Monday 30 December 2019

நிலைத்த பொருளாதாரம் – நூல் மதிப்புரை




பல வருடங்களுக்கு முன்னர் ஸவூதியில் பணியாற்றிய எனது சகோதரருடன் அங்குள்ள பழங்குடியினரைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கும்போது ஒரு தகவலைச் சொன்னார்.

ஸவூதி அரபியாவின் பாலைவனங்களில் வசித்து வரும் பழங்குடியினரை நாகரீகப்படுத்தும் முகமாக  நவீன வசதிகளை உடைய ஒரே மாதிரியான அடுக்ககங்களை நகரங்களில் கட்டியது அந்நாட்டரசு .
அதில் வலுக்கட்டாயமாக அவர்களை குடியேற்றியது. ஆனால் இரண்டொரு நாட்களிலேயே “எங்களுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது “ என்று குச்சியைக் கிளப்பிக்கொண்டு அவர்கள் பாலைவன வாழ்க்கைக்குள் மீண்டும் சென்று விட்டார்கள்.


பழங்குடிகளின் இந்த நிராகரிப்பு புதுமையாக எனக்கு பட்டது.
நமக்கு வேண்டுமென்றால் இதை புரிந்து கொள்ள சுணங்கலாம். ஆனால் இயற்கைக்குள் வாழும் தொல்குடிகள் தங்கள் மீது திணிக்கப்படும் இவ்வகையான பிறழ்வுகளை உணருவதற்கு  நெடுங்காலம் எடுப்பதில்லை.
ஒவ்வொரு நாளின் புலரியும் முந்தைய நாளைப்போல இருப்பதில்லை. 

உலகத்தில் தோன்றி மறையும் எந்த ஒரு மனிதனின் கைரேகையும் ஒரே மாதிரி இருப்பதே இல்லை.. வீட்டின் முற்றத்தில் ஒவ்வொரு நாளும் புதுக்கோலந்தான் வரையப்படுகின்றது.

இப்படி இருக்கும்போது ஒற்றை அச்சில் வார்க்கப்பட்டது போன்ற வீடுகளுக்குள் அவர்களால் எப்படி பொருந்திக்கொள்ள இயலும் . அடுக்கங்களில் நவீன வசதிகள் இருக்கலாம். ஆனால் அவர்களின் வாழ்வியல் , பண்பாட்டு சூழலை பெயர்த்துக் கொண்டு போய் அங்கு வைக்க முடியுமா  ?

உலகிலுள்ள உயிர்களின் மனிதர்களின் வண்ணமயமான வேறுபாட்டைத் தெரியாதவர்களும் பன்மயத்தன்மையை புரியாதவர்களும்தான் ஒற்றை வார்ப்பை ஒரே வகையான மதிப்பீட்டை அனைவருக்கும் ஏற்றதாக ஆக்க முயலுகின்றனர்.

சந்தை ஆதாய சக்திகள்  தங்களுடைய உற்பத்தி பொருள்களையும் சேவைகளையும் விற்றிட மக்களின் மூளையை தின்றிடும் விளம்பர உத்திகளைக் கையாள்கின்றனர்.  மெல்ல மெல்ல பொதுமகனின் மனதில் ஓர் ஏற்பு நிலையை பதித்து விடுகின்றனர். பின்னர் அதையே எல்லாருக்குமான தவிர்க்க இயலாத ஒற்றை வாழ்க்கைத்தரமாக மாற்றுகின்றனர்.

இந்த படி நிலைக்கு முன்னர் அவர்கள் மனித வாழ்க்கையின் வண்ண மயத்தையும் பன்மயத்தன்மையும் களிப்பையும் விடுதலை உணர்வையும் மிக நுணுக்கமாக அழிக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக காலங்காலமாக இருந்து வந்த இயல்பான வாழ்வியல் நடைமுறைகளை மக்கள் இழிவாக பார்க்கத் தொடங்குகின்றனர். 

