Thursday 13 February 2020

பன்மய வானொலி -- பிப்ரவரி 13, 2020 உலக வானொலி தினம்



எனது உம்மா வீட்டில் இருந்த பிலிப்ஸ் வால்வ் வானொலியின் விசையை திருப்பியவுடன் இன்றைய டிரான்ஸிஸ்டர் வானொலிப்பேழையை போல உடனே குரல் வராது. இடது ஓரத்தில்  நெற்றித்திலகம் போல பச்சை விளக்கு மெல்ல உயரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.வால்வ் சூடாக வேண்டும்.

அதன் பிறகு நிலையத்தேடல் குமிழை மலரைப்போல நகர்த்த வேண்டும். ஒரு புள்ளி அசைவில் பலக் பலக் எண்ணற்ற நிலையங்கள் மொத்தமாக வந்து விழும்.  தேடல் முள்ளை நகராமல் நகர்த்துவது ஒரு கலை. எல்லாம் கூடி வந்த பிறகு சரோஜ் நாராயணசாமியும் கிராஅத்தும் சிறீலங்கா மாதா கீதமுமாக பேழை  நிரம்பி வழியும்.

இந்த பிலிப்ஸ் வானொலிப்பேழைக்காக என் வாப்பா தனியாக மரப்பேழை ஒன்றை செய்து வைத்திருந்தார்கள்.மொட்டை மாடியில் அதற்கென இரண்டு கழை கம்புகளை நாட்டி அலைவாங்கியும் நடப்பட்டிருந்தது.

இந்த பிலிப்ஸ் வானொலியை என் வாப்பா வாங்கிய அதே நேரத்தில்தான் சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு மஸ்ஜிதே மஃமூர் பள்ளியின் காலஞ்சென்ற இன்னிசை இமாம் ஜானி பாய் அவர்களும் வாங்கியதாகவும் எங்கள் பேழை கம்பீரமாக முழங்குவதை பார்த்து வானொலியை மாற்றிக் கொள்வோமே எனக் கேட்டாராம் ஜானி பாய். வாப்பா அவர்கள் மென்மையாக மறுத்து விட்டதாக சொன்னார்கள்.

 உலகப்போரின் சிப்பாய்களுக்கென தயாரிக்கப்பட்ட பழுப்பு சிவப்பு நிற வானொலிப்பேழை ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்தது. மின்கசிவு இருந்ததால் அதை யாருக்கோ கொடுத்து விட்டோம்.

அந்த நாளில் இலங்கை வானொலிக்குதான் தலையாய இடம். அந்த நாட்களில்  இன்னொரு நாட்டு வானொலியாக இலங்கை வானொலியை காயல்பட்டினத்தில் உணர்ந்ததேயில்லை.

இலங்கைக்கு பிறகு திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி இவைகள்தான் நடுவணலையில் எளிதில் பிடிபடுபவை. மதுரை நிலையமெல்லாம் நிறுவப்படவேயில்லை. சிற்றலையில் சென்னை வானொலிக்கு அப்புறம் வெளிநாட்டு வானொலிகளான மாஸ்கோ வானொலி, பெய்ஜிங் வானொலி, வெரித்தாஸ் வானொலி, பிபிசி தமிழோசை, ரேடியோ பாக்கிஸ்தான் தமிழ் ஒலிபரப்பு ஆகியன செவிப்பசியை ஆற்றியவை.

இதில் தலைமறைவு வானொலிகளை கேட்பது என்பது செவிகளையும் மூளையையும் ஒருசேர கிளர்த்தக் கூடியவை. ஒரு நாள் ஏதோ ஒரு நிலையத்திற்காக சிற்றலையில் முள்ளை திருப்பிக் கொண்டிருக்கும்போது “ மலாயா புரட்சிக்குரல் வானொலி நிலையம்” என்ற இழுவை அறிவிப்பில் மர்ம ஒலிபரப்பு சிக்கியது. அவர்களின் செய்தியறிக்கையில் , ‘ தலைவன்மார்கள் ‘ என உச்சரிப்பர். ஓரிரண்டு தடவை கேட்டதோடு சரி. அதன் பிறகு எப்போதும் அந்த இழுவைக்குரலை கேட்க முடிந்ததேயில்லை.


