Monday, 27 April 2020

லத்தீஃப் ஹாஜியார் மறைவு






எனது ஆசிரியரும் காயல்பட்டினம் முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியின் நிறுவனர்களில் ஒருவரும் வரலாற்றாய்வாளரும் சமூக நலப்பணியாளருமான முனைவர் ஹாஜி ஆர்.எஸ்.அப்துல் லத்தீஃப் (எ) லத்தீஃப் ஹாஜியார் இன்று காலமானார்.

கடைசியாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு  அவரது இல்லத்தினருகே லத்தீஃப் ஹாஜியாரை சந்தித்தேன். கடையில் ஏதோ வாங்கி விட்டு ஊன்றுகோலுடன் வந்தார்.

நான் 1985-87 வரை முஹ்யித்தீன் மெற்றிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியில் பயிலும்போது அன்னாரிடம் கற்றிருக்கின்றேன். +2 பொதுத்தேர்வின் முதல்  நாளில் ஜம்ஜம் நீர், பேரீத்தம்பழத்துடன் ஹாஜியார் எங்களுக்காக தந்தையின் கரிசனத்துடன் துஆச் செய்தார். நல்ல விளையாட்டு வீரரும் கூட. தனது மாணவர்களுடன் இணைந்து சமமாக விளையாடுவார்.

காயல்பட்டினத்தின் வரலாறு என எந்தவொரு நூலும் இல்லாத நிலையில் அதைப்பற்றிய அறிமுக நூலை அன்னார்தான் கொண்டு வந்தார். வெளி நாட்டிலிருந்தும் உள் நாட்டிலிருந்தும் ஏராளமான வரலாற்றாய்வாளர்கள் மாணவர்கள் அவரை தேடி வந்த வண்ணமிருப்பர்.  தன்னுடைய முதுமையின் தளர்வை பொருட்படுத்தாமல்  குன்றா ஊக்கத்துடன் விளக்கங்களை அளிப்பார்.

அமெரிக்கா,கேரளத்திலிருந்து வந்த ஆய்வாளர்களை பலமுறை நான் அவரது இல்லத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றேன். முற்கூட்டியே தகவல் சொல்லாமல் கூட்டிச் செல்லும்போது கோபப்படுவார்.உடனே தணிந்து தனது முழு ஒத்துழைப்பையும் நல்குவார்.

டிசம்பர்2019 மாதம் கொச்சியிலிருந்து வந்திருந்த அணியினர் அவரிடம் விரிவான நேர்காணலைக்கண்டனர். அப்போதும் ஒரு இளைஞனைப்போல எல்லா தகவல்களையும் அளித்தார்.

இறுதி வரைக்கும் செயலூக்கமும் நினைவாற்றலும் கைவரப்பெற்றவர். கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் பள்ளிக்கூட& வரலாற்று வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுதான் இருந்திருக்கின்றார்.

முழுதாக வாழ்ந்து புனித ரமழானில்  நிறைந்திருக்கின்றார்.








No comments:

Post a Comment