமிருக்கின்றன. “ நீ ஒன்னுமேயில்லடா” எனபதை சிரசிலடித்து கற்றுத்தருகின்றது சளி.



வலி உண்டாக்கும் நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க ஓரளவு உதவியதென்றால் என்  மடிக்கணினியிலுள்ள திரைப்படங்கள்தான் . சில மணி நேரங்களுக்கு திரைப்படம் என்னை தனது கைகளில்  முழுமையாக எடுத்துக் கொள்ளும்.  கலை மரப்பு.


இரண்டு நாட்களாக நீர்க்கட்டு தனது பிடியை கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகின்றது. இதை எழுதும்போது கூட பின்னந்தலையிலிருந்து பொட்டு வரை நாண் போல நீளும் நீர்க்குத்து.  “ நீ இன்னமும் என் வாயில்தான் இருக்கின்றாய்” என்ற நினைவூட்டல்.


பொதுவாக நான் நோய் வாய்ப்படும்போது மருந்தெடுப்பதில்லை. தானாக சரியாகும் வரை காத்திருப்பேன். சரிவரவில்லையென்றால் ,மரபு வழி மருத்துவ முறைகளை கையாளுவேன். அரிதாகத்தான் ஆங்கில மருந்துகளை எடுப்பதுண்டு.


நான் படும் சிரமங்களைப் பார்த்து விட்டு வீட்டார், “ டாக்டர்ட்டே போய் ஊசி போட்டுக்கிட்டா என்னா?” எனக்கேட்டவர்கள் அவர்களே அதற்கான மறுமொழியையும் சொல்லிக் கொண்டனர்.


“ சளி காய்ச்சலுன்டா தனியார் டாக்டருகள் பாக்க மாட்டானுவலாமே தர்மாஸ்பத்திரிக்கு போலாம்ன்டு பாத்தா கொரோனான்டு கொண்டு போய் அடச்சிருவானுலே” என்ற மருகல்.   


இது பெருந்தொற்றுக்காலத்தில்  சளி இருமல் காய்ச்சல்  என்றால் பொதுமக்களும் தனியார் மருத்துவர்களும் அலறுகின்றனர். பொதுமக்களின் அச்சம் அறியாமையிலிருந்து பிறப்பது. அதனால் அதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் தனியார் மருத்துவர்களின் மறுப்பென்பது மானுடத்திற்கெதிரான பெருங்குற்றம்.   சளி இருமல் காய்ச்சல்  அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை பார்க்க வர வேண்டி வருமென்பதால் தனது சிகிச்சாலயத்தையே மூடி விட்டவரும் நமதூரில் உண்டு.  எனது வீட்டுக்கருகில் இருக்கும் மருத்துவரொருவர் தனது சிகிச்சாலயத்தை இன்னமும் மூடியே வைத்துள்ளார்.


 நடப்பான காலங்களில் பொதுமக்களின் நோயிலிருந்து உண்டாகும் வருமானத்தை உண்டு வாழும் இந்த தனியார் மருத்துவர்களில் பெரும்பாலோர்   நெருக்கடி காலத்தில்  விளக்கு போட்டவுடன்  இருள் மூலைகளுக்குள் ஓடி மறையும் நச்சு உயிரிகளைப்போல பதுங்கிக் கொள்கின்றனர். அறமழிந்தவர்கள். இறைவனின் மண்ணுல பேராளர்களில் ஒருவராக கருதப்படும் மருத்துவர் தனது கடமையை மறுப்பதை எந்த சொற்களுக்குள்ளும் கொண்டு போய் அடைக்கவியலாது.


சளி தரும் வலியை விட நோய்க்காக மருத்துவமனைக்கு போக முடியாதென்ற பெருந்தொற்றுக்கால பருண்மைதான் பெரும் வலியை உண்டாக்குகின்றது. உயிரளவில் வதைக்கின்றது.






No comments:

Post a Comment