ஈழப்போராட்ட காலத்தில் புலிகள் உள்ளிட்ட தமிழ் ஆயுதக்குழுக்கள் சில கமுக்க வானொலி ஒலிபரப்புகளை நடத்தின. குறிப்பாக புலிகளின் வானொலியில் செய்திகளும் ராணுவப் பாணி பாடல்களும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும்போது சீரழிக்கும் மின் சமிக்ஞைகள் ஈய ஒலி ஊசிக் கொத்தாய் குறுக்கிடும். அவை இலங்கை அரசின் குறுக்கீடு வேலை என்பதை புரிய ரொம்ப நேரமாகவில்லை.  உடனே விடாமல் புலிகளும் பக்கத்து அலைவரிசைக்கு ஒலிபரப்பை மாற்றுவர். சுவாரசியமான ஒலி விளையாட்டு.

1980களின் தொடக்க ஆண்டுகள் வரை திருநெல்வேலி வானொலியானது பெரும்பாலான நிகழ்ச்சிகளை திருச்சிராப்பள்ளி, சென்னை, தில்லி நிலையங்களிலிருந்துதான் அஞ்சல் செய்யும். 1986 ஆம் ஆண்டில் தான் பாளையங்கோட்டை சரோஜினி பூங்காவில் திருநெல்வேலி வானொலி தனக்கான புதிய சொந்த கட்டிடத்தில் இயங்கத் தொடங்கியது. அதுவரை ஷாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் வாடகைக்கட்டிடத்தில்தான் செயல்பட்டு வந்தது.

திருநெல்வேலி வானொலி நிலையத்தில் நேயர்களுக்கான வெளி என்பதில் தாராளத்தன்மை இருக்கின்றது. நேயர்கள் தொகுத்தளிக்கும் திரை இசை நிகழ்ச்சியாகட்டும் ஆனந்த பூங்காற்று என்ற தினசரி காலை நேர நேரலை நிகழ்ச்சியாகட்டும்  நேயர் கடிதங்களாகட்டும் நேயர்களுக்கும் அறிவிப்பாளர்களுக்கும் உணர்வுப்பூர்வமான ஈடுபாடு இருக்கின்றது. மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருநெல்வேலி வானொலி முன்னிலை வகிக்கின்றது.

திருநெல்வேலி வானொலி நிலையத்தை உள்ளுக்கு சென்று மாயக்குரல்களின் உடைமையாளர்களை  நேரில் பார்க்க வேண்டும் என்ற என் இளம்பருவத்து ஆசைக்கு நாளும் குறித்தோம். ஆனால் புயல் மழை காரணங்களினால் போக முடியவில்லை. அந்த ஆசை கிட்டத்தட்ட முப்பத்தி மூன்று ஆண்டுகளுக்கு பிறகுதான் நிறைவேறியது. 2018 ஆம் ஆண்டு நடந்த காயல்பட்டினம் புத்தக கண்காட்சிக்கு அழைப்பிதழ் வழங்குவதற்காக செல்ல  நேரிட்டது. ஆனால் அந்த சிறுவயது கொதி நிலை எப்பவோ ஆறி அளந்து போய் விட்டிருந்தது. காரணம் அதற்கிடையில் தனியார் வானொலி வானொளி நிலையங்களுக்கு போவதற்கான வாய்ப்பு கிடைத்ததுதான். அதிலும் ஒரு வானொலி நிலையத்தை முதன் முதலாக நேரில் பார்த்து அதன் ஒரு மணி நேர நேரடி ஒலிபரப்பில் கலந்து கொண்டது என்றால் இலங்கை வானொலியின் முஸ்லிம் சேவையில்தான். 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நானும் நண்பர் எஸ்.கே.ஸாலிஹும் வானொலிக்காக மட்டுமெ இலங்கைக்கு போனோம்.

மாஸ்கோ,பெய்ஜிங், லண்டன் பிபிசி வானொலி நிலையங்களின் வெளி நாட்டு தமிழ் ஒலிபரப்பு பிரிவினர் தங்களின் நேயர்களை பாராட்டி சீராட்டுவது போன்றவற்றையெல்லாம் அகில இந்திய வானொலியிடமிருந்து இன்று வரை எதிர்பார்க்க முடியவில்லை. குறைந்த பட்சம் வெளி நாட்டு ஒலிபரப்பிறகாக தூத்துக்குடியிலிருந்து செயல்படும் இலங்கைக்கான வானொலி நிலையத்திலும் இது போன்ற உபசரிப்பு இல்லை.

