அந்தர
வெளியில் தொங்கும் வாழ்க்கை எனும் ஆதி அந்தமில்லாத நூல் ஏணியின் இறுதிப்படிகளுக்கு
அப்பால் கால் வைத்து முடிவிலிக்குள் கடந்து சென்றிருக்கின்றார். எல்லா இறப்புகளும்
துயரமானதே. அதிலும் ஏ.எல்.எஸ். மாமா போன்ற அறிந்த மனிதர்களின் இறப்பின் வழியாக நமது
நினைவின் மெல்லிய அடுக்குகளுக்குள் ஒரு பாறாங்கல்லின் கனம் வந்து உட்கார்ந்து
கொள்கின்றது.
+2 முடித்த
பிறகு பிழைப்பு தேடி முதன் முதலாக சென்னை பயணித்தேன். ஒரு சில இடங்களில் முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை.
சரியாக அமையவில்லை.
சவுகார்பேட்டையில்
உள்ள நூல்கடை ஒன்றில் ஒருவரின் பரிந்துரை மூலமாக நான் வேலைக்கு சேர்ந்தேன்.
பரிந்துரைத்த
அந்த முகம் எனக்குள் முழுமையாக மனதிற்குள் இறங்குகின்றது. அதுதான் ஏ.எல்.எஸ்.
மாமா. அன்னார்தான் எனக்கு வேலை வாங்கி தந்தார் . அதில் சில காலந்தான் நீடித்தேன்.
அது தனி கதை. அப்போது அவர்கள் சென்னையில் இருந்த காலகட்டம். அதிலிருந்து கிட்டதட்ட
கொஞ்ச வருடங்கள் அவர்களைப் பார்த்தால் மனதிற்குள் ஒரு வகையான விலகல் உணர்வு
ஏற்படும்.
அப்போதைய வயதின் எல்லையில்
இருந்து எழுந்த உணர்வு அது.
வாழ்க்கையின்
பல உருள்புரள்கள் நடந்த பிறகு அந்த விலகல் உணர்வுகள் கரைந்து ஏ.எல்.எஸ். மாமா
அவர்களை பார்க்கும்போதெல்லாம் நமதூரைச் சார்ந்த ஒரு மூத்த மனிதர் என்பதற்கு மேல்
எதுவும் தோன்றாது.
அன்னாருடனான
எனது முதல் காட்சிக்குப்பிறகு கிட்டதட்ட 28 வருடங்கள் கடந்து விட்டது. நமது இணைய
தளத்தில் நானும் அவரும் சக பங்களிப்பாளர்கள் என்ற வகையில்தான் கடந்த 4 ஆண்டுகளாக
அன்னாரோடு நெருக்கமாக பழகவும் அவதானிக்கவும் வாய்ப்பு கிட்டியது.
தேய்க்க
தேய்க்க துலங்கும் மாணிக்கக் கற்கள் போல அன்னாருடைய ஆளுமையின் ஒவ்வொரு பரிமாணமாக
விளங்கத் தொடங்கியது.
ஏ.எல்.எஸ்.
.மாமா அவர்கள் சென்னை, ஈ.வே.ரா.பெரியார்
சாலையில் பெரியமேடு பகுதியில் அமைந்துள்ள அரசு கவின்கலைக்கல்லூரியின் 1971
வருடத்திய அணியைச் சார்ந்த ஓவிய மாணவராவார். நான் அறிந்தவரை இக்கல்லூரியின்
நமதூரைச்சார்ந்த முதல் , ஒரே ஓவிய மாணவராக ஏ.எல்.எஸ். மாமாதான் இருப்பார்கள் என நினைக்கின்றேன்.
கடந்த வருடம்
அன்னார் நடத்திய கோடை கால ஓவிய வகுப்பில்
எனது இளைய மகனை சேர்த்து விட்டேன். அப்போது அன்னாரின் பயிற்சியின் மூலமாக
அவனுடைய வரை திறனில் படிந்திருந்த மேல்
மண் விலகியது. அவன் கொஞ்ச நாட்கள் இருந்து
விட்டு இங்கேயும் வீட்டுப்பாடங்கள் செய்ய வேண்டி இருக்கின்றது என விலகி விட்டான்.
அந்த பயிற்சி வகுப்பை அவன் நிறைவுபடுத்தாததில் எனக்கு மனக்குறைதான். என்ன செய்ய ?
குழந்தைகளுக்குள் எதையும் திணிக்க முடியாதே..
