. இலக்கிய வாதியான எனது நண்பர் அடிக்கடி
சொல்லுவார் , “இறைவனை எப்போதும்
கையில் பிரம்புடன் கூடிய தண்டனைக்காரனாகவே சம கால முஸ்லிம் சமூகம் சித்தரித்து வந்துள்ளது. மயிலிறகுடன் கூடிய கருணை
நிறைந்த இறைவனை ஏன் அவர்கள் காட்ட மறுக்கின்றனர் ?” .
அதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழகத்தில் நாம் செல்லக்கூடிய
பெரும்பாலான மஸ்ஜிதுகளில் ஆற்றப்படும் உரைகள் அமைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.
அந்த உரைகளில் இறை விதியை மீறுவதினால் ஏற்படும் விளவுகள் ,
தண்டனைகள் பற்றி மிகக்கடுமையாக கோபம் தெறிக்க சொற்கள் சிதறும்.
பல வேளைகளில் அவை இறை வாக்காக வெளிப்படாமல் வழி முனையில்
நின்று பிரம்பையும் அதிகாரத்தையும் சொற்களையும் கலந்து ஒன்றாக்கி சுழற்றும் ஒரு
காவல்காரனின் உடல் மொழியை ஒத்ததாகவே இருக்கும்.
எக்காலத்திற்கும் பொருந்தும் இறைவனின் சொற்களானது கனமும்
ஆழமும் விரிவும் கொண்ட எல்லையற்ற பேரண்டக்கடல் போன்றது.
அவற்றை சம கால தேவைகளுக்கேற்ப மனித ஓட்டங்களுக்கேற்ப
அள்ளியெடுத்து மனித மனதின் இறுகிய துளைகளை தளர்த்தி அதனுள் துளித்துளியாக நழுவ
விடும் பயிற்சி இல்லாததுதான் மேற்கண்ட உரைகளின் சிக்கலுக்கு காரணம்.
வல்லோன் அல்லாஹ் தனது அருள் மறையில் கொடிய நரகின் வேதனையை
சொல்லி எச்சரிக்கும்போது மனித குலம் கலங்கி குலைந்து நம்பிக்கையை ஒரேயடியாக இழந்து முடங்கி
விடக்கூடாது என்பதற்காக மன்னிப்பையும் அவனது அருளையும் சேர்த்தே இறைவன் இயம்புகின்றான்.
இதன் மூலம் மனித உள்ளமானது இறைவனைப்பற்றிய ஒரு சமனான மன
நிலையை அடையப்பெறுகின்றது.
இறை நியதியை செயல்படுத்துவதினால் விளையும் நன்மைகள் , அதை
செயல்படுத்த தூண்டும் அழகியல் வர்ணனைகள் , கடுஞ் சொற்களை தவிர்த்து நல்வழியை
பின்பற்றுவதற்கான ஏக்கத்தை மனதில் விதைக்கும் வழிமுறை என நுட்பங்கள் எதுவும்
இல்லாத குத்தும் கூர்மையுடைய ஆயாசமூட்டும் சொற்பொழிவுகளாக மட்டுமே நமது ஆலிம்களின்
மார்க்க உரைகள் எஞ்சுகின்றன.
அந்த குறையை நீக்கும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது
உவகையூட்டுவதாக உள்ளது.
“ தனக்கு எல்லா வசதிகளும் வந்த பிறகு மிகச்சிறந்ததொரு
வாழ்க்கையை வாழலாம். இறைவனை
திருப்திப்படுத்தலாம் என்றுதான் மனிதன் நினைத்துக்கொண்டிருக்கின்றான். அப்படி வாழ
இந்த உலகில் வாழ்க்கை எவருக்கும் எஞ்சுவதில்லை.
சொல்லி முடியும்போது வார்த்தை முடிந்து போவது போலத்தான் வாழ்க்கையும்.
அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்துதான் எல்லாம் சாத்தியமாக வேண்டியிருக்கின்றது “ { பக்கம் :
..... }
என்ற இந்த நூலின் வரிகள் யாருக்கு பொருந்தி வருகின்றதோ இல்லையோ
தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் முஸ்லிம்களுக்கு முற்றிலும் பொருந்தி வருகின்றது.
நாம் எதையுமே வணிக நோக்கிலேயே அணுகி
பழகியிருக்கின்றோம்.
தன்னையும் சமூகத்தையும் கட்டியெழுப்பும்
மகத்தான பணியில் ஈடுபட முனையும் இளவல்களை நோக்கி அவனது பெற்றோரும் சமூகமும் வீசும்
முதல் எறிகணை இதுதான் :
“ சம்பாதிக்கிற வயசில பொழப்ப பாப்பியா சமூக வேல அது இதுண்டு காலத்தையும்
நேரத்தையும் வீணாக்குவியா ? உன் வயது பய்யனுவோ எல்லாம் எப்படி சம்பாதிக்கிறானுவோ “
மனதையும்
உணர்வுகளையும் ஆழமாக காயப்படுத்தும் கத்தியின் கூர்மைக்கு நிகரான வரிகள்.
இந்த பலமான சொல் குத்துதலில் சமூக உணர்வுள்ள
இளைஞர்களின் மனம் நொறுங்கி போகின்றது.
இந்த
தாக்குதலையும் மீறி செயல்பட முனையும் செயலாளிகளின் திறனானது பல நேரங்களில் சமூகத்தின்
மோசமான ஒப்பீட்டு முறை மற்றும் பார்வையின் விளைவாக தாழ்வு மனப்பான்மை
தூண்டப்பட்டு தற்காலிகமாகவேனும்
முடமாக்கப்படுகின்றது.
இந்த வணிக
உளவியலை மாற்றுவதற்கு தேவையான இலக்கியங்கள் மென்மேலும் படைக்கப்பட வேண்டும்.அதன்
ஒரு படியாக இந்நூலை காண முடிகின்றது.
எழில் வண்ணம் காட்டும் விடியற்காலையை அறியாத ரசிக்காத
மனிதர்களால் சுடும் நண்பகலையும் மயக்கும் மாலைப்பொழுதையும் அறியவோ புரியவோ அதனுள்
வாழ்வை நகர்த்தவோ முடியாது.
கதிரவனின் புலர்தலுக்கும் சாய்தலுக்கும் இடைப்பட்ட ஒரு பகல்
பொழுதைப்போன்றதுதான் மனித வாழ்வும் என்பதை இயற்கையின் பலவித வண்ண கோலங்களுடன் ,
மனித மனதின் மென்மையான நுண்ணிய உணர்வுகளையும் கலந்து உறுத்தாமல்
சொல்லிச்செல்கின்றது இந்நூல்.
--- சொற்களின் விவரிப்புகளுக்குள் மூழ்கிடும்போது சொல்ல
வரும் பொருள் தொலைந்து போகாமலிருப்பது.
---சொல்ல வரும் கருத்தை சுற்றியிருக்கும் அழகியல்
வேலைப்பாடுகளை பிரித்து விட்டு பார்க்கும்போது நூலாசிரியர் உணர்த்த வரும் கருத்து
கலையாமல் தெளிவாக எஞ்சுவது
என இந்த இரண்டு இடங்களையும் இந்த நூல் அழகாக கடந்து
வந்துள்ளது.
அத்துடன் குர்ஆன், ஹதீஸ் தொன்மங்களை போகிற போக்கில்
தெளிக்காமல் பத்திகளின் நடுவே கச்சிதமாகவும் அளவாகவும் பொருத்தப்பட்டிருக்கின்றது.
இது ஒரு வகையான எழுத்து முறை.
