Monday 13 January 2020

தவளைகள் – ப.சிங்காரம் – வாழ்வின்மையின் கதை






ஒரு சொல்லின் அனலில்,  கூரேறிய நினைவுகளை கிளர்த்தும் ஒற்றை நிகழ்வின் தாக்கத்தில், மான அவமானத்தின் சுமையில் இன்னொரு மனிதனின் உயிரை போக்கி விடுவது அல்லது தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது என்ற வாழ்விற்கெதிரான விழைவை வெறும் உளவியல் காரணிகளுடன் மட்டும் மட்டிறுத்து விட இயலாது.


மான அவமான பொங்கு சுனையின் ஊற்றென்பது பெரும்பாலும் பொருளியல் தோல்விகள், குடும்ப சிடுக்குகள், பாலியல் சிக்கல்களிலிருந்து புறப்படுபவைதான்.

தொழில் முறை பயணங்களுக்காக பல்வேறு நிலப்பரப்புகளுக்கு பயணிக்க நேரிடும் போது இது போன்ற சமூக, உளவியல் நிகழ்வுகளை நான் ஒப்பிட்டு பார்ப்பதுண்டு.

தமிழ் பேசும் அயல் பரப்பிலாகட்டும் அல்லது பிறமொழி நிலமாகட்டும் தன் மாய்ப்பு பிறன் மாய்ப்பு போன்ற உணர்ச்சி உந்தல் வெடிப்புகள் அங்கெல்லாம் ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவுதான். அந்த புறஅக நெருக்கடிகளை பாரங்களை அவர்கள் தங்களுக்குள் வைத்துக் கொண்டு குமைந்து உலையாமல் அடுத்தவன் தலைக்கு மேல் நேர் முறையில் அல்லது எதிர்மறையாகவாகிலும் சுமத்தி கடந்து விடுகின்றார்கள்.

ஆனால்  நம்மைச்சுற்றி வாழும் மனித மனங்களோ அந்த அனல் மையத்தை தங்களுக்குள்ளேயே வளர்த்து வளர்த்து இறுதியில் அந்த நெருப்புக்கு தாங்களே ஆகுதியாகி விடுகின்றனர் . இந்த நிலமானது எப்போதும் மனமென்னும் எரிகுன்றின் மீதே அமர்ந்துள்ளது.

காலச்சுவடு ஜனவரி2020 இதழில் வெளிவந்துள்ள கதைத்தடம் பகுதியில் இதுவரை வெளிவராத தமிழின் மூத்த படைப்பாளிகளின் கதைகளை வெளியிட்டிருக்கின்றார்கள். அதில் ப.சிங்காரத்தின் ` தவளைகள் ` சிறுகதை இடம் பெற்றிருக்கின்றது.

இக்கதையில் தன்னழிவின் மன உலகானது வரிக்கு வரி பதிவாகியுள்ளது.  தன்மாய்ப்பிற்கு முந்திய கணத்தின் முந்திய கணம் வரையிலும் நிலையழிந்த  மனத்தின் வாத எதிர்வாதங்களை கூர்மையாக வரைந்து செல்கிறார் ப.சிங்காரம்.

புறக்கணிப்பின், திணிக்கப்பட்ட தனிமையின் கனத்தை முழுக்க முழுக்க தன் நெஞ்சிலும் முதுகிலும் சுமந்தவர் ப.சிங்காரம். வாழ்வின் இறுதிக் கணங்களில் தனிமை கூட இரங்கும் அளவிலான தனிமையில் சிதைந்திருக்கின்றார் அவர். அப்படி சிங்காரம் உழன்ற நிராகரிப்பின் கணச் சுழிப்பில் கூட இந்த சிறுகதை பிறந்திருக்கலாம்.
   