தனது ஓவியங்களில்
“ காயல் இப்னு அப்பாஸ் “ என்ற பெயரைக் குறிப்பிடுவதன்
வழியாக தன் தந்தையின் கைவிரல்களை பிடித்து நடக்கும் முதிய குழந்தையாகவே தன்னை
வாழ்நாள் முழுவதும் அன்னார் உணர்ந்திருக்கின்றார். மானுடம் என்பதே முன்னோர்
பின்னோர் என்ற கண்ணிகளால் இணைக்கப்பட்ட ஒரு மகா சங்கிலிதானே .
தனது பெயரின்
முன்னொட்டை எப்போதும் துலங்கச் செய்வதின் வழியாக தனக்கு முந்திய கண்ணியுடனான தனது
பிணைப்பை எப்போதும் உறுதிப்படுத்திக் கொண்டே இருந்திருக்கின்றார் ஏ.எல்.எஸ்.மாமா.
-------------------------------------------------------------------------
“ ஒரு இடை வேளையில் நண்பர் அமீர் அப்பாஸ் என்னை பேரா.தொ.பரம சிவம் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். சொந்த ஊர் காயல்பட்டினம் என்று சொன்னவுடன்
1920 களில் நமது ஊரில் வெளியான கமருஸ்ஸமான் என்ற அரபு மாதாந்திர தமிழ் பத்திரிக்கையின் படிகள் கிடைக்குமா ? எனக் கேட்டார். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை . வெட்கமாக இருந்தது .விசாரித்து சொல்கின்றேன் என சமாளித்து விட்டேன்.
பின்னர் ALS மாமா அவர்களிடம் விசாரித்ததில் தன்னிடம் உள்ள கமருஸ்ஸமான் பத்திரிக்கையின் 1926 ஆண்டைய இதழின் ஒளிப்படியை என்னிடம் தந்தார். அதை இனிமேல்தான் பேராசிரியரிடம் சேர்க்க வேண்டும்.
பேரா. பரம சிவம் அவர்களையும் ALS மாமா அவர்களையும் நினைக்கும்போது பெருமையாக இருந்தது. “….{ எழுத்து மேடைக் கட்டுரையான மலைப்பாடகன் .... காண்க !ttp://kayalpatnam.com/columns.asp?id=95 }
1920 களில் நமது ஊரில் வெளியான கமருஸ்ஸமான் என்ற அரபு மாதாந்திர தமிழ் பத்திரிக்கையின் படிகள் கிடைக்குமா ? எனக் கேட்டார். எனக்கு அதைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை . வெட்கமாக இருந்தது .விசாரித்து சொல்கின்றேன் என சமாளித்து விட்டேன்.
பின்னர் ALS மாமா அவர்களிடம் விசாரித்ததில் தன்னிடம் உள்ள கமருஸ்ஸமான் பத்திரிக்கையின் 1926 ஆண்டைய இதழின் ஒளிப்படியை என்னிடம் தந்தார். அதை இனிமேல்தான் பேராசிரியரிடம் சேர்க்க வேண்டும்.
பேரா. பரம சிவம் அவர்களையும் ALS மாமா அவர்களையும் நினைக்கும்போது பெருமையாக இருந்தது. “….{ எழுத்து மேடைக் கட்டுரையான மலைப்பாடகன் .... காண்க !ttp://kayalpatnam.com/columns.asp?id=95 }
மேற்கண்ட
நிகழ்விற்குப்பிறகு ஏற்பட்ட உள்ளுணர்வின் ஒரு வலுவான தூண்டுதலில் இரண்டரை
வருடங்களுக்கு முன் நானும் நண்பர்கள் ஹிஜாஸ் மைந்தன் ரஃபீக்கும் , நூஹ் காக்காவும்
ஏ.எல்.எஸ்.மாமாவின் வீட்டிற்கு சென்று அன்னாரின் களஞ்சியத்தை பார்த்து விடுவது என
தீர்மானித்தோம்.
அது ஒரு மழைக்
காலம். காலை 10:00 மணிக்கு வருகின்றோம் என மாமாவிடம் சொல்லியிருந்தோம். அன்று
ஏற்பட்ட ஏதோ ஒரு அலுவலினால் அன்னாரின் வீட்டிற்கு செல்ல சுணக்கமாகி கிட்டதட்ட
லுஹர் வேளையில்தான் சென்றோம்.
எங்களின்
மூன்று மணி நேர தாமதத்தை அவருக்கே சொந்தமான பூ முக சிரிப்புடன்தான் எதிர் கொண்டார்.
