அந்த வட்ஸப் செய்தியை படித்த பிறகு ஜமால் தொரய்க்கு தூக்கம் பிடிக்கவில்லை. தனது துருவேறிய சைக்கிள் கரகரக்க ஊர் விட்டு ஊர் போய் வளர்த்த வட்ட தொந்தியை தடவியபடியே எப்படா சுபுஹாகும்? என படுத்துக் கிடந்தார்.
நேரம் வெளுத்தவுடன் ஓலைக்கடையில் போய் நச்சு பக்கோடாவில் இரண்டை பிய்த்து தேயிலையுடன் உள்ளிறக்கி விட்டு வீடேகி துரிதகதியில் குளித்து முழுகினார். அலமாரியை திறந்தார். எதையோ எடுத்தார் எழுதினார். சட்டையை போட்டுக் கொண்டு வலமும் இடமும் சூத்தசைய சைக்கிளை மிதித்து கிள்ம்பினார். என்றுமில்லாத மாப்பிளையின் அவசர கோலத்தை பார்த்து ஓப்பிலி வாயை பிளந்தவாறே நின்றாள்.
9:50மணிக்கு கனரா பேங்கின் மெயின் கேட்டை திறந்தவுடன் , திறந்த ஊழியனை இடித்து நெரித்துக் கொண்டு உள்ளே பாய்ந்தார். ஜமால் தொர. அவரின் வடிவத்தை பார்த்த ஆஃபீஸ் பாய் தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொண்டான்.
சேமிப்பு வங்கி என்ற நீல நிற தகர பலகைக்கு எதிரே போட்டிருந்த பெஞ்சில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார். அரை மணி நேரம் கழித்துதான் கிளெர்க் வந்தார்.
பணமெடுக்கும் ஸ்லிப்பை எடுத்து 3,300/= என எழுதி கிளெர்க்கின் மூக்கிற்கு ஒரு அங்குலம் இடைவெளியில் நேரே படபடப்புடன் நீட்டினார். பாஸ்புக்கையும் பணமெடுக்கும் விண்ணப்பத்தையும் ஒருசேர வெடுக்கென வாங்கிய கிளெர்க் கணினியின் விசைப்பலகையை தட்டிப்பார்த்து விட்டு முழு தொகையையும் எடுக்க இயலாது ரூ.500ஆவது மிச்சமிருக்க வேண்டும் எனவும் கூறினார்.
தன் உருண்டைக்கண்களால் கிளெர்க்கை முறைத்து பார்த்த ஜமால் தொரயின் மனதிற்குள் கணக்கு ஓடியது ஐந்நூறுக்கு, முப்பத்து மூன்று கிலோ பப்பாளிப்பழம் என திகைப்புடன்மின்னியது.
ஏன் அந்த 50 ரூவாயயும் எடுத்து அவன் வாயிலப்போடுறதுக்கா என்றவரிடம் கிளெர்க், நேத்து வரய்க்கும் நல்லாத்தானெ இருந்தீங்க காக்கா , இன்னிக்கு என்னாச்சி என சிரிப்பும் வியப்புமாக கேட்டார்.
தனது செல்லை உருவியெடுத்து வட்ஸப்பில் வந்த செய்தியை கிளெர்க்கிடம் நீட்டினார் ஜமால் தொர.
All
banks incurring huge losses என மின்னியது செல்திரை
பேசாமல் மீதமுள்ள 500 ரூபாயையும் ஜமால் தொர பக்கம் நீட்டிய கிளெர்க் அவரின் பாஸ் புக்கில் சிவப்பு மையால் கோடிட்டுக் கொண்டிருந்தார்.
ரூபாய் நோட்டுக்களை கஞ்சித்தாளில் சுற்றி இடுப்பு பெல்ட்டுக்குள் பத்திரப்படுத்தியவாறே ஜன் தன்னும் வாயில மண்ணும் என முணுமுணுத்தவாறே பேங்கை விட்டு வெளியேறினார் ஜமால் தொர.
பேசாமல் தான் பப்பாளி விற்கும் காய்கறிக்கடைக்கார இன்னாசி முத்துவிடமே கொடுத்து வைக்கலாமா? அல்லது ஓப்பிலியிடம் கொடுத்து வைக்கலாமா? என்ற குழப்பத்துடன் கக்கத்தை சொறிந்தவாறே சைக்கிளை உருட்டினார் ஜமால் தொர. அதற்கிடையில் வெயில் ஏறி மண்டையை பிளந்து கொண்டிருந்தது.
ஜன்தன்
– தலைமையமைச்சர் நரேந்திர மோதி அறிவித்த சுழிய
இருப்பு வங்கி கணக்கு
No comments:
Post a Comment