Monday 10 February 2020

எல்லாம் கறுமை – மூவர் நினைவேந்தல்



எனது வலைப்பூவின் முகப்பில் சிறு திருத்தம் ஒன்றை செய்வதற்காக இலங்கை நண்பர் இன்ஸாஃப் ஸலாஹூத்தீனுக்கு புலன ஒலிக்குறிப்பொன்றை (வட்ஸப்) வைத்தேன். அவரிடமிருந்து மறுமொழி வந்தது. திறந்து கேட்டேன். ஊர் திரும்பும் ஒரு பயணத்தின் நடுவிலிருந்து பேசியிருந்தார். அவரது மச்சான் அதாவது தந்தை வழி அத்தையின் மகன், அருகிலுள்ள அணைக்கட்டுக்கு நண்பர்களுடன் நால்வராக குளிக்கப் போயிருக்கின்றனர். நீர்ச் சுழலுக்குள் இறப்பின் வாயில் திறந்திருக்கின்றது. இருவர் தப்பி விட மச்சானும் மற்றொரு நண்பரும் சிக்கி விட்டனர்.


சென்ற வருடம் நான் இலங்கைக்கு குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டபோது இன்ஸாஃபின் மச்சானை சந்தித்தேன். வளாகச் சுவரை விட உயரமாக முழு வாலிபக் குணங்களுடன் இருந்தார். வெளுத்த பையன். அவரது அம்மாவின் சமையலையும் சுவைத்தோம். மிகவும் எளிய குடும்பம்.


இன்று காலை எனது கால் நூற்றாண்டு கால கூட்டாளியும் ஹாஃபிழும் ஆலிமுமாகிய முஹ்யித்தீன் பக்ரீயின் றாத்தா( மூத்த சகோதரி ) காலமாகி விட்ட செய்தி முக நூலில் நின்றது. நண்பனுடன் பேசினேன், தங்களின் பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாத தீவிர சிகிச்சை. புற்று நோய்அதையெல்லாம் கணக்கில் எடுப்பதேயில்லைதானே. மாலை அய்ந்து மணிக்கு நல்லடக்கம் என்றார்கள்.


நல்லடக்கத்துக்கு போய் கொண்டிருக்கும்போதே எனது சாச்சி (தாய் வழி சித்தி) வீட்டு றாத்தா எதிர்ப்பட்டாள். அவளது தம்பி சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டிருந்தான். அவனை நினைவு கூர்ந்தவளாக அவன் உன்னை விட இளையவன்தானே என்றவளாக அவனைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அவன் நேரம் முடிந்து விட்டது போய் விட்டான் என்று ஆறுதல் கூறி பேச்சை முடிவிற்கு கொண்டு வந்தவனாக நான் நல்லடக்கத்துக்கு கிளம்பினேன்.


கூட்டாளியின் சகோதரியை அடக்கிக் கொண்டிருக்கும்போது  அந நிகழ்விற்கு வருகை தந்திருந்த தமிழக இஸ்லாமிய அமைப்பொன்றின் தலைவரும் ஆலிமுமாகிய கமாலுத்தீன் அவர்கள் அடக்க உரை ஆற்றினார். நம்மில் யாருக்கு எப்போது முற்றுப்புள்ளி விழும்  என்பதை சொல்ல முடியாது என குறு உரையொன்றை ஆற்றி முடித்தார். நண்பனுக்கு ஆறுதல் சொல்லி விட்டு தான் தங்கியிருந்த வீட்டுக்கு திரும்ப சென்றிருக்கின்றார். அந்த வீட்டில் ஒரே அமளி துமளி.


 வீட்டின் உரிமையாளர் தனது படுக்கையறையில் பேச்சுமூச்சின்றி மல்லாக்க கிடந்திருக்கின்றார். எல்லாம் முடிந்து விட்டது. நம்மில் யாருக்கு எப்போது முற்றுப்புள்ளி விழும்  என்பதை சொல்ல முடியாது என மையவாடியில் இவர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்திற்கு சற்றொப்பதான் அவரின் மூச்சும் அடங்கியிருந்திருக்கின்றது.