அவர்
வீட்டினுள் நுழைந்தவுடன் உறக்க மின் விளக்குகள் , மண்ணெண்ணை மாட விளக்கு , பிரிட்டனில் ஆயத்தமான மின் குமிழ்கள்
, வெளித் தெரியும் பட்டை அடி மின் கம்பிகள் என முப்பத்தைந்து வருடங்களுக்குள்ளே ஒரே ஒரு
நொடியில் மீள நடந்த மயக்க மன நிலை உண்டானது .1980 களில் இருந்த காயல்பட்டின வீடமைப்பு .
அவர் வீட்டின்
உணவு மேசையில் விதம் விதமான சிற்றுண்டி வகைகள் செய்து பரத்தியிருந்தார்கள்
அன்னாரின் துணைவியார். . ஆறிய நிலையிலும் ரம்ப இலை கலந்த பிரியாணிக் கஞ்சியானது
நாவின் வழியாக மூளைக் மடல்களுக்குள் சென்று ஒட்டிக் கொண்டது. இவற்றை அடித்து வயிற்றுக்குள்
வீசிய பிறகு மதிய உணவிற்கு விடுமுறை சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அன்னாரின்
வீட்டு மாடிக்குள் காயலின் 100 வருட வரலாற்றுக் கிடங்கு ஒன்று இருந்தது என்றே
சொல்ல வேண்டும்.
நமதூரிலிருந்து
வெளியான முதல் அச்சுப்படிகள் , வரலாற்று நூல்கள் , நமதூர் வாழ்வியல்
பண்பாட்டசைவுகளின் அரிய ஒளிப்படங்கள் ,
அந்த ஒளிப்படங்களில் காலத்தின் சட்டங்களில் உறைந்திருக்கும் முகங்கள் , மகிழுந்து
, சட்டை கை , துருக்கி தொப்பி என விதம் விதமான பதிவுகள்.
ஏ.எல்.எஸ்.
மாமா வீட்டு மாடியின் மின்சாரப்பலகத்தின் மேல் பக்கம் பறவையின் உதிர்ந்த இறகுகள்
இரண்டை அழகாக ஒட்டி வைத்திருந்தார். வரலாறு என்பதே நேற்றுகளின் உதிர்ந்த இறகுகள்தானே.
சேகரிப்பில்
இருந்த நிறைய ஆவணங்களை குறிப்புக்காக
தேவைக்காக என வாங்கிச் சென்றவர்கள் திருப்பித்தருவதே இல்லை என வருந்தினார்.
வரலாற்றை
பாதுகாக்க முனையாத மனதிலிருந்துதான் வரலாற்றை அழிக்கும் உந்துதலும் அனிச்சையாகவே
உதிக்கும் போலும்.
தாயிம்பள்ளி
ஜமாஅத்தார்கள் , கருத்தம்பி மரைக்காயர் தெரு வாசிகள் , ஊர்வாசிகள் ஏ.எல்.எஸ்..
மாமாவின் களஞ்சியங்களை சற்றும் தாமதிக்காமல் உரிய இழப்பீட்டு தொகை கொடுத்து பொதுச்
சொத்தாக கையகப்படுத்த வேண்டும். அப்படி கையகப்படுத்தப்பட்டவற்றை மின்னணு முறையில்
பாதுகாக்க வேண்டும்.
இதையே அன்னார்
ஒரு இறுதி விருப்பம் போல எழுத்து மேடையில் எழுதிய ஒரு கட்டுரையில் போன வருடம்
ஜனவரி மாதம் தெரிவித்திருந்தார்கள். { வாழ்ந்து மறைந்த நம்மவர்கள் தேடிய நூல்களைப் பாதுகாத்து வைப்பது யார் கடமை? சிந்திப்போம் வாரீர்!! http://kayalpatnam.com/columns.asp?id=160 }
இதைச்
செய்யவில்லையெனில் வரலாற்றையும் நினைவுகளையும் வெறும் குப்பை மலையாக பார்த்த குற்றத்தை
நமது பிள்ளைகள் நமக்கு மேல்
சூட்டுவார்கள்.
காயல்பட்டினம்
இணைய தளத்தில் அன்னார் எழுதிய பல கட்டுரைகளில் ஒரு பத்தி என் மனதை மிகவும் பாதித்தது:
அதாவது
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்கின் காலஞ்சென்ற தலைவர். அ.க.அப்துஸ்ஸமது ஸாஹிப்
அவர்கள் இளைஞராக இருந்த போது நமதூருக்கு கட்சி பரப்புரைக்காக வந்திருந்த சமயத்தில்
நடந்த நெகிழ்வான நிகழ்வொன்றை பதிந்திருந்த விதம்தான்.
