நோன்பு
ஃபக்கீர்கள் குறித்த மனுஷ்யபுத்திரனின் கவிதை
சஹர் காலம் வந்துவிட்டது
சஹர் முஸாபர்கள் எப்போது வருவார்கள்?
இந்த நோன்புக்காலத்தின் தனிமை
அச்சமூட்டுகிறது
வெளியேயிருந்து ஒரு குரல் வேண்டும்
பச்சை நிறத்துணியால் தலைப்பாகையிட்டு கழுத்தில் பெரிய மணிகளின் குருமந்தங்காய் மாலைகளை அணிந்து
செருப்பில்லா கால்களுடன்
'தாயிரா'விலிருந்து தீப்பறக்கும் இசை எழுப்பி
பின்னிரவில் நோன்பிற்காக எழுப்பும்
பக்கீர்கள் எப்போது வருவார்கள்?
அவர்கள் எந்த வீட்டிலும் இரந்து நிற்பதில்லை
எந்தத் தெருவிலும் காத்து நிற்பதில்லை
அவர்களுக்கு முன்பாக வேகமாக
நடந்துபோகிறது அவர்கள் கையிலிருந்து
இசையொலி
அலாரங்கள் வந்துவிட்டபிறகு
சஹர் முஸாபர்கள் காலத்திற்கு
ஒவ்வாதவர்களானார்கள்
நான் அவர்கள் குரலை கடைசியாக
எந்த சஹரில் கேட்டேன் என்பதுகூட
எனக்கு நினைவிலில்லை
அவர்கள் இந்த நகரத்தில்
எங்கேனும் ஒளிந்திருக்கக் கூடும்
அவர்கள் பாடும்
இறைவனின் அருள்கீதம் ஒன்றுடன்
இந்த முதல் சஹருக்க்கு
கண் விழிக்க விரும்புகிறேன்
அவர்கள் மாயாவிகளைபோல
வந்து மறைபவர்கள்
ஊரடங்கு விதிகள்
அவர்களைத் தொடும் முன்பே
அவர்கள் ஊரைவிட்டுப்போய்விடுவார்கள்
சஹர் முஸாபர்களின் இசையொலி
இந்தக் காலத்திலிருந்து
என்னை வேறொரு காலத்திற்கு
இட்டுச் செல்லும் அது
தெருக்களில் மனித நடமாட்டமிருக்கும்
இரவொன்றின் காலம்
அற்புதங்கள் நிகழும் ஒரு காலை
நான் நோன்பிருக்க
சஹர் முஸாபர்களை வரச்சொல்
அல்லது அந்த ஆண்டவனை.
25.4.2020
இரவு 12.46
மனுஷ்ய புத்திரன்
---------
மனுஷ்யபுத்திரன்
இந்தக்கவிதை வரிகளை எழுதி சரியாக நாற்பத்தேழு நிமிடங்கள் கழித்து என் நித்திரைக்குள்
வந்து புகுந்தது இந்த வருட ஃபக்கீரப்பாவின் முதல் ஸஹர் கொட்டு ( தாயிரா )ஒலி.
ஃபக்கீரப்பாவிற்கு
சொந்த ஊர் மேலப்பாளையம். காயல்பட்டினத்துக்கு
தனிப்பட்ட வேலையாக வந்தவர் பெருந்தொற்று ஊரடங்கில்
சிக்கிக் கொண்டார். நோன்பு பெருநாளைக்கு சொந்த ஊரில் இருக்க முடியுமா? என்ற உறுதியின்மை
வழமையான தோல்
கொட்டின் கச்சிதமான ஒலி இல்லை. “தொம் தொம்” என பேரிகையின் பெரும் அதிர்வு போலஅதிர்ந்தது.
போய்ப் பார்த்தேன் அவர் கையில் இருந்தது செயற்கை இழை கொட்டு. கொட்டின் பரப்பில் அவரின்
விரல்கள் இழையும் ஒவ்வொரு முறையும் அவரின்
மண் சிலிர்த்துக் கொள்கின்றது.
அலாரங்களும்
செல்பேசிகளும் ஃபக்கீரப்பாவின் இடத்தைக் கைப்பற்றிக் கொண்ட வேளையில் “இந்த இரவுகளை யாருக்கும் நான் விட்டுக் கொடுப்பதற்கில்லை”
என்கிற பொது அறிவிப்பு அது. ஆம்! அவர்கள் நோன்பின்
இரவில் முளைத்து அதற்குள்ளேயே கரைபவர்கள். ரமழான் என்ற ஆண்டு மலரின் நித்திய இதழ்கள்.
மனிதச்சேவல்கள்.
-------------------------------------
No comments:
Post a Comment