தன் தந்தை வழியாக கிடைத்த தலைமுறை புகழ் மிகு பலசரக்கு மளிகை வணிகத்தை மாரியப்பன் தன் சிறுபிள்ளைத்தனத்தினால் இழந்து விடுகின்றான். ஆனால் நேர்மையானவன். எண்ணற்ற சோதனைகளும் இழப்புகளும் சேர்ந்து கொள்ள வாழ்ந்து கெட்ட மாரியப்பன் தமயந்தி இணையருக்குள் அதீத தன்மானம் உருக் கொள்கின்றது. அதன் அழுத்தத்திலிருந்து தப்பிக்க சாமத்தில் ஊர் நீங்குகின்றனர்.

ஆசைகளுக்கும் ஆசைகளின்  நிராகரிப்பிற்கும் இடையில் ஊடாடும் இருவரின் மனதுகள். ஆசைகளும் விருப்பங்களும் வினாக்களாய் எழும்ப  எழும்ப அவை மீண்டும் மீண்டும் நிராசையின் அலையில் அடித்துச் செல்லப்படுகின்றன. ஆதரவின்மையிலும் அவநம்பிக்கையிலும் தோய்ந்த வினாக்கள்தான் மறுபடியும் இணையரின் அவா மேவிய வினாக்களுக்கான மறுமொழிகளாக குத்தீட்டிகள் போல கிளைத்து நிரப்புகின்றன.

“ எல்லாம் போய் விட்டது போனது வரப்போவுதா?

புதுக்கோட்டை தஞ்சாவூர் பக்கம் போனால் என்னமாச்சிலும் ஒரு தொழிலை பண்ணிப் பிழைச்சுக்கலாம்

புதுக்கோட்டை பக்கம்தான் சரி, ஆண்டவன் நமக்கு வழியைக்காட்டாமலா போய்விடுவான்?

முதலில் உட்கார இடம் வேணுமே

ஆள் அழகுல குறைச்சலா, பேசறதுல பழகுறதுல குறைச்சலா? சூதுவாது தெரியாது. அப்புறம் எப்படி சம்பாரிக்கிறது?
யார் என்னத்த செய்தாலும் நமக்கு யோகமில்லை. இந்த ஊர் நமக்கு இவ்வளவுதான்.

அவர்ட்ட போயிச் சொல்லி இவளை ஒரு  ரெண்டு நாள் அவர் வீட்டில்… …..   …. முகம் தெரியாதவனிடம் போய்ப் பல்லை இளிக்கணும்….

புது ஊர்ல போயிச் சொந்தம் சுருத்துண்ணு ஒருத்தர்கூட கிட்டத்தில் இல்லாம சாகணுமுன்னு என் தலைஎழுத்தா?

முதல்ல புதுக்கோட்டைல எங்க போயி உக்காருறது.. ‘

புதுக்கோட்டையில் எங்கு தங்குவது? என்ற தீராத இறுதி வினாவிற்குப் பிறகிலிருந்து ஆற்றுக்குள் தமயந்தி  பாய்வதற்கு முந்திய அந்த  கணம் வரையிலான கால அளவை கணக்கிட்டால் நொடிகளின் சில சொட்டுக்கள்தான் எஞ்சியிருந்திருக்கும்.  அந்த இடத்தை அந்த காலத்துளிகளுக்குள் கட்டற்று பெருகிய துயரை தான் எழுதாமல் வாசகர்களின் பக்கமே ப.சிங்காரம் நகர்த்தி விடுகின்றார்.

வாழ்விற்கும் வாழ்வின்மைக்குமான அந்த இடைக்கணத்தில் அவள் மனத்தில் கொப்பளித்தெழுந்த சொல்லி முடியாத துயரின்  விரிவு, சாவு மீதான நாட்டம், வாழ்வு மீதான கரிப்பு அப்படியே நம் மனதிற்குள் நிரம்புகின்றது.

ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையின் கடைசிச்சாமத்தில் தொடங்கிய கதை அந்த கடைசி சாமத்துக்குள்ளேயே நீருக்குள் மூழ்கிய இருள் பாறை போல தரை முட்டுகின்றது.  அதன்  அதிர்வோ  நீர் வளையம் போல விரிந்து விரிந்து  நம்  உணர்வெல்லைகளுக்கப்பாலும் சென்று கொண்டே இருக்கின்றது.


No comments:

Post a Comment