-----------------------------------------------------------------------
அன்னாரின்
மீது எனக்குள்ள விமர்சனம் என்னவென்றால் அவர்க்ளின் எழுத்து பல பத்தாண்டுகளுக்கு
முந்திய நடை. அதை அன்னார் காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்ளவில்லை. அடுத்ததாக
நுண்கலையான ஓவியக்கலையில் அன்னார் மென்மேலும் வளர்ந்திருக்க வேண்டியவர். அதிலும்
கூட தன்னை ஒரு சதுர மூலைக்குள் சுருக்கிக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஓடிச்செழித்திருக்க வேண்டிய பெரு நதியொன்று தன்னை குளத்திற்குள் ஒளித்துக்கொண்டது.
மணவாளக்குறிச்சி
மணல் ஆலையினால் ஏற்படும் புற்று நோய் பற்றிய ஆவணப்படமொன்றை நகரில் திரையிட்டோம்.
மிகவும் உருக்கமான படம். நிகழ்ச்சியின் நிறைவில் என் கைகளைப் பற்றிக் கொண்டு இது
போன்ற நிகழ்வுகளுக்கு எனது உடல் உழைப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என வேண்டுகோள்
விடுத்தார். இந்த நிகழ்விற்குப்பிறகு அவரை ஒருமுறையோ என்னவோதான் சந்திக்க
கிடைத்தது.
ஏ.எல்.எஸ்.
மாமா ஒரு மகத்தான கலைஞன். மர்ஹும்களான பாடகர் காயல் ஏ.ஆர்.ஷேக் முஹம்மது ,
பரம்பரைக்கவி காயல் பிறைக்கொடியான் எஸ்.எம்.பி.மஹ்முது ஹுஸைன் வரிசையில் நம்முடைய
சமகாலத்தில் இன்னொரு கலைஞனை இழந்திருக்கின்றோம்.
முன்னவர்
இரண்டு பேரையும் நாம் உரிய அளவில் அங்கீகரிக்கத் தவறி விட்டோம். இவர்கள் என்ன
அங்கீகாரமளிப்பது ? என ரோஷம் கொப்பளிக்க காலமே அவருக்குரியதை தன்னிச்சையாகவே ஏ.எல்.எஸ்.
மாமாவின் கைகளில் கொடுத்தது என்றுதான்
சொல்வேன். மனிதர் வாழ்ந்து
நிறைந்திருக்கின்றார்.
அன்னாருக்கு
குழந்தைப்பேறில்லை என்ற பெரிய இழப்பின் வழியாக ஊரின் குழந்தைகள் அனைவரும் அவரை
தங்களின் தாய் மாமன் போல உணர்ந்த அந்த அளப்பரிய கொடையை அன்னாருக்கு இறைவன்
வழங்கியிருந்தான்.
குழந்தைகளை நேசிக்கும் எல்லாருக்கும் குழந்தை மனது
வழங்கப்படுவதில்லை. எண்ணத்திலும் சொல்லிலும் செயலிலும் நடையிலும் உடையிலும்
குழந்தையின் பீறிடலும் துள்ளலும் கலந்த மனிதர்.
தனது வாழ்வில்
கிட்டாமல் போன விஷயங்களைப்பற்றி அன்னார் எப்போதும் குறைப்பட்டுக்கொண்டதே இல்லை.
இளைஞர்களின் கிண்டலுக்கு சளைக்காமல் ஈடு கொடுத்த உற்சாக மனிதர்.
எழுத்து மேடை
கட்டுரைக்காக குறிப்பு நூல் வாங்க அவர் வீட்டிற்கு போகலாம் என நினைத்திருந்த போது
அவரே என் வீட்டைத் தேடி வந்து விட்டார். அன்று ஸுன்னத்தான நோன்பும்
வைத்திருந்தார். ஜமாஅத் தொழுகைகளில் மிகவும் பேணுதலானவர்
உடனே அதை பதிவாக்குவதற்காக
ஒரு ஒளிப்படம் எடுக்கப்பட்டது. . அப்போது என் கணினியின் விசைப்பலகையில் அவர் கை
வைத்திருந்தார். அந்த விசைப்பலகையின் மீதுதான் அவரின் நினைவுகளை தட்டிக்
கொண்டிருக்கின்றேன்.
```````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````````
No comments:
Post a Comment