இஸ்லாமிய தொன்மங்களின் வழி நாடப்படும் அறங்களை அப்படியே
உள்வாங்கி அதை படிமங்களையும் குறியீடுகளையும் கொண்ட சொல் வேலைப்பாடாக வெளியிடும்
எழுத்துகளை இன்ஸாஃபிடம் எதிர்பார்க்கின்றேன்.
இந்த அடுத்த கட்ட நகர்விற்கான சாத்தியப்பாடுகளை அவரின்
படைப்புகளில் அவதானிக்க முடிகின்றது.
இந்த நூலின் தலைப்பு வாழ்வின் பல நிலைகளை சுட்டி நிற்கும்
பளிங்கு படிமமாக திகழ்கின்றது..
மண்ணின் மீது தீராத ஆசை கொண்ட மனிதனின் பேராசைக்கு இவ்வுலக
வாழ்க்கை நீர்குமிழி போன்றது என்ற நான்கு சொற்கள் தடை போடுகின்றது.
.தொடக்கம் , இன்றியமையாமை , தண்டனை , அழிவு , நிலையாமை என்ற
உலக வாழ்வின் நான்கு பெரு வழி நிலைகள்.
இந்த பெரு வழியினூடாக மனித வாழ்வானது மரணம் ,மனித உறவுகள் , சமூக துயர்கள் , இலட்சிய
வாழ்வு , இறைப்பொருத்தம் பல நிலைகளை எய்துவதை நூல் தனது ஓட்டத்தில் சீராக
உணர்த்துகின்றது.
நண்பர் இன்ஸாஃப் ஸலாஹுத்தீனை முதலில் MFCD வளாகத்தில் ஒரு
நண்பகல் வேளையில் சந்தித்தேன். கூட்டத்துடன் கூட்டமாக நின்று கொண்டிருந்தார். முதலில் புன்னகை பின்னர் கைகுலுக்கல். பரஸ்பர
உசாவல்கள் என உறவு கிளைத்தது.
தன்னைப்போலவே விருப்பங்களை
கொண்டிருந்த ஒரு ஆன்மாவை இன்னொரு ஆன்மா சட்டென இனங்கண்டு கொண்டது. உயரமான கட்டிடத்தை கண நேரத்தில் தேடிப்பிடித்து
பூமிக்குள் சங்கமிக்கும் மின்னலின் வினையை ஒத்த சந்திப்பு அது.
அந்த காலகட்டத்தில் அவர் நளீமிய்யா கலாசாலையில் பயின்று கொண்டிருந்தார். அந்த
சமயம் நானும் பேருவளை சீனன் கோட்டையில் வணிக நிமித்தமாக தங்கியிருந்தேன்.
கதிரவன் ஒட்டு மொத்தமாக ஒரேஞ்ச் நிறத்தை உமிழும் மாலைப்பொழுதுகளில் அவருடனான
சந்திப்பு தொடர்ந்தது.
கலை , இலக்கியம் , திரைப்படம் , கவிதை என பல தளத்தில் உரையாடியிருக்கின்றோம். புன்னகை
புள்ளியில் தொடங்கிய அந்த நட்பானது
இணையக்கூடிய பல புள்ளிகளை எங்களுக்கு அடையாளங்காட்டியது . அந்த புள்ளிகள்
ஒருங்கிணைந்து ஒரு சித்திரமாக எழுந்து கொண்டிருக்கின்றது.
பன்முக ஆற்றல் கொண்ட
அருமைச்சகோதரர் இன்ஸாஃப் ஸலாஹுத்தீனின் எழுத்துகளின் திறன் பெருகவும் தஃவா
களத்திற்கு அது தொடர்ந்து பயன்படவும் கிருபையும் கருணையும் வலிமையும் உள்ள
ரஹ்மானிடம் வேண்டுகின்றேன்.
``````````````````````````````
சாளை
முஹம்மத் பஷீர் ஆரிஃப்
ஹிஜ்ரி
24/01/1434
07/12/12
காயல்பட்டினம்
No comments:
Post a Comment