Saturday 11 January 2020

கதை சொல்லும் நேரம்





அது ஒரு பஞ்ச காலம்.

நள்ளிரவு நேரம்.




கறுப்பு மையை கரைத்து பெரிய அண்டாவில் ஊற்றி நிறைத்த மாதிரியான கும்மிருட்டு.


வீட்டின் முற்றத்தில் ஒரு சுரைக்கொடி நிற்கின்றது . அதில் நன்கு விளைந்து முற்றிய பருத்த சுரைக்காய் ஒன்று பச்சை நிறத்தில் தொங்குகின்றது. சுரைக்கொடியின் கீழ் கொழுத்த ஆடு ஒன்றை கட்டி வைத்துள்ளனர்.
வீட்டில் உள்ளவர்கள் உறக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். அவர்களுடன் சேர்ந்து ஆட்டிற்கும் நல்ல தூக்கம்.

 இந்த நேரம் பார்த்து சுரைக்காயையும் ஆட்டையும் கண் வைத்த திருடன் ஒருவன் வீட்டின் முற்றத்து கம்பியை அறுக்கின்றான். இதனால் சர சர பர பர என ஓசை மெலிதாக கிளம்பியது.

தூங்கிக் கொண்டிருந்த வீட்டுக்காரி மம்துக்கார்மாவிற்கு பூனைக்காது. ஆடுதான் கால் குளம்புகளால் தேய்த்து ஓசை எழுப்புகின்றது என முதலில் அவள்  நினைத்துக்கொண்டாள். ஆனால் ஓசை சீராக வரவே இது ஆட்டின் வேலையில்லை என்பதை புரிந்து கொண்டாள்.

அவளுக்கு பதட்டத்தில் நெஞ்சு படபடவென அடித்தது. ஹரிக்கேன் லாம்பு வெளிச்சத்தில் முற்றத்தின் மேல் பனை மரத்தூர்  ஒன்று நிற்பது போல் மங்கலாக தெரிகின்றது.

 நன்கு கண்ணை கசக்கி விட்டு பார்த்தாள். அது பனையும் இல்லை அதன் தூருமில்லை. பனை மரத்தூரின் நிறத்தையும் வடிவத்தையும் ஒத்த வாட்டசாட்டமான கள்ளன்  கையில் இரம்பத்துடன் நிற்கின்றான்.
அயர்ந்து  தூங்கும் கணவன் சேவை குரல் கொடுத்து எழுப்ப வேண்டும். அவளுக்கோ பயத்தில்  கள்ளன்  என்ற சொல் தொண்டைக்குழியை விட்டு தாண்ட மாட்டேன் என்கின்றது. .

இதற்கிடையில் கள்ளன் சுரைக்காயை அவசர அவசரமாக பறிக்கின்றான். பர பரப்பில் அந்த சுரைக்காயை கீழே நழுவ விட்டு விடுகின்றான்.
சரியாக அது ஆட்டின் வயிற்றில் போய் பொத்தென விழ ஆடு மிரண்டு போய் பேஏஏ...... பேஏஏ...... என நடுங்கும் அலைவரிசையில் கத்தத் தொடங்கி விட்டது. கள்ளனுக்கு ஏறி ஓட அங்கு ஏணியும் இல்லை. பதட்டத்தில் வாசலும் தென்படவில்லை.இடை விடாமல் ஆடு கத்தியதில் மம்துக்கார்மாவிற்கு கொஞ்சம் தைரியம் வந்து விட்டது.

வழமையாக மம்துக்கார்மா காரணம் , பதங்களை கணீரென்ற குரலில் பாடக்கூடியவள். அது இப்போது கைகொடுத்தது.
அல் சர சர வல் பர பர அல் பொத்தும்பே என இரண்டு தடவைதான்  ராகமெடுத்து பாடியிருப்பாள்.

அந்த சத்தம் கேட்டு கணவன் சேவு எரிச்சலுடன் கண் விழித்தான். விழித்தவுடன் அவன் கண்ணில் கள்ளன் நிற்பது பட்டது. உடனே எச்சரிக்கையாகி விட்டான்.

அவனுக்கு அடிதடிகளைக் கண்டு அச்சம் இருந்த்தில்லை. சின்ன வயதில் கவண் கல் வீசி விளையாடிப்பழக்கமுள்ளவன். தலையணைக்கு கீழ் கையை விட்டு துழாவினான். கிடைத்ததை எடுத்து குருட்டாம்போக்கில் கள்ளனை நோக்கி வேகமாக வீசினான்.