தூத்துக்குடி வானொலி நிலையத்தாருக்கு இதற்கெல்லாம் நேரம் எங்கே இருக்கின்றது? தமிழில் ஒரு எழுத்து கூட அறியாத கேரளியர் அதன் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். கேரளம், தமிழ் நாட்டில் வெறுப்பை பரப்பியதாக அவர் மீது பதியப்பட்டுள்ள  வழக்குகளில் இப்போது பிணையிலிருக்கின்றார். நீதிமன்றங்களுக்கு அலையவே நேரஞ்சரியாக இருக்கின்றது. அவருக்கு அடுத்த நிலை பொறுப்பிலுள்ளவருக்கும் தான் ஒரு அரசுப்பணியாளர் என்பது நினைவிலிருப்பதேயில்லை. இயக்குநரைப்போலவே இவரையும் சாதி மத அரசியல் காழ்ப்புதான் வழி நடத்துகின்றது. குறிப்பாக, தமிழகத்தின் ஏனைய வானொலி நிலையங்களெல்லாம் தேசத்தந்தையின் நினைவு நாளில் சிறப்பாக நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப தூத்துக்குடி நிலையம் மட்டும் அப்படி ஒரு தினம் இருப்பதாகவே கண்டு கொள்ளவில்லை.

யுனெஸ்கோ  அமைப்பு அறிவித்துள்ள இவ்வாண்டின் உலக வானொலி தினத்தின் (பிப்ரவரி 13,2020) கருப்பொருள்: செய்திக்கூடங்களிலும் வானொலிகளிலும் பன்மயத்தை உயர்த்தி பிடித்தல்.


இக்கருப்பொருளின் விரிவாக்கம்:

1.பொது, தனியார், சமூக ஒலிபரப்பாளர்கள், வானொலியில் பன்மயத்தை முன்னெடுத்தல்

2.செய்தி கூடத்தில் பன்மய சமூக குழுக்களை உள்ளடக்கிய அணிகளின் பிரதிநிதித்துவத்தை ஊக்குவித்தல்

3.தொகுப்பாளரின் உள்ளடக்கத்தில் பன்மயம், பல்வகை நேயர்களை எதிரொலிக்கும் நிகழ்ச்சி – ஆகியனவற்றை ஊக்குவித்தல்


இந்த மாதிரி வெறுப்பை சுமக்கும் ஆட்களுக்கு மக்களுக்கான ஊடகத்தில் மக்களே தலை என்ற இந்த ஐ.நா பிரகடனத்தை தலையில் பதிக்க வேண்டும்.

அகில இந்திய வானொலி நிலையங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட தடங்கலாக இருப்பதற்கு நடுவணரசின் பார்வையும் நிதி ஒதுக்கீடும் தலையாய காரணம். இப்பொதெல்லாம் வானொலிகளில் நிரந்தரப்பணியாளர்கள் நியமிக்கப்படுவதில்லை. புதியவர்கள் தற்காலிக அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கான ஒலிப்பதிவு என்பது கிட்டதட்ட இல்லை எனலாம். பணம் செலவழிக்க அணியமாக இல்லை அரசு. விளம்பரதாரரை பிடி அவரைப்பிடி இவரைப்பிடி என்ற கெடுபிடி வேறு. தனியார் பண்பலைகள் பணம் ஈட்டுவதைப்பார்த்தவுடன் அரசுக்கும் புத்தி கெட்டுப்போய் விட்டது.

பேரிடர் காலங்களில் நவீன தகவல் தொடர்பு சாதனங்களில் வானொலியால் மட்டுமே தடங்கலின்றி செயல்பட முடியும் என்பதற்கு சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் மட்டுமில்லை “ மன் கி பாத் “ நிகழ்ச்சியும் பெரும் எடுத்துக்காட்டு.

இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவிலும் கேரள அகில இந்திய வானொலி நிலையங்கள் கூடுதல் ஜனநாயகத்தன்மையுடனும் பல்வண்ண நிகழ்ச்சி தீற்றல்களுடனும் நேயர்களுக்கான கூடுதல் வெளியை நல்கிடும் தளமாக இயங்கி வருகின்றன. குறிப்பாக இலக்கியத்திற்கும் வாழுகின்ற மண் மறைந்த இலக்கிய ஆளுமைகளுக்கும் பல்வேறு துறைகளில் மிளிர்ந்த ஆளுமைகளுக்குமாக என நேர ஒதுக்கீட்டில் தாராளமாகவே உள்ளனர்.
வானொலி பன்மயத்தில் கேரளத்து ஆகாசவாணிக்கு ஹிருதயப்பூர்வ அபிநந்தனங்கள்!!!








No comments:

Post a Comment