ஒவ்வொரு ஊரிலும்,கிராமத்திலும்,நகரத்திலும்
அகன்று விரிந்த தெருக்களையும்,சாலைகளையும்
நிறைப்பது யார்? நேர்த்தியாய்
உடையணிந்து பல்வேறுபணிகளுடனும்,கனவுகளுடனும்,விருப்பங்களுடனும் விரைந்து செல்லும் ஆண்கள்,பெண்கள்,இளையவர்,பெரியவர்கள்,அத்துடன்
சீறிச்செல்லும் ஊர்திகளும்.
கூடவே.....
விளையாட்டுத்திடலில் குதூகலிக்கும் குழந்தைகள் காற்றின் ராகத்திற்கேற்ப பயிர்
தலையசைக்கும் வயல்களில் உழைத்து ஓயும் உழவர் அந்த தெருக்களின் சாலைகளின்
திடல்களின் வயல்வெளிகளின் மேல் கவிழ்ந்திருக்கும் நீல வான வெளியை அதே மனிதர்களின்
பேச்சு,சிரிப்பு,ஊர்திகளின் இரைச்சல்,புகை,களைப்பு போன்றவை ஆக்கிரமிக்கின்றன.
தனது சுடரொளியின் வண்ண
ஜாலங்களால் உதயத்திலும் அந்தியிலும் பூமியின் மீது கதிரவன் வரையும் ஓவியம்தான் ஒரு
நாள் என்பது.
ஆனால் வண்ணமயமான இந்த ஒரு
நாள் என்பது இப்பூமியில் வாழும் அனைவருக்கும் ஒன்று போல மகிழ்ச்சிகரமானதாகவும், நிறைவளிக்கக்கூடியதாகவும் உள்ளதா?
நாம் இக்கட்டுரையின்
தொடக்கத்தில் வர்ணித்த காட்சிகள் மட்டும்தான் பூமியின் மீது விடியும் ஒரு நாளின்
முழுமையான உண்மையான காட்சிகளா?
பரபரப்பாகவும்,சுறுசுறுப்பாகவும்,துடிப்புடனும் சாலைகளிலும்,தெருக்களிலும் சுழன்றியங்கும் ஒரு நாளானது அதே வேகத்துடன்
பூமியின் எல்லாப்பகுதிகளிலும் எல்லா மனிதர்களிடமும் இயங்குவதில்லை.
உயிர்த்துடிப்புடன் இயங்கும் தெருவின் சாலையின் ஓரத்தில் நெஞ்சை நிமிர்த்தி
நிற்கும் மருத்துவமனைகளினுள்ளே சற்று சென்று காணும்போது இந்த உண்மையை உணர முடியும்.
கால நேரமானது
மருத்துவமனைகளில் தனது உயிர்த்துடிப்புமிக்க இயக்கத்தை நிறுத்தி உறைந்து போய்
விடுகின்றது. ஆம்!
விபத்துக்களில் சிக்கி உடல்
உறுப்புக்களை இழந்தவர்கள் விபத்தினாலும்,
நோயினாலும் உடல் தோற்றம் சிதைந்தவர்கள் கொடிய உயிர் கொல்லி நோயின் வாயில்
சிக்கியவர்கள் நோயை விட கூடுதலான தனியார் ஆஸ்பத்திரிகளின் கொள்ளை
மருத்துவக்கட்டணங்களை கட்ட வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்பவர்கள்
போன்றவர்களுக்கு ஒரு நொடி கழிவதென்பது ஒரு யுகம் கழிவது போல் இருக்கும். மருத்துவமனைகளில்
மட்டுமல்ல....
நான்கு பெரும்
மதில்களுக்குள் அநியாயமாக முடமாக்கப்பட்ட சிறை வாசிகள் கணவனை இழந்த, கைவிடப்பட்ட கைம்பெண்கள் பருவ வயதை எட்டியும் திருமணம் என்ற
வாழ்வின் வசந்தம் இன்னும் வராத முதிர்கன்னிகள் வன்புணர்ச்சி (கற்பழிப்பு)
செய்யப்பட்ட மகளிர் உடலும் மனதும் ஓய்வைத்தேடும் தருணத்தில் பராமரிப்பின்றி
கைவிடப்பட்ட முதியவர்கள் பாசம் அறியா அனாதைச் சிறுவர்கள் மலரும்முன்னே வாழ்வு
களவாடப்பட்ட குழந்தைத்தொழிலாளர்கள் நகர வளர்ச்சி என்ற பெயரில் இருப்பிடமில்லாமல்
வீதியில் எறியப்பட்ட மாந்தர்கள் வாங்கிய கடனுக்கான வட்டியை கழிக்க ஆண்டாண்டு
காலமாக அற்ப கூலியில் கசக்கப்படும் கொத்தடிமைத்தொழிலாளர்கள் விவசாயம் பொய்த்ததால்
வாங்கிய பயிர்க்கடனை அடைக்க வழி தெரியாமல் மானம் காக்க பூச்சி மருந்தை குடிக்கும்
உழவர்கள்
கனிம வள அகழ்வு , அணு உலை,
வேதியியல் ஆலை உற்பத்தி என்ற பெயரில் பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து
பெயர்த்தெறியப்பட்ட ஆதி வாசிகள்,பழங்குடிகள்
அல்லது இவற்றின் இயக்கத்தால் ஏற்பட்ட நச்சு மிக்க பின் விளைவுகளினால் வாழ்வு
உருக்குலைக்கப்பட்ட ஊர்,
நகர மக்கள் என வாழ்வு மறுக்கப்பட்ட விளிம்பு நிலை மனிதர்கள் அனைவரும் காலம்
என்ற சில்லிடும் பனிக்கட்டிக்குள் சிக்கிய ஈ போல உறைந்து போய் விடுகின்றனர்.
நாம் பிறப்பதும் இறப்பதும்
ஒரே பூமியில்தான் என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்க்கும்போது நாம் வாழும்
காலத்தில் நமக்குள்ளேயும் வெளியேயும் மிகப்பெரிய அநீதிகளுடன் எத்தனை உலகங்கள் !!!
இத்தகைய முரண்பாடுகளுடைய
உலகங்களை உருவாக்குபவர்களை நாம் எளிதாக அடையாளங்காட்டிட முடியும்.
ஆனால் இந்த அநீதமான பல
முரண்பாடுடைய உலகங்கள் நீடிப்பதற்கான அடிப்படை எது தெரியுமா?
தனது வாழ்வானது அமைதியும்
பாதுகாப்பும், நிம்மதியும்
நிறைந்த ஒன்றாக அமைந்தால் போதும் வேறு எவரைப்பற்றியும் எதைப்பற்றியும் எனக்கு
கவலையில்லை என வாழும் ஒரு மனிதனின் எண்ணம்தான்.
சக மனிதனின் துயரத்தை, வலியை,
இழப்பை, ஏக்கத்தை
தேவையை உணராத அல்லது உணர மறுக்கின்ற ஒவ்வொரு மனிதனும் இந்த எதிரும் புதிருமான
அநீதமான முரண்பாடுகளுடைய உலகங்களின் அத்திவாரக்கல் என்றால் அது மிகையில்லை.
No comments:
Post a Comment