சேவின் கவண் கல் பயிற்சி வீண் போகவில்லை. அது சரியாக கள்ளனின் நெற்றியில் பட்டு உடைந்து புகை போல கொட்டியது.
உடனே கண்களை கசக்கிய கள்ளன் யம்மா எரியுதே எரியுதே என கத்தியதோடு இருமலும் தும்மலுமாக நிலை தடுமாறினான். இந்த சந்தடி  சாக்கில் கள்ளனின் மீது பாய்ந்து அமுக்கிப் பிடித்தான் சேவு.

ஹரிக்கன் லாம்பு வெளிச்சத்தை தூண்டிப் பார்த்ததில் கள்ளனின் முகம் தீயினால் கரிந்த பனம் பழத்தோல் போல பரிதாபமாக இருந்தது.
கரிந்த பனம் பழக் காட்சிக்கு சேவு வீசிய மர்மப்பொருள்தான் காரணம். அந்த மர்மப்பொருள் வேறு ஒன்றுமில்லை. மூக்குத் தூள் பட்டைதான்.

அவனுக்கு தூள் போடும் பழக்கம் உண்டு. எனவே இரவு படுக்கப்போகும்போது தூள் பட்டை , கள்ளன் பெரளிக்காக கையடக்க அரிவாள் போன்றவற்றை தலையணைக்கு கீழ் வைத்திருப்பான்.

அவசரத்தில் அரிவாளுக்கு பதில் தூள் பட்டை கிடைத்ததினால் சேதாரமில்லாமல் கள்ளனை பிடிக்க முடிந்தது.

மம்துக்கார்மாவின் அல் பொத்தும்பே  பாட்டினால் சேவு விழிக்கின்ற வரைக்கும் கள்ளனை அங்கு நிற்க வைக்கவும் முடிந்தது.

எல்லாம் முடிந்த பிறகு நீ படிச்சியே அது என்ன அரபி பைத்து என சேவு பொண்டாட்டியிடம்  கேட்டான்.

அரபியும் இல்ல கால்பியும் இல்ல.

கள்ளேன் கம்பிய அறுக்கும்போது சர சர பர பர என சத்தம் வந்துரு.
சொரைக்கா பொத்துண்டு உளுந்து ஆடு மே ன்டு கத்திச்சு.

அதத்தான் சுருக்கமா அரபி பதம் போல அல் , வல் போட்டு படிச்சேன் என்றாள் மம்துக்கார்மா.

அன்றிலிருந்து தூங்கப்போகும்போது கள்ளன் பைத்தை மம்துக்கார்மாவும் மூக்குத் தூள் பட்டையை சேவும் மறப்பதே இல்லை.

```````````````````````````````````````````````````````````````````````````````````````````
என் உம்மா எனக்கு சிறு வயதில் சொன்ன கதை இது. இந்த கதை அப்படியே எனக்கு முழுமையாக நினைவில் இல்லை. கதை சொன்ன உம்மாவும் இன்று இல்லை. ஆனால் உம்மா சொன்ன கதையில் இருந்த அல்சரசர  வல்பரபர  அல்பொத்தும் பே………..ஏஏஏ...என்ற ஒரே ஒரு சொற்றொடர் மட்டும் என் நினைவின் ஆழத்தில் கிணற்றில் கிடக்கும் கல் போல தங்கி விட்டது.
அந்த சர சர பர பர என்ற ஒற்றை  சொல்லின் நுனியைப் பிடித்து இழுத்ததில் மறதியின் குவியலில் புதைந்து கிடந்த மொத்த கதையும் புது வடிவில் வெளியே வந்து விட்டது.

இதுதான் கதைகளின் சிறப்பம்சம்.

நீங்கள் மேலே வாசித்த கதையினையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது அதில் உள்ள சில பெயர் சொற்களை அடுக்குங்கள்

முற்றத்து கம்பி
சுரைக்கொடி
ஹரிக்கேன் லாம்பு
தூள் பட்டை
கவண் கல்

மேலே உள்ள 5 சொற்களின் வழியாக கிட்டதட்ட 50 வருடங்களுக்கு பின் பயணிக்க இயலும்.

அன்றைய காயலில் மின்சாரம் இல்லை.

மாற்று எரிபொருளான மண்ணெண்ணையில் எரியும் கூண்டு விளக்கு.

வீட்டையும் வானத்தையும் இணைக்கும் முற்றத்து அமைப்பு

வீட்டில் வளர்க்கப்பட்ட உணவுத்தாவரங்கள்

புகையிலைப் பொடி பயன்பாடு

கட்டபோல் , கவுட்டை என்று பல பெயர்களில் அழைக்கப்படும்  Y வடிவிலான கவண் கல் என்ற கருவி. அதனைப்பயன்படுத்தி  குறி பிசகாமல் அடித்துப் பழகும்  சிறுவர் விளையாட்டு