எடுத்துக்காட்டாக இன்றைய வளரிளம் பருவத்து இளைஞர்கள் சைக்கிள் ஓட்டுவதையும் பைக் இல்லாமல் இருப்பதையும் இழிவாக கருதுகின்றனர்.
இதை “ சிக்கலான வாழ்க்கை முறை ”   என வரையறுக்கும் ஜே.சி. குமரப்பா., மனித வாழ்க்கையானது  “வாழ்தல்” என்ற நிலையிலிருந்து “உயிரோடு இருத்தல் “அல்லது “பிழைத்திருத்தல் “ என்ற கீழ் நிலைக்கு தள்ளப்பட்டுளது என்கின்றார்.

இந்த சிக்கலை தனித்த ஒரு விஷயமாக பார்க்க இயலாது. மக்களின் . இது வாழ்விடத்தில் தொடங்கி உடை உணவு பண்பாடு மொழி விளையாட்டு என அனைத்திலுமாக விரிந்து கொண்டே செல்கின்றது. இந்த பார்வை பொருளாதாரத்திற்குள்ளும் தனது ஆக்கிரமிப்பை  நடத்தியுள்ளது.


 எல்லோரும் ஏற்றுக்கடைப்பிடிக்கின்ற  வாழ்க்கை தரத்திலிருந்து சற்றே விலகினாலும் மற்றவர்கள் தம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்பதைப்பற்றியே மக்கள் கவலைப்படுகின்றார்கள். குடும்ப வாழ்க்கை கூட மேட்டுத்தர மக்களின் தொழில் , வர்த்தக நிறுவனங்கள் ஆகியவற்றினால் வரையறுக்கப்படுகின்ற புறத்தோற்றங்களாலும்  நடப்பு வழக்குகளாலும் கட்டுப்படுத்தப்படுகின்றது “

ஜே.சி.குமரப்பாவின் இந்த வரிகள் அப்படியே சமூக நிகழ்வாக மாற்றமடைவதை பாருங்கள். கொஞ்ச காலத்திற்கு முன்னர் சென்னையில் நடந்த நிகழ்வு இது.

அவர்களிருவரும் மனமொத்த இணையர் . அழகான இரண்டு குழந்தைகள். , .உயர்ந்த படிப்பு ., தகவல் தொழில் நுட்ப துறையில் பொறியியலாளர் வேலை. தேவைக்கும் மேலான சம்பளம் , நல்ல சமூக அந்தஸ்து.
திடீரென்று ஒரு நாள் கணவன் தற்கொலை செய்து கொண்டார். வாழ்வதை நிறுத்தியதற்கான காரணத்தை துண்டுச்சீட்டில் எழுதி வைத்திருந்தார்.

பல லட்சங்கள் மதிப்புள்ள நாற் சக்கர ஊர்தி , ஒரு கோடிக்கும் மேற்பட்ட அடுக்கக குடியிருப்பு .போன்றவற்றை மாத தவணைகளில் இணையர் இருவரும் பெற்றிருந்தனர். கடனை ஒழுங்காக திரும்ப செலுத்தியும் வந்தனர்.

 திடீரென ஒரு நாள் கணவனின் மாத ஊதியத்தில்  கணிசமான வெட்டு. விழுந்தது . திகைத்து நின்றவரிடம் ‘’ நிறுவனத்தின் தற்போதைய நிதி நிலையில் இதுதான் சாத்தியம். கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். உங்களை வேலையை விட்டு ஒன்றும் நாங்கள் தூக்கி விடவில்லையே... “ என்றது நிர்வாகம்.

அடுக்கக குடியிருப்பு , ஊர்தி இவற்றிற்கான தவணைகள் ஒரு நொடியில் வண்ணத்து பூச்சியின் மேல் வைத்த பாறாங்கற்களாக மாறியது. சம்பளத்துடன் சமூக அந்தஸ்தும் வசதியான வாழ்க்கைக்கான கனவுகளும் சரிந்து விழுந்த புள்ளியில் வாழ்க்கையின் மீதான ஒரு முற்றுப்புள்ளியும் வந்து இணைந்து கொண்டது.

விலை மதிக்க முடியாத அருட்கொடைகளான மனித உயிரும் வாழ்வும்  தன்மானமும் நம்பிக்கையும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் நுகர்வு வேட்கைக்கும்  நகர மாயையின் தரத்திற்கும் மிக தாழ்வாக வைக்கப்பட்ட கீழ்மை.
  

