Saturday 1 February 2020

நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் --- ஓட்டமாவடி அறபாத்தின் நூல்


போர்ப்படலம் நீங்கிய ஒரு தேசத்து மைந்தனின் வாழ்க்கை கணக்கு. நாட்காட்டிகள் அவற்றை பழங்கணக்காக மாற்றிய போதிலும் சொட்டிய உயிர்த்துளிகளினால் நனைந்திருக்கும்  நினைவுகளுக்கு அவை எப்போதும் புத்தன் கணக்குதான்.



காடு, ஸியாரம், இலுப்பைப்பூ கொழுக்கட்டை, புகையிரத நிலையம், பாவா என்ற ஃபக்கீர்மார் என மலர்ந்து களித்த வாழ்க்கை எப்படி புலி, இலங்கை, இந்திய ஆயுத படைகளின் கோர பற்களில் சிக்கி அரைபட்டு போகும் இறைச்சி துண்டைப்போல சீரழிகின்றது என்பதை அப்போர் சுழலில் அலைக்கழிக்கப்பட்டவரே எழுதிச்செல்கின்றார்.


இலங்கை ராணுவம் புலிகளுக்கிடையேயான மோதலில் சிக்கிய மட்டகளப்பு மாவட்ட முஸ்லிம்கள் போட்டது போட்டபடியே ஊரை விட்டு ஓடி வரும்போது “ ஒங்களுக்கு தேத்தண்ணி தாரதுக்கு ஒரு சுரங்கச் சீனியும் இல்லயே தங்கம்காள் “ என்ற களுவாஞ்சிக்குடியின் வயோதிகத் தமிழ்த்தாயின் கசிந்த குரலில் மொத்த விவரணையும் தகிக்கின்றது.


“ அப்ப நீங்க ஒற்றர் இல்ல. எல்லாரும் முஸ்லிம் ஆக்கள் என்பதை நாங்க  எப்புடி நம்புற ? அப்ப சுன்னத்து வச்சிரிக்கா எண்டு பார்க்க வேணும் “ என்றவாறே சுன்னத்து பரிசோதனை நடத்தி முடித்த தமிழ் ஆயுதப் படையினன் (பக்கம்:74 )


…… தமிழீழம் கேட்கவில்லை, இராணுவத்தை தாக்கவில்லை, , சிங்களர்களை கிழங்கு சீவுவது போல அரிந்து தள்ளவுமில்லை. அரச வளங்களை குண்டு வைத்து தகர்க்கவில்லை, ஆட்கடத்தி மௌன மணற்பரப்பில் கொன்று புதைக்கவுமில்லை. கப்பம் கேட்கவில்லை . வணக்கஸ்தலங்களுக்குள் குண்டெறிந்து கடவுளரை அச்சப்படுத்தவில்லை. வலுக்கட்டாயமாக யாரையும் பிடித்துப்போய் பயிற்சியளித்து போருக்கு அனுப்பவில்லை. என்றாலும் முஸ்லிம்களான எங்களையும் சிங்கள ராணுவம் பயங்கரவாதிகளாகத்தான் பார்த்தது ……. ( பக்கம்: 112 )
--------------


போர் என்றால் அது நூறு சதவீதம் போர்தான். அதன் மேல் புனிதம் மதம் மொழி தேசபக்தி என எப்போர்வை போர்த்தி வந்தாலும் சரியே. எரிதழலுக்கு  நாம் பனிக்கட்டி எனப் பெயரிட்டு விட்டால் அது குளிர்ந்து விடுமா?
உள் நாட்டுப்போரை நோக்கி நான்கு கால் பாய்ச்சலில் தாய் நிலத்தை இழுத்துக் கொண்டு ஓடும் ஹிந்துத்வ ஃபாஸிஸ்டுகளின் கொடுங்காலத்தில் அகப்பட்டுக் கொண்ட இந்திய திருநாட்டுக்கு  ஓட்டமாவடி அறபாத்தின் “ நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் “ என்பது ஒரு முன்னோட்ட காட்சி.


அண்டை மண்ணில் போர்  நிகழ்த்தி முடித்த அழிவின் இந்த நேரடி விவரிப்பை வாசிக்கும் கடப்பாடு இந்தியர்களாகிய தமிழர்களாகிய நமக்கு  மட்டுமில்லை நம் மீதும் இந்த மண், நீர், விண் என அனைத்தின் மீதும் போர் நெருப்பை மூட்டும் ஃபாஸிஸ்ட் உள்ளிட்ட எந்தவொரு ஆக்கிரமிப்பாளனும் இதை கற்றேயாக வேண்டும்.


ஏனெனில் தனக்குள் தள்ளப்பட்டவனை மட்டுமல்ல, தன்னை மூட்டியவனையும் போரானது முடிவில் இழுத்து கரித்து உண்ட பின்னரே ஓயும்.
ஆம். போர் என்பது கலப்படமற்ற நெருப்பு.
-------------------------------------

நூல்: நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்

ஆசிரியர்: ஓட்டமாவடி அறபாத்

வெளியீடு: காலச்சுவடு





No comments:

Post a Comment