`````````````````````````````````````````````````````````````````````````
வழக்கொழிந்த பொருட்கள் , பேச்சு வழக்கு , வாழ்க்கை முறைமை , அதன் பின்னனிகள் என ஒரு கதைக்குள் எத்தனை சரடுகள் முளை விட்டு  நிற்கின்றன ? .

ஒளிப்பட திரட்டாகவும் ( PHOTO ALBUM )  வரலாறாகவும் , வர்ணனையாகவும்  அருங்காட்சியகமாகவும் நமக்கு முன்னால் ஒரு கதை எத்தனை வடிவத்தில் காட்சியளிக்கின்றது ?

ஒரு வகையில் கதைகளை காலங்கடத்தி என்று கூட அழைக்கலாம்.
 இந்த காலத்தின் புதிய தலைமுறையினருக்கு அறவே அறிமுகமில்லாத ஒரு மரபின் தொடர்ச்சி இது போன்ற கதைகளின் வாயிலாக அறிமுகம் ஆகின்றது.

அத்துடன் ஒரு விபரீதமும் அநீதமும் நடக்கும்போது அதை சேவு –மம்துக்கார்மா பாத்திரங்கள் நிதானம் , அஞ்சாமை , அறிவுக்கூர்மை , தீரம் ஆகிய உயர்குணங்களுடன் அவற்றை எதிர்கொண்ட விதத்தையும் கதை எளிமையாக சுவையாகவும் இளம் பருவத்து பிள்ளைகளுக்கு கற்பிக்கின்றது.
குடும்பத்தின் நேரத்தையும் மனதையும்  தொலைக்காட்சி பறித்தெடுக்காத  காலம் அது .

1970ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியாக இருக்கும் என நினக்கின்றேன்.
எனது தாயாரிடம் கதை கேட்டது போக எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்த ஆயா சொன்ன கிரிஷ் கத்தி கள்ளன் கதைகள் வாயை பிளக்க வைப்பவை.
அதே போல எல்.கே. உயர் நிலைப்பள்ளியில் எங்களுக்கு 09 ஆம் வகுப்பில் கைவினை ஆசிரியராக இருந்தவர் சொல்லும் மாயப்பந்து கதையை மனது இன்னும் மறக்கவில்லை.

இந்த கதையின் காரணமாகவே அவருக்கு நாங்கள் கப்ஸா மன்னன் என்ற பட்டப்பெயரை சூட்டியிருக்கின்றோம். அதற்காக அவரின் காய்த்த முரட்டுக்கரங்களிலிருந்து அடியும் வாங்கியிருக்கின்றோம்.

இந்த கதைகளும் எங்களுக்கு போதாது. மேன்மேலும் கதைக்காக ஏங்கும் எங்களின் ஏக்கத்தை தீர்த்த சாதனங்களும் உண்டு

எங்கள் வீட்டில் உள்ள எழுத்து மேசை மேல் ஏறி நின்று பிலிப்ஸ் வால்வு வானொலிப்பெட்டி முன் நானும் என் தம்பியும் ஞாயிறு தோறும் காலை 10:55 இலிருந்து காத்திருப்போம்.

 அது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச்சேவையில் காலை 11:00 – 11:15 மணி வரை கதை ஒலிபரப்பாகும் நேரமாகும்.

.அதில் இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டகளப்பைச் சேர்ந்த மாஸ்டர் சிவலிங்கம் அவர்கள் கதை சொல்லுவார்.

ஏற்ற இறக்கங்களுடன் ஆண் பெண் சிறுவர் முதியவர் பாத்திரங்களுக்கேற்ப குரலை மாற்றி மாற்றி கதை சொல்லுவார். அவர் உண்டாக்கும் மாய உலகின் குடிமக்கள் நாங்கள்.

 மற்ற நாட்களில் சிறுவர்களுக்கான மாத இதழ்களாக வெளி வந்து கொண்டிருந்த  கோகுலம் , ரத்தின பாலா , பால மித்ரா , அம்புலி மாமா , முத்து காமிக்ஸ் , வாண்டு மாமா கதை தொகுப்பு போன்ற இதழ்களும் நூல்களும் நமதூரின் முதன்மைச்சாலையில் அமைந்திருந்த அரசு நூலகத்திலும் மஹ்பூபு சுபுஹானி சங்க நூலகத்திலும் கிடைக்கும்.