கடைசியாக இறந்த எஸ்ஸெம்மஸ் என்றழைக்கப்படும் செய்யது அஹ்மது காக்கா என்னை விட ஆறு வயது மூத்தவர். எனக்கும் அவருக்குமிடையே முப்பதாண்டு கால நட்பு. தனவந்தர். எல்கேஎஸ் குடும்பம். தீவிர வாசிப்பாளர். சொந்தமாக பதிப்பகமும் உண்டு. தன் செல்வத்தை பொதுப்பணிகளுக்கு கணக்கின்றி செலவழித்தவர்.


தனது  அரங்கை நாங்கள் நடத்தும்  நிகழ்ச்சிகளுக்கு மிகக் குறைந்த வாடகைக்குத்தான் தருவார். தன் முனைப்பையும் அகந்தையையும் காணவே முடியாது. எப்போது இயல்பாக இருப்பார்? எப்போது இயல்புக்கு வெளியே இருப்பார் என்பதை மட்டும் கணிக்கவியலாது. இணக்கத்திலும் பிணக்கத்திலும் தீவிரமானவர். புதிய ஊர்தி மாற்றி அதற்கான பதிவெண் கூட வரவில்லை. கடைசியாக நேற்றிரவு இஷா தொழுகையில் பார்த்தேன்.




ஆடை மாற்றி வீட்டில் கிடத்தியிருந்தார்கள். அவரது புத்தக பேழையை கடந்துதான் அவர் வைக்கப்பட்டிருந்த அறைக்கு செல்ல வேண்டும். லேசாக நீங்கியிருந்த பேழையின் கண்ணாடி பலகத்தின் வழியாக நுழைந்த கடற்கரைக்காற்றில், நூலின் வண்ண அட்டையின் முனை படபடத்துக்கொண்டிருந்தது. நூலின் தலைப்பு , “ இறைவனைத்தேடி “.


பாதையில் கட்டப்படும் தோரணம் போல ஒரு நாளின் வழி முழுக்க இறப்பின் அலங்காரத் தொங்கல்கள். எல்லாம் முடித்து விட்டு வீட்டுக்கு வந்தேன். ஆடை அறை  பேத்தி மடிக்கணினி  என எதைப்பார்த்தாலும் கறுமை பூசியிருந்தது. என்னைப்பார்த்தேன். நானுமே கறுமையாகத்தான் இருக்கின்றேன்.

------------------------------------

நேற்று வாழ்க்கையை நிறைவு செய்த  தோழர் எஸ்ஸம்மெஸூக்கு இன்று செவ்வாய்கிழமை ( 11/02/2020 ) மாலை  இறுதி விடை கொடுத்தனுப்பினோம்.

சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் உள்ள தோழமைகள் நல்லடக்கத்திற்கு வந்திருந்தனர். பெரும் திரள். அங்கிருந்து இங்கு வரைக்குமான பல வித நலன்புரி அறக்கட்டளைகளில் உறுப்பினராக இருந்திருக்கின்றார்.

ஏதிலியர் இல்லம், பாடசாலை, பள்ளிவாசல் எனத் தொடங்கி இலக்கிய சேவை குருதிக்கொடை வரை அவர் நிதியுதவி செய்த எண்ணற்ற அறப்பணிகள்.

வறிய வீட்டு சடலங்களுக்கான நல்லடக்கத்தின் முழு செலவுகளுக்கென தனி நிதி ஒதுக்கீடும் அவரின் செலவினங்களில் இருந்ததாக அன்னாருக்கு நெருக்கமான ஒருவர் கூறினார்..

அவருடன் உரையாடிய நாட்களிலெல்லாம் இது குறித்து ஒருபோதும் சொன்னதில்லை. அவரின் இறப்புதான் அவரின் நல்லறங்கள் அனைத்தையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.தனக்கு அருளப்பெற்ற நிதியைக் கொண்டு நற்சாட்சியம் பகர்ந்திருக்கின்றார்.

தோழரே! உங்களின் புறப்பாடு திடீரென இருந்தாலும் ஹூஸ்னுல் ஹாத்திம் என்ற அழகிய வாழ்க்கை நிறைவு. உங்களின் வாழ்வும் நிறைவும் பொறாமைப்படத்தக்கதுதான் எஸ்ஸமெஸ்.

No comments:

Post a Comment