பண மைய பொருளாதாரத்தின்  தொடர் விளைவான நகர மயமாக்கலானது வாழ்க்கை பற்றிய உண்மையான கோட்பாட்டை புரட்டிப்போட்டு விட்டு அதைத்தான் நேரானது சரியானது என அடித்துச் சொல்கின்றது.

புரண்டவற்றை நமதாக்கிக் கொண்டு காந்தியையும் காந்தியப்பொருளாதார நிபுணர் ஜே,சி.குமரப்பாவையும் நாம் கைவிட்டதன் கைம்மாறை ஒரு இளம் குடும்பத்தின் வாழ்க்கைக்குள் மட்டுமில்லை சமூகத்தின் பெரும் பகுதிக்குள்ளும் செருகி விட்டோம் .

ஜே.சி.குமரப்பா முன் வைக்கும் காந்தியப் பொருளாதாரக் கோட்பாட்டில் மக்கள் , மண் , சூழலியல் , கைத்திறன்தொழில்,  குறைந்த அளவிலான அதே நேரத்தில் தனி மனிதனுக்கும் போதுமான வாழ்வாதாரம் , , அனைவருக்கும் வருவாய் , கிராமங்களில் கால் பதித்து மேலெழும்பும் வளர்ச்சி போன்ற அனைத்து நல அம்சங்களும் கண்ணுங்கருத்துமாய் கணக்கில் கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் தேசத் தந்தை காந்தியின் கண்களின் எதிரிலேயே அவரது பொருளாதார கொள்கைகளை கெடு வாய்ப்பாக நேரு தலைமையிலான இந்திய அரசு முற்றிலுமாக கைவிட்டது.

நாட்டுப்பிரிவினைக்குப்பின் பெரும்பாலான வட இந்திய நகரங்களில் நடந்த இடப்பெயர்வு , அகதிகள் குவியல்... இவற்றினால் எஞ்சி நின்ற மத இன மாச்சரிய கசப்பும் வெறுப்பும் திரும்ப திரும்ப நிகழும் சாத்தியப்பாடுகளைக் கொண்ட ஊழிப்பேரலை மாதிரி காத்துக்கிடந்தது.

மீண்டும் ஒருவரின் கழுத்தை ஒருவர் வெட்டியும் அறுத்தும் நிகழ்த்தப்படும் பேரழிவுகளுக்கான எல்லா வன்செயல் நினைவுகளையும் சோஷலிச பொருளாதாரக் கொள்கை என்ற பெருந்துடைப்பான் மூலம் அழித்து விட்டு சராசரி இந்திய மனதை புத்தாக்கம் செய்ய நேரு முனைந்தார்.

ஆனால் அது கிட்டதட்ட காந்திய பொருளாதாரத்தை முழுமையாக நிராகரிப்பதில்தான் போய் முடிந்தது என்கின்றனர் சமூக பார்வையாளர்கள்.
நேரு உளத் தூய்மையுடன் நடைமுறைப்படுத்திய சோஷலிச பொருளாதாரக்கொள்கைகளும் அதன் பலனாக நடந்த பெரு ஆலை உருவாக்கங்களும் இயந்திர மயமாக்கலும் அதையொட்டிய  பெரு நகரங்களின் பாய்ச்சல்  வளர்ச்சியும்  விவசாயத்தையும் கைத்திறன் தொழில்களையும் , அவற்றையொட்டிய கிராம வளர்ச்சியையும் இரண்டாமிடத்திற்கு தள்ளி விட்டன.

விடுதலை பெற்ற இந்தியாவில் அடுத்தடுத்து வந்த நடுவணரசுகள் சன்னஞ்சன்னமாக விவசாய கிராமீய  வளர்ச்சி என்பதை மேன்மேலும் கீழ் நிலைக்கு தள்ளின. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்திலிருந்துதான் இது அபாயகரமான நிலையை எட்டியது . கிட்டதட்ட கால் நூற்றாண்டுகளை எட்டிபிடித்த நிலைமையில் இன்று அது பா.ஜ.க. வின் ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது.