அங்கு கிடைக்காதவற்றை கே.டி.எம்.தெருவில் இருக்கும் ஆதிலிங்கம் கடையில் போய் வாங்க வேண்டி வரும்.

அத்துடன் என் வாப்பா கொழும்பிலிருந்து வாங்கி வரும் சோவியத் நாட்டு சிறுவர் படக்கதை நூல்களும் அடக்கம்

இந்த இதழ்களை அள்ளிக் கொண்டு என் வீட்டு மாடிக்கு சென்று தனிமையில் .அமர்ந்து வெறிகொண்டு வாசித்திருக்கின்றேன்.

இந்த இதழ்களில் உலா வரும் மந்திரக்கை மாயாவி , சுவரைக்கடக்கும் அரூபி , மயானத்து  வேதாளம் , மந்திரவாதி மாண்ட்ரேக் , மாய விளக்கு , கரடி தாத்தா , புறா , கிளி , ஏழு கடல் , மலை , நிலச்சுவான்தார் , சிற்றரசர்கள் ,  நாக தலை மாணிக்கம் போன்ற எண்ணற்ற கதை மாந்தர்களும் பாத்திரங்களும்  கட்டி எழுப்பும் கற்பனை நிறைந்த உலகு மிக விசாலமானது.

சுவரைக்கடக்கும் அரூப வித்தை எனக்கும் வாய்க்காதா ? என ஏங்கியதுண்டு. ஆயிரத்தோரு இரவுகளின் கதைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் இரவின் இரகசியத்தன்மைக்குள் பல இரவுகள்  மிதந்திருக்கின்றேன்.

சிறு வயதில் நான் கேட்ட வாசித்த கதைகளின் ஆழத்தில்தான் இன்றைய எனது எழுத்துகளுக்கான கடைக்கால் இருக்கின்றது என நினைக்கின்றேன்.
சிறுவர்களின் மன எல்லையை அகலப்படுத்தி அதில் கற்பனையையும் புதியனவற்றை ஆக்கும் திறனையும்  நதி போல பெருக்கெடுத்து ஓடசெய்யும் வலிமை கதைகளுக்குண்டு.

கதைகள் நமது முன்னோர்களின் பண்பாட்டின் வரலாற்றின் அறத்தின் தடங்களை தன்னுள் பொதிந்திருப்பவை .

நீதியையும் நன்னெறிகளையும் வாழ்க்கையின் அறைகூவல்களை கடக்கத்தேவையான துணிவையும் மனித பிஞ்சுகளுக்குள் விதைக்க வல்லவை.

முல்லா நஸீருத்தீன் கதை , சூஃபி கதைகள் , ஆயிரத்தொரு இரவுகள் கதை , பஞ்ச தந்திர கதை , விக்கிரமாதித்தியன் கதை , ஈசாப் நீதிக்கதைகள் , தோல் பாவைக்கூத்து  , வில்லிசை ,  இராக்கதைகள் என முந்தைய தலைமுறையினர் பெரும் கனவு வெளியை உண்டாக்கி உலவ விட்டுள்ளனர். 

நம் நாடானது  கதைகள் காப்பியங்களின் விளை நிலம்.
எண்ணற்ற கண்ணும்மாமார்களிடமும் கதை பிரசங்கிகளிடமும்   விடிய விடிய கதை கேட்ட தேசம் இது.

இன்று அந்த இடத்தை மின்னணு கதை சொல்லிகள் வடிவில் தொலைக்காட்சிகள் வந்து கைப்பற்றி விட்டன. இந்த பண்டமாற்று மூலம் நாம் அடைந்திருக்கின்றோமா ? இழந்திருக்கின்றோமா ?

பால் காரி , ஆழிப்பேரலை , தனுஷ் கோடி அழிவு ,  தொடர்வண்டி விவரணை  , கடல் சாகச பயணம் , கள்ளன் பெரளி , காடும் மரங்களும் , மழை மேகம் , பறவைகள் உலகம் என்ற கதை சொல்லும் கலை வழியாகத்தான் என் பிள்ளைகளுடனான் இரவை நான் இன்னமும் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றேன்.

என் வீட்டுதொலைக்காட்சிப் பெட்டி ஒரு மூலையில் நின்று இவை அனைத்தையும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.











31/08/2014

No comments:

Post a Comment