Sunday 29 December 2019

துளி நிறைய வாழ்க்கை



                                                                                               

காகம், குருவி, கிளி
நாய், பூனை, ஆட்டுக்குட்டி
குப்பைத் தொட்டிக்கருகிலிருந்த சிறுமி
மற்றும் நான்
என
நாங்கள் மட்டுமே ரசித்த
அந்த கண நேர மழை தூறல்
எங்களுக்கேயானது.
                                                          --- கவிஞர் இந்திரா அலங்காரம்

`````````````````````````````````````````````````````````````````````````````
ஒரு நகரத்தில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வந்தார். நிலபுலன்கள் , வாடகை வரக்கூடிய கட்டிடங்கள், வங்கிக்கணக்கில் பணம் , கிலோ கணக்கில் தங்க வெள்ளி நகைகள் , பங்கு சந்தையில் முதலீடு என செல்வ வளங்களில் அவருக்கு எவ்வித குறைவுமில்லை. அத்துடன் திடகாத்திரமான உடலையும் கொண்டவர்.
கொஞ்ச நாட்களாகவே அவரின் முகம் வாடி இருந்தது . மனதில் அமைதியில்லை. அதன் விளைவாக அவரின்  உடல் நலிவடைந்து விட்டது  கண்கள் குழி விழுந்து முகம் ஒட்டி உடல் குச்சி போல ஆகி விட்டது. 


எல்லாவிதமான மருத்துவ பரிசோதனைகளும் செய்தாகி விட்டது. வெளி நாட்டு சிறப்பு மருத்துவர்களிடமும் காட்டியாகி விட்டது. அவருக்கு எந்த நோயுமில்லை எனக்கூறி விட்டனர்.

போகாத புனிதத்தலங்களில்லை. நேர்ச்சைகளுக்கும் குறைவில்லை . நோய்க்கும் பேய்க்கும் பார்த்தாகி விட்டது .ஆனாலும் உடல் தேறினபாடில்லை.
ஒரு நாள் இந்த வணிகரை நலம் விசாரிக்க அவரின் நீண்ட கால நண்பர் வந்தார். விஷயங்களை அறிந்து கொண்ட அந்த நண்பர் தொலைவில் உள்ள மலையடிவார கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெரியவரைப் பற்றி சிலாகித்து சொன்னார்.  அவரைப் போய் ஒரு நடை பார்த்து வருமாறும் பரிந்துரைத்தார்.

அடுத்த நாளே கையில் ஒரு பொதியுடன் அந்த மலையடிவார கிராமப் பெரியவரின் முன்னிலையில் நின்றார் வணிகர். அந்த பெரியவரின் கைகளை இறுகப்பற்றியவாறே தன்னுடைய உடல் நலிவைப்பற்றி கண்ணீர் நிறைந்த கண்களுடன் எடுத்துரைத்தார்.

அவை அனைத்தையும் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவர். முறைப்பாடு முடிந்தவுடன் வணிகர் தன் கையோடு கொண்டு வந்திருந்த சிறு பொதியை அந்த பெரியவரின் முன் காணிக்கையாக வைத்தார். அந்த பொதிக்குள் பணக்கட்டுகளும் , தங்க நாணயங்களும் , வெள்ளிக்கட்டியும் இருந்தன.

வணிகர் அந்த காணிக்கை பொதியை கீழே வைத்ததுதான் தாமதம் அந்த பெரியவர் அதை தூக்கிக் கொண்டு தனது குடிலை விட்டு வெளியில் பாய்ந்து ஓடினார். பெரியவரின் இந்த செயலைப்பார்த்து திகைத்துப்போன வணிகர் உடனே தன்னிலைக்கு வந்தவராய் “ அய்யோ என் பை அய்யோ என் பை  “ என கூச்சலிட்டவாறே பெரியவரை துரத்திக்கொண்டு சென்றார்.

மான் போல துள்ளி ஓடிய பெரியவரை வணிகரால் பிடிக்க இயலவில்லை. ஒரு கட்டத்தில் பெரியவர் அந்த பொதியை ஒரு புதரில் வீசி விட்டு ஓடத் தொடங்கினார். பாய்ந்து போய் அந்த பொதியைக் கைப்பற்றிக் கொண்ட வணிகர் “ அப்பாடா “ என பெருமூச்சு விட்டார். பொதி கிடைத்த மகிழ்ச்சியில் ஆனந்தக்கண்ணீர் விட்டார்.
\
இப்போது அவர் முன் தோன்றிய பெரியவர் “ வணிகரே , சிக்கல் வேறு எங்கும் இல்லை. அது  உங்களுக்கு உள்ளேதான் இருக்கின்றது. பணப்பொதியை மனதிற்கு மேலே வைக்காமல் அதனை மனதிற்கு கீழே வையுங்கள் . சுமைகள் இறங்கி விடும். உள்ளதைக் கொண்டு நிகழ் கணத்தில் வாழப் பழகிக்கொள்ளுங்கள் “ என அறிவுரை கூறி வழியனுப்பினார் ..

 நமக்கு இறைவனால் வழங்கப்பட்ட வளங்களின்  இருப்பையும் அருமையையும் பயன்பாட்டையும் நாம் ஒரு போதும் உணருவதில்லை.  இந்த நிலை அந்த வளங்களை இழப்பதற்கு முந்திய கணம் வரை தொடர்கின்றது. 

மனதின் முடிவற்ற தேடல்கள் ஏக்கங்களை நம்முள் கொண்டு வந்து கொட்டுகின்றன . குன்று போல் குவிந்திருக்கும் ஏக்கங்களின் உச்சியில் நிற்கும் நம்மால் நம் வாழ்க்கையின் அருள் வளங்கள் அவை எத்தனை பெரியதாக இருந்தாலும்  மிக அற்பமாக மட்டுமே கருத முடிகின்றது. இதனால் நாம் எந்த ஒரு கணத்திலும் வாழ்க்கையை வாழ முடிவதில்லை.

ஒரு நாளின் புலரியுடன் இணைந்து விரியும் மலரின் ஆயுள் என்னவோ அன்று மாலை வரைதான். ஆனால் அது வரை அந்த பூ தன்னில் நிறைகின்றது. அந்த நிறைவானது மணமாகவும் நிறமாகவும் ஆகி மலரின் இதழ்களோடு மட்டும்  நின்று விடாமல் பல்லுயிரிகளின் புலன்களையும் பரவசமூட்டும் வகையில் நிறைக்கின்றது.

பரந்து விரிந்த அண்ட சராசரப் பெருங்கடலில் தன்னை ஒரு துளியாக உணரும் ஒரு மனிதன் பிரபஞ்ச நாயனின்  நுணுக்கமான திட்டமிட்ட  இயக்கத்தின் கீழ் தன் மொத்த வாழ்வும் அடங்கியிருப்பதையும் அந்த நாயனின் முழு பொறுப்பிலும் கண்காணிப்பிலும் தான் இருப்பதையும் அறிவான்.

இந்த ஆழ்ந்த நம்பிக்கையானது முழுமையான பாதுகாப்பு உணர்வை அவனுக்கு வழங்குகின்றது. இத்தகைய ஆக்க சிந்தனைகள் கலந்த உழைப்புடன் தனது தினசரி வாழ்வை அவன் துவக்குவான். எதிர்காலமானது அச்சத்தின் உருவெடுத்து அவனை மிரட்ட இயலாது.  பிறரோடு தன்னை  ஒப்பிட்டு பார்த்து ஒரு போதும் பொறாமைத்தீக்குள் விழுந்து கரிந்து போக மாட்டான்.

துளித்துளியாக சொட்டும் வாழ்வின் ஒவ்வொரு துளியிலும் அவன் நிறைந்து வாழ்வான். கைவிடப்பட்ட உணர்வும் பேராசையும் அவனை அலைக்கழிக்க முடியாது. அவனை விட்டு பிரிந்து செல்லும் ஒவ்வொரு கணமும் முடிந்து போன ஒன்றாக இருக்காது மாறாக நிறைந்து இருக்கும். இதனால் அவன் கடந்த காலத்தின்  அழுத்தும் சுமையிலிருந்தும் விடுவிக்கப்படுகின்றான்.

இதனால்தான் நபிகள் பெருமானார் , “ இறைவா ! கருமித்தனம் , நிறைவற்ற மனம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் “ என வேண்டினார்கள்.

06/11/2014




No comments:

Post a Comment