இன்றைய சிக்கலான பொருளாதார முறைக்கு மாற்றாக ஜே.சி.குமரப்பா முன் வைக்கும் நிலைத்த பொருளாதாரம் என்பது எண் இலக்கங்கள் , தங்கம் ,பணத்தாள்கள், ஆதாயம், இழப்பு போன்றவற்றை மட்டும் சுற்றி சுற்றி வரும் வறட்டுச் சித்தாந்தம் அல்ல.

நேரெதிர் தீவிர நிலைப்பாடுகளுடைய  முதலாளித்துவ , பொதுவுடைமை பொருளாதார சித்தாந்தங்களையும் அவர் பின் தொடரவில்லை.

அவற்றை விமர்சனப்பூர்வமாக நிராகரித்து முன்செல்லும் குமரப்பா பொதுவாக மக்களிடையே புழங்கிக் கொண்டிருக்கும் தலையாய பிரச்சினையாக பண மைய பொருளாதாரத்தையே அடையாளங்காணுகின்றார்.

அதற்கான சான்றுகளை மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகளின் குவியலிலிருந்து கிள்ளி எடுத்துக்காட்டுகின்றார்.

,விவசாயத்தையும் கைத்திறன் தொழில்களையும் கிராமத்தையும் மையமாகக் கொண்ட , பிற வாழ்க்கை துறைகளுடன் நன்கு ஒத்திசைந்து இயங்குகின்ற ,  நமது நாட்டின் நாகரீகத்திலிருந்தும் இங்கு நிலை நிற்கும் அனைத்து ஞான மரபுகளிலிருந்தும் மலரக்கூடிய மலராகவே இந்தியப்பொருளாதாரத்தை அவர் காண்கின்றார்.  

தத்துவவியலையும் மானிட நேயத்தையும் அறத்தையும் தார்மீக மதிப்பீடுகளையும் பிரபஞ்சத்தின் இயங்கு விதிகளையும் அதில் இணைத்ததின் வழியாக அவர் இந்தியாவிற்கான பொருளாதாரக்கொள்கையை இயற்கையின் லயத்தோடு மீண்டும் பிணைத்தார்.  

உயிர்த்துளி மின்னும் இந்தக்கலவையிலிருந்துஇந்தியப்பொருளாதாரகொள்கை தன் ஆன்மாவை சோதித்தறியும் ஒரு இதயத்தையும் சேர்த்தே பெற்றுக் கொண்டது.

 “ பழையதே சிறந்தது “ என்ற முற்கால பொற்கால கொண்டாட்ட வாதத்திற்குள்ளும் தன்னை முடக்கிக் கொண்டு நிகழ்கால பருண்மைகளை கண்மூடித்தனமாக குமரப்பா நிராகரித்து விடவில்லை. இயந்திர மயமாக்கலையும் அவர் முற்றாக மறுக்கவில்லை.

மனித வாழ்க்கையிலுள்ள கடினங்களை எளிதாக்கும் விதத்தில்தான் இயந்திரங்களின் பயன்பாடு இருக்க வேண்டும். அது நம்மை அடிமைப்படுத்தி நமது அன்றாட வாழ்வின் வெளியிலிருந்து சக மனிதர்களின் உழைப்பை வெளியேற்றும் வகையில் மனித நீக்கத்தை செய்து விடக்கூடாது என எச்சரிக்கின்றார்.



பேராசை , போட்டி , ஒரு சிலருக்கான வளர்ச்சி, சமூக கூட்டு உணர்வின்மை கொல்லும் உளச்சோர்வு , தாழ்வு மனப்பான்மை ,  அவ நம்பிக்கை போன்ற எதிர்மறை அம்சங்களையே நடைமுறையில் இருக்கும் பொருளாதாரக்கொள்கை  விளைவித்துள்ளது .

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெளியிலிருந்தோ ஆதிக்க குறியாளர்களின் மூளையிலிருந்தோ வரக்கூடாது . அது தூய்மையாக்கப்பட்ட அகத்திலிருந்து முளை விட்டு  சமூகத்தின் கடைக்காலிலிருந்துதான் எழும்ப வேண்டும். பின்னர் அது கோபுரம் நோக்கி சம அளவில் வளர்ந்து உயர்ந்து செல்ல வேண்டும். .

அப்படி அமைதியாகவும் உறுதியாகவும் நிலை பெறும் வளர்ச்சியில் யாருடைய தனித்தன்மையும் , தளையற்ற தன்மையும் , பறிக்கப்படாது . எல்லா பிரிவு மனிதர்களும் , பிற உயிரினங்களும் , இயற்கையின் எல்லா கூறுகளும் தங்களுக்குரிய  நீதமான பங்கை எவ்வித வன்முறையோ அதீத எத்தனங்களோ இன்றி பெற உறுதியளிக்கப்படும்.

இந்த பொருளாதாரக்கொள்கையை தன்னுடைய அல்லது காந்தியுடைய மூளையிலிருந்து தனித்துவமாக உதித்த புத்தம்புது கொள்கை என எந்த விடத்திலும் ஜே.சி. குமரப்பா உரிமை கொண்டாடவில்லை.

மனித அறிவின் பரப்பு ஒரு எல்லைக்குட்பட்டதுதான் . மனித வாழ்வை விட பெரியதான இயற்கையிலிருந்து தொடங்கி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் கடவுளுடன் கொண்டு இணைப்பதன் வாயிலாக தான் செய்ததெல்லாம் பொருளாதாரத்தை அதன் இயல்பான வடிவில் மீட்டுருவாக்கம் செய்ததுதான் என ஆன்ம பணிதல் செய்கின்றார் குமரப்பா.

குருவி  , மலை , நாணல் செடி , பழம் , ஆறு போன்ற இயற்கையின் பல்வேறு வெளிப்பாடுகள் தங்களுடைய இயல்பான அன்றாடச்செயல்பாடுகளின் வழியாகவே இயற்கையின் மற்ற அனைத்து கூறுகளுடனும் எவ்வித நெருக்குதலும் இல்லாமல் ஒத்திசைகின்றன.  ஒன்று மற்றதை வாழ்ந்து செழிக்க வைக்கின்றன

இயற்கையின் மற்றெல்லா உயிரற்ற உயிருள்ள அசையும் அசையா படைப்புகளுக்கும் இது பொருந்தும்.

இந்த விதியிலிருந்து மனிதனும் அவனது அன்றாட வாழ்வை முன்னகர்த்தி செல்லும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும்  விலகிச் செல்லவும் முடியாது . இதிலிருந்து விதி விலக்கு கோரவும் முடியாது.

மனிதர்கள் வகுக்கும் விதிகளை மனிதர்கள் மீறும்போது சில சமயம் தண்டனை கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் தப்பி விடலாம். ஆனால் இயற்கை விதிகளை மீறும்போது எவ்வளவு தாமதமானாலும் சரியே மீறியவர்களை அது சிறு அதிர்வு தொடங்கி பேரழிவு வரையிலான தண்டனைகளின் வழியாக கணக்கைத் தீர்த்துக் கொள்ளும். யாரும் எங்கும் ஓடித் தப்பிக்க இயலாது.

முரண்களும் மோதல்களும் நீக்கப்பட்ட அன்பும் அமைதியும்  ததும்பும் சூழலில் இயற்கையின் உள் வெளி லயத்துடன் பொருளாதாரத்தை கச்சிதமாக கொண்டு பொருத்தி அதற்கு நிலைத்த தன்மை என்ற அமரத்தன்மையை பெற்றுக் கொடுக்கின்றது இந்த நூல். 

இந்த நூலை மொழியாக்கிய அ.கி. வேங்கட சுப்ரமணியனின் நடை சிறப்பாக உள்ளது. நூலின் எழுத்துரு , பத்தியமைப்பு , வெளி அட்டை வடிவமைப்பு , உள் ஓவியங்கள் , தரமான அச்சுத்தாள் என அனைத்திலும் செய்நேர்த்தி மிளிர்கின்றது.

“ நிலைத்த பொருளாதாரம் “ நூல் வெளியீடு
இயல் வாகை பதிப்பகம்
பனை தற்சார்பு வாழ்வியல் உயிர்ச்சூழல் நடுவம்.
தொடர்புக்கு : 9942118080 , 9486972602
நூலின் விலை : ரூ.200/=


 ````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````

 28/08/2016





No comments